நியூஸிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி வெற்றி கண்டது.
நியூஸிலாந்தின் ஆக்லாந்து நகரில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து மார்ட்டின் கப்டிலும், ஜெஸ்ஸி ரைடரும் நியூஸிலாந்தின் இன்னிங்ஸைத் தொடங்கினர். நீண்ட நாள்களுக்குப் பிறகு நியூஸிலாந்து அணிக்குத் திரும்பிய ஜெஸ்ஸி ரைடர், 5 பந்துகளைச் சந்தித்தபோதும் ரன் கணக்கைத் தொடங்குவதற்கு முன்னதாகவே விக்கெட்டை பறிகொடுத்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் மார்ட்டின் கப்டில் 2, பின்னர் வந்த ராஸ் டெய்லர் 3, கேன் வில்லியம்சன் 8, கோரே ஆண்டர்சன் 13, ரோஞ்சி 7, நீஷம் 10 ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, மறுமுனையில் தனிநபராகப் போராடிய கேப்டன் பிரென்டன் மெக்கல்லம் 57 பந்துகளில் 1 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசிக் கட்டத்தில் நாதன் மெக்கல்லம் 64 பந்துகளில் 3 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 47 ரன்கள் சேர்த்து விக்கெட்டை பறிகொடுக்க, நியூஸிலாந்து 42.1 ஓவர்களில் 156 ரன்களுக்கு சுருண்டது. பிரென்டன் மெக்கல்லம் (51), நாதன் மெக்கல்லம் (47) ஆகிய இருவரும் சேர்ந்து மொத்தம் 98 ரன்கள் எடுத்தனர். மற்ற 9 வீரர்களும் சேர்ந்து 49 ரன்கள் மட்டுமே எடுத்தனர். அதில் 9 ரன்கள் உதிரிகள் மூலம் கிடைத்தவையாகும்.
மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் டுவைன் பிராவோ 4 விக்கெட்டுகளையும், ஜேசன் ஹோல்டர், ராம்பால் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
டேரன் சமி அதிரடி
157 ரன்கள் என்ற இலக்குடன் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் தடுமாற்றம் கண்டது. தொடக்க வீரர்கள் கிரண் பாவெல் 4, ஜான்சன் சார்லஸ் 9, டேரன் பிராவோ 14, கேப்டன் டுவைன் பிராவோ 12 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்தாலும், மறுமுனையில் போராடிய லென்ட் சிம்மன்ஸ் 43 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 34 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
டியோநரைன் 6 ரன்களில் நடையைக் கட்ட, டேரன் சமி களம்புகுந்தார். வந்தவேகத்தில் பவுண்டரி அடித்து அதிரடியைத் தொடங்கிய சமி, அடுத்த இரு ஓவர்களில் ஒரு சிக்ஸரையும், இரு பவுண்டரிகளையும் விளாச, 120 ரன்களைக் கடந்தது மேற்கிந்தியத் தீவுகள். இதனிடையே 13 பந்துகளைச் சந்தித்த ராம்தின் 2 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் வந்த ஜேசன் ஹோல்டர் 10 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
மெக்லீனாகான் ஓவரில் சமி ஒரு சிக்ஸரையும், ஒரு பவுண்டரியையும் விரட்ட 27.3 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது மேற்கிந்தியத் தீவுகள். சமி 27 பந்துகளில் 3 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 43 ரன்கள் குவித்ததோடு ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.
நியூஸிலாந்து தரப்பில் மெக்லீனாகான் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 2-வது ஒருநாள் போட்டி வரும் 29-ம் தேதி நேப்பியரில் நடைபெறுகிறது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago