டி20 உலகக் கோப்பை மற்றும் ஆசிய கோப்பை டி20 தொடர்களுக்கான அணியில் இர்பான் பதான், அமித் மிஸ்ரா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கியிருக்கலாம்.
ஆசியக் கோப்பை டி20 மற்றும் உலகக் கோப்பை டி20 போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது, எதிர்பார்த்தது போல்தான் அணித் தேர்வும் நடைபெற்றுள்ளது. சாத்தியமாகக் கூடிய சிறந்த அணியைத்தான் தேர்வு செய்துள்ளனர் என்றாலும் அமித் மிஸ்ரா, இர்பான் பத்தானுக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கியிருக்கலாம் என்றே தோன்றுகிறது.
ஆனால், இரண்டு வீரர்கள் தேர்வு கேள்விக்குரியதாக உள்ளது. ஒன்று மொகமது ஷமி. அணித்தேர்வு செய்யும் நாளான இன்று கூட அவரது உடல் தகுதி நிச்சயமானதாக இல்லை. "30 நாட்களில் தெரியும் ஷமியின் நிலை என்னவென்று, அவர் குணமடைந்து பந்துவீசத் தொடங்கியுள்ளார் இப்போதைக்கு இவ்வளவுதான் எங்களுக்குத் தெரியும்” என்று தேர்வுக்குழு தலைவர் சந்தீப் பாட்டீல் தெரிவித்துள்ளார்.
அணித்தேர்வுக் குழு தலைவருக்கே ஒரு வீரரின் உடல் நிலை என்னவென்பது ‘இவ்வளவுதான் தெரியும்’ என்றால் அவரை ஏன் தேர்வு செய்ய வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. ஏதோ மாற்று வீரர்களே இல்லை என்பது போலான ஒரு தோற்றத்தை இது அளிக்கிறது. ஒருநாள் கிரிக்கெட் என்றால் சரி அனுபவம் முக்கியம், ஆனால் டி20 தொடரில் ஏகப்பட்ட வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்கின்றனர். ஏன் இடது கை வேகப்பந்து வீச்சாளர் பரீந்தர் ஷரணுக்கே ஒரு வாய்ப்பு அளித்திருக்கலாமே?
ஆஸ்திரேலியாவுக்கான தொடருக்கு முக்கியமாக இருந்த ஷரணின் பெயர் இந்தியாவில் நடைபெறும் தொடருக்கு அல்லது கிட்டத்தட்ட இந்திய நிலைமைகள் உள்ள வங்கதேச ஆசிய டி20 தொடருக்கு தேர்வு செய்யப்படாமல் விடப்பட்டதன் தர்க்கம் என்னவென்பது நமக்குப் புரியவில்லை.
மேலும் சமீபமாக உள்நாட்டு தொடர்களில் இர்பான் பதான் அருமையாக ஆடி வருகிறார். சமீபத்தில் முடிந்த சையத் முஷ்டாக் அலி டிராபி தொடரில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றியவர் இர்பான் பதான் என்பது யாருக்குத் தெரியாவிட்டாலும், ஒரு அணித்தேர்வுக்குழு தலைவருக்கோ, அல்லது வழிநடத்தும் கேப்டனுக்கோ தெரியாமல் இருப்பது ஆச்சரியம்தான். 10 போட்டிகளில் இர்பான் பத்தான் 17 விக்கெட்டுகளை 15.76 என்ற சராசரியில் கைப்பற்றியுள்ளார். பேட்டிங்கில் 200 ரன்கள் எடுத்துள்ளார்.
ஷமிக்கு பதிலாக நிச்சயம் இர்பான் பதானே டி20 வடிவத்தில் சிறந்த தெரிவு என்பதில் ஐயமில்லை. ஷமியைத் தேர்வு செய்ததன் மூலம் அணித்தேர்வுக்கான தகுதிகள் என்னன்ன என்ற கேள்வி எழுகிறது. காயமடைந்து பந்து வீசத் தொடங்கியிருப்பதை ஒரு தகுதியாகக் கொள்ள முடியுமா? இன்னும் சொல்லப்போனால் முனாப் படேலே சிறந்த தெரிவுதான், அவரும் டி20 போட்டிகளில் சிக்கனமாகவே வீசி வருகிறார். ஆல்ரவுண்டர் தேவை என்றால் இர்பான் பத்தானைத்தான் தேர்வு செய்திருக்கலாம். ஆஷிஷ் நெஹ்ரா மீது வைக்கும் நம்பிக்கையில் கொஞ்சம் இர்பான் பதான் மீதும் வைத்து ஒரு வாய்ப்பு வழங்கியிருக்கலாம் என்றே நினைக்கத் தோன்றுகிறது.
அமித் மிஸ்ராவுக்கு வாய்ப்பு வழங்கியிருக்கலாம்:
கடந்த டி20 கிரிக்கெட் உலகக்கோப்பையில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இரண்டாவது இந்திய பவுலராவார் அமித் மிஸ்ரா. அதன் பிறகும் கூட அவர் டெஸ்ட் போட்டிகளுக்குத் திரும்பிய போதும் நன்றாக வீசிவருகிறார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஜடேஜா நன்றாக வீசியதால் ஒருநாள் டி20 அணியில் மீண்டு நுழைய முடிகிறது என்றால், அதே டெஸ்ட் போட்டிகளிலும் உள்நாட்டு கிரிக்கெட்டிலும் நன்றாக வீசிவரும் அமித் மிஸ்ராவுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதேன்?
நிச்சயம் ஹர்பஜன் சிங்கிற்குப் பதிலாக அமித் மிஸ்ராவுக்குத்தான் வாய்ப்பு அளித்திருக்க வேண்டும். மேலும் பவன் நேகி எதற்கு என்று புரியவில்லை. சென்னை சூப்பர் கிங்சில் விளையாடியவர் என்பதைத் தவிர அவரைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணங்கள் எதுவும் தெரியவில்லை.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒயிட்வாஷ் வெற்றியில் அஸ்வின், ஜடேஜா அருமையாக வீசினர். துணைக்கண்ட பிட்ச்களில் இவர்களே போதும், வேண்டுமானால் சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங், விராட் கோலி, ரோஹித் சர்மா என்று அனைவரும் வீசப்போகிறார்கள், எதற்காக ஹர்பஜன், பவன் நேகி? நிச்சயம் இவர்கள் இடத்தில் அமித் மிஸ்ராதான் இருந்திருக்க வேண்டும்.
உலகம் முழுதுமே ஒரு பந்து வீச்சு வரிசையில் லெக் ஸ்பின்னர் எவ்வகையான ஒரு மாற்றத்தை விளைவிப்பார் என்று பேசப்பட்டு வரும் நிலையில் இந்திய அணித்தேர்வுக்குழு மட்டும் திறமையான லெக் ஸ்பின்னரை ஒதுக்கி வைக்கின்றனர்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான லிமிடட் ஓவர் தொடரில் அஸ்வின் இல்லாத நிலையில் அமித் மிஸ்ரா தனக்கு கிடைத்த வாய்ப்பை மிகவும் அருமையாகவே பயன்படுத்தி வீசினார். மேலும் சையத் முஷ்டாக் அலி டிராபி தொடரில் அமித் மிஸ்ரா 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார், விக்கெட்டுகள் பட்டியலில் பவன் நேகி பெயர் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் மிஸ்ராவுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. மேலும் மிஸ்ரா சமீப காலங்களில் பேட்டிங்கும் அருமையாக ஆடி வருகிறார்.
எனவே மீண்டும் மீண்டும் விளையாடிய வீரர்களையே சேர்ப்பதும், பேருக்குப் புதிய வீரர்களைச் சேர்ப்பதும் பிறகு அவர்களை ஓரிரு போட்டிகளுக்குப் பிறகு கழற்றி விடுவதும்தான் நடந்து கொண்டிருக்கிறது. பேட்டிங்கில் அதேபோல் சிட்னியில் அருமையாக சதம் எடுத்து மிகப்பெரிய ஸ்கோரை விரட்டி வெற்றி பெற வைத்த மணீஷ் பாண்டேவுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். இல்லையெனில் அம்பாத்தி ராயுடுவுக்கு ஏற்பட்ட கதிதான் மணிஷ் பாண்டேவுக்கு ஏற்படும் என்கிற ஐயத்தை தவிர்க்க முடியவில்லை.
உள்நாட்டு கிரிக்கெட் தொடர்கள், பிற கிரிக்கெட் தொடர்களில் காட்டும் திறமைதான் அணித்தேர்வுக்கு அடிப்படை என்றால் அமித் மிஸ்ரா, இர்பான் பத்தான் தேர்வு செய்யப்படாதது புரியாத புதிர்தான்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago