இலங்கையை 113 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது பாகிஸ்தான்: ஹஃபீஸ் அபாரம்

By செய்திப்பிரிவு

இலங்கைக்கு எதிரான 3-வது ஒருநாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் 113 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. பாகிஸ்தான் அணியின் ஆல் – ரவுண்டர் முகமது ஹபீஸ் 140 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்ததுடன், 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

சார்ஜாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்து வீச முடிவு செய்தது. இதையடுத்து பேட்டிங் செய்த பாகிஸ்தான் 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 326 ரன்கள் எடுத்தது. அடுத்து பேட்டிங் செய்த இலங்கை 44.4 ஓவர்களில் 213 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இந்த வெற்றி மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

முன்னதாக பேட்டிங்கை தொடங்கிய பாகிஸ்தான் அணி 2 ரன்கள் சேர்த்தபோது தொடக்க வீரரான சார்ஜீல் கானின் விக்கெட்டை இழந்தது. பின்னர் ஜோடி சேர்ந்த அகமது ஷெசாத், முகமது ஹபீஸ் ஆகியோர் அணியைத் தூக்கி நிறுத்தினர்.

இலங்கை வீரர்கள் மாறி மாறி பந்து வீசியும் இந்த ஜோடியைப் பிரிக்க முடியவில்லை. 12.5 ஓவர்களில் 50 ரன்களை பாகிஸ்தான் அணி கடந்தது. அகமது ஷெசாத் 57 பந்துகளில் அரைசதம் அடித்தார். அவரைத் தொடர்ந்து முகமது ஹபீஸ் 69 பந்துகளில் 50 ரன்களை எட்டினார்.

இருவரின் சிறப்பான ஆட்டத்தால் பாகிஸ்தான் அணி 29.1 ஓவர்களில் 150 ரன்களை எட்டியது. ஆனால் அடுத்த ஓவரிலேயே அகமது ஷெசாத் ஆட்டமிழந்தார். அவர் 89 பந்துகளில் 81 ரன்கள் எடுத்தார். பின்னர் சோகிப் மசூத், ஹபீஸுடன் ஜோடி சேர்ந்தார். 36.5 ஓவர்களில் பாகிஸ்தான் 200 ரன்கள் எட்டியது. அப்போது 21 ரன்களில் மசூத் ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கிய கேப்டன் மிஸ்பா-உல்-ஹக் அதிரடியாக விளையாடியதால் பாகிஸ்தான் அணியின் ஸ்கோர் வேகமாக உயரத் தொடங்கியது. 26 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து மிஸ்பா ஆட்டமிழந்தார். இதில் 3 பவுண்டரி, 2 சிக்ஸர் அடங்கும். இதனிடையே முகமது ஹபீஸ் 119 பந்துகளில் சதமடித்தார். பின்னர் வந்த அப்ரிதி 2 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அப்போது பாகிஸ்தான் அணியின் ஸ்கோர் 46.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 281 ஆக இருந்தது.

அடுத்து களமிறங்கிய உமர் அக்மல், ஹபீஸுடன் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்தினார். 50 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் 5 விக்கெட் இழப்புக்கு 326 ரன்கள் எடுத்தது. முகமது ஹபீஸ் 140 ரன்களுடனும் (136 பந்துகள்), உமர் அக்மல் 23 ரன்களுடனும் (12 பந்துகள்) கடைசி வரை களத்தில் இருந்தனர். இலங்கை அணியின் பெரெரா 2 விக்கெட் எடுத்தார். குலசேகரா, மலிங்கா ஆகியோர் தலா 1 ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

கடினமான இலக்குடன் அடுத்து பேட்டிங் செய்த இலங்கை அணியில் குசல் பெரெரா, தில்ஷான் ஆகியோர் ஆட்டத்தைத் தொடங்கினர். 4-வது ஓவரில் 7 ரன்களுடன் பெரெரா ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த கருணாரத்னே ரன் ஏதும் எடுக்காமல் வந்தவேகத்தில் வெறியேறினார். பின்னர் களமிறங்கிய சங்ககாரா நிதானமாக விளையாடினார். எனினும் அவரும் நீடிக்கவில்லை. 53 பந்துகளை எதிர்கொண்ட அவர் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர் தில்ஷானுடன், சண்டிமால் ஜோடி சேர்ந்தார். இவர்கள் மட்டுமே தாக்குப் பிடித்து விளையாடினர். எனினும் இலங்கை அணியின் ஸ்கோர் வேகமாக உயரவில்லை. 21-வது ஓவரில்தான் 100 ரன்களை எட்ட முடிந்தது. சிறப்பாக விளையாடி வந்த தில்ஷான் அரைசதம் கடந்தார். எனினும் 59 ரன்களில் அவரை அப்ரிதி வெளியேற்றினார். இதனால் இலங்கை அணி 4-வது விக்கெட்டை இழந்தது. அடுத்து களமிறங்கிய கேப்டன் மேத்யூஸ் 44 ரன்களும், சண்டிமால் 36 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

பின்வரிசை வீரர்களால் பாகிஸ்தான் பந்து வீச்சை தாக்குப் பிடிக்க முடியவில்லை குலசேகரா 1 ரன், பிரசன்னா 2 ரன், திசாரா பெரெரா 2 ரன் என விக்கெட்டைப் பறிகொடுத்தனர். பிரசன்னா 15 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

44.4 ஓவர்களில் 213 ரன்களுக்கு இலங்கை அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. சேனநாயக 19 ரன்களுடன் கடைசி வரை களத்தில் இருந்தார். பாகிஸ்தான் தரப்பில் உமர் குல் 3 விக்கெட்டும், ஜுனைத் கான், முகமது ஹபீஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் எடுத்தனர். 140 ரன்கள் எடுத்ததுடன் 2 விக்கெட்டும் வீழ்த்திய முகமது ஹபீஸ் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இரு அணிகளுக்கு இடையிலான 4-வது ஒருநாள் போட்டி நாளை நடைபெற இருக்கிறது.

பாகிஸ்தான் வீரர் ஷெசாத்துக்கு அபராதம்

இப்போட்டியில் இலங்கை வீரர் தில்ஷானை பிடித்துத் தள்ளிய பாகிஸ்தான் தொடக்க வீரர் முகமது ஷெசாத்துக்கு போட்டிக்கான சம்பளத்தில் 50 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பேட் செய்து கொண்டிருந்தபோது 19-வது ஓவரில் ஷெசாத், இலங்கை பேட்ஸ்மேன் தில்ஷானிடம் திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது ஷெசாத், தில்ஷானைப் பிடித்துத் தள்ளினார். இது தொடர்பாக கள நடுவர்கள், 3-வது நடுவரிடம் புகார் தெரிவித்தனர்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) விதிப்படி போட்டியின்போது ஒரு வீரர் மற்ற வீரரைத் தேவையில்லாமல் தொடுவது, தாக்குவதுபோல நடந்து கொள்வது தவறு. எனவே போட்டிக்கான சம்பளத்தில் 50 சதவீதம் ஷெசாத்துக்கு அபராதமாக விதிக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்