உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் ஹீனா சித்துவுக்கு தங்கம்
ஜெர்மனியின் முனிக் நகரில் ஐஎஸ்எஸ்எப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஞாயிற்றுக்கிழமை மகளிர், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்றது.
ஒலிம்பிக் சாம்பியனான சீனாவின் குயொ வென்ஜுன், உலக சாம்பியனான செர்பியாவின் சோரானா, ஒலிம்பிக்கில் பலமுறை பட்டம் வென்ற உக்ரைனின் லீனா கொஸ்ட்யூச் ஆகியோருடன் இந்தியாவின் ஹீனா சித்து பங்கேற்றார். கடுமையான போட்டிக்கு மத்தியில் இப்பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார் ஹீனா சித்து. முன்னதாக இப்போட்டியில் அஞ்சலி பகத் (2002), ககன் நரங் (2008) ஆகியோர் தங்கம் வென்றுள்ளனர். ஆனால் அவர்கள் இருவரும் ரைபிள் துப்பாக்கி பிரிவில்தான் பதக்கம் வென்றனர்.
இப்போது பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையை ஹீனா சித்து பெற்றுள்ளார். ஐஎஸ்எஸ்எப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி என்பது சர்வதேச அளவில் முதல் 10 இடங்களில் உள்ள வீரர் வீராங்கனைகள் மட்டும் பங்கேற்கும் போட்டியாகும். தகுதிச் சுற்றின் போது உக்ரைனின் லீனா கொஸ்ட்யூசை விட ஹீனா சித்து பின்தங்கி இருந்தார். தொடர்ந்து இறுதிச் சுற்றின் தொடக்கத்தில் சித்து சிறிது தடுமாறினாலும், பின்னர் சுதாரித்து இலக்குகளை தவறாமல் சுட்டார். இதன் மூலம் தங்கப் பதக்கத்தை தனதாக்கினார்.
2009-ம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் சித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். காமன்வெல்த் போட்டிகளில் தங்கம், வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
டாக்டரின் கையில் துப்பாக்கி...
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவைச் சேர்ந்த ஹீனா சித்து ஒரு பல் டாக்டர். ஓவியங்கள் வரைவதிலும் கைதேர்ந்தவர். 2006-ம் ஆண்டு 12-ம் வகுப்பு படித்தபோது முதல்முறையாக துப்பாக்கி சுடுவதற்கு பயிற்சி பெற்றார். அடுத்த ஓராண்டிலேயே தேசிய ஜூனியர் அணியில் இடம் பெற்றார்.
2009-ம் ஆண்டு கேரளத்தில் நடைபெற்ற மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் தேசிய சாம்பியன் பட்டம் வென்றார். சீனாவில் 2010-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் அன்னு ராஜ் சிங், சோனியா ராய் ஆகியோருடன் இணைந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். சர்வதேச துப்பாக்கி சுடுதல் வீரர் ரோனக் பண்டிட் இவரது கணவர்.