காயமடைந்த மோகித் சர்மாவுக்குப் பதில் இஷாந்த் சர்மா

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக மீதமுள்ள 4 ஒருநாள் போட்டிகளில் மோகித் சர்மா காயம் காரணமாக விளையாட முடியாமல் போனதால், இஷாந்த் சர்மா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மோகித் சர்மா 11 ஒருநாள் போட்டிகளில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சிக்கன விகிதம் ஓவருக்கு 5.18 ரன்கள். பொதுவாக இவரது பந்து வீச்சு தொடக்கத்திலும் இறுதியிலும் எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை.

இவரது பந்து வீச்சு சர்வதேசத் தரத்தை இன்னமும் எட்டவில்லை என்றே கிரிக்கெட் வல்லுனர்கள் கருதிவந்துள்ளனர். தொடர்ந்து தவால் குல்கர்னி, ஜஸ்ப்ரீத் பும்ரா, பர்விந்தர் அவானா, ஏன் உமேஷ் யாதவ் கூட புறக்கணிக்கப்பட்டு வரும் நிலையில், தனக்குக் கொடுக்கப்பட்ட வாய்ப்புகளை மோகித் சர்மா சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றே இந்திய அணி நிர்வாகம் கருதுவதாகத் தெரிகிறது.

இஷாந்த் சர்மா இங்கிலாந்தில் லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் எழுச்சி பெற்றார். இதனையடுத்து இவரது பந்து வீச்சு மீது புதிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

இஷாந்த் சர்மா கடைசியாக நியூசிலாந்துக்கு எதிராக ஜனவரி மாதம் ஒருநாள் போட்டியில் விளையாடினார்.ஆனால் ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தி/ற்கு இன்னமும் இஷாந்த் சர்மா வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் நாளைய போட்டியில் இவர் விளையாடுவார் என்பது சந்தேகமே.

ஸ்ட்ரைக், சம்பளம் என்று மன உளைச்சலில் இருந்த மேற்கிந்திய அணி வீரர்களுக்கு கொச்சி போட்டியில் இந்திய அணியை நசுக்கியது பெரும் எழுச்சியை கொடுத்துள்ள நிலையில் ‘வின்னிங் இஸ் இம்பார்டண்ட்’ என்று சதா கூறிவரும் தோனியின் தலைமை நாளை என்ன செய்கிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE