ஏடிபி உலக டூர் பைனல்ஸ்: 12-வது முறையாக பங்கேற்கும் ஃபெடரர்
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்று வரும் பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் 3-வது சுற்றுக்கு முன்னேறியதன் மூலம் ஏடிபி உலக டூர் பைனல்ஸுக்கு ஃபெடரர் தகுதி பெற்றார்.
புதன்கிழமை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் 2-வது சுற்றில் ஃபெடரர் 6-4, 6-4 என்ற நேர் செட்களில் தென் ஆப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சனை தோற்கடித்தார்.
ஏடிபி உலக டூர் பைனல்ஸ் போட்டியில் சர்வதேச தரவரிசையில் முதல் 8 இடங்களில் இருக்கும் வீரர்கள் மட்டுமே பங்கேற்க முடியும்.
உலகின் 4-ம் நிலை வீரரான பிரிட்டனின் ஆன்டி முர்ரே காயம் காரணமாக உலக டூர் பைனல்ஸில் இருந்து விலகிவிட்டதால், 9-வது இடத்தைப் பிடிக்கும் வீரரும் அதில் விளையாடும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள ஃபெடரர், பாரீஸ் மாஸ்டர்ஸ் போட்டியில் 3-வது சுற்றுக்கு முன்னேறியிருப்பதன் மூலம் புதிய ஏடிபி தரவரிசை வெளியாகும்போது, முதல் 9 இடங்களுக்குள்ளேயே இருப்பார். அதனால் அவர் ஏடிபி உலக டூர் பைனல்ஸில் விளையாடும் வாய்ப்பு உறுதியாகியுள்ளது.
இதன்மூலம் தொடர்ந்து 12-வது முறையாக ஏடிபி உலக டூர் பைனல்ஸில் விளையாடும் வாய்ப்பைப் பெற்றுள்ள ஃபெடரர், அந்தப் போட்டி தொடரில் அதிக முறை பங்கேற்றவர் என்ற சாதனையை இவான் லென்டலுடன் பகிர்ந்து கொள்ளவிருக்கிறார்.