ஷாகிப் அல் ஹசன், மஹ்முதுல்லாவின் அசாத்திய சதங்கள்: நியூஸி.யை வெளியேற்றியது வங்கதேசம்

By ஆர்.முத்துக்குமார்

கார்டிப்பில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் வங்கதேச அணியின் ஷாகிப் அல் ஹசன், மஹ்முதுல்லா நம்ப முடியாத சதங்களை அடிக்க நியூஸிலாந்து அணி தோற்று வெளியேறியது.

நியூஸிலாந்து முதலில் பேட் செய்து 265 ரன்களை எடுக்க இலக்கை விரட்டிய வங்கதேசம் முதலில் 12 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும் பிறகு 33 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும் இழந்து, வாய்ப்பே இல்லை என்ற நிலையில் இருந்தது..

ஆனால் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றின் மிகச்சிறந்த எழுச்சியாகக் கருதப்படும் வெற்றியை வங்கதேசம் எட்டியதற்குக் காரணம் ஷாகிப் அல் ஹசன் (114), மஹ்முதுல்லா (102 நாட் அவுட்) ஆகியோர் இணைந்து சாதனை உடைப்பு 224 ரன்களை 5-வது விக்கெட்டுக்குச் சேர்த்து நியூஸிலாந்தின் எஞ்சியிருந்த கொஞ்ச நஞ்ச கனவுகளையும் குழிதோண்டி புதைத்தது. 47.2 ஓவர்களில் 268/5 என்று அபார வெற்றி பெற்றது வங்கதேசம்.

கிரிக்கெட் வெறி நாடான வங்கதேசத்தில் இந்த வெற்றி நிச்சயம் ஒரு நாட்டார் வழக்காறாக மாறிவிடும்.

கிவிகளை டைகர்கள் காலி செய்தனர். கண்டிப்பாகவே ஒருநாள் கிரிக்கெட்டில் இப்படிப்பட்டதொரு எழுச்சியைக் கூற வேண்டுமெனில் 17/5 என்ற நிலையில் 1983 உலகக்கோப்பையில் கபில்தேவின் அனைத்து கால மிகச்சிறந்த 175 நாட் அவுட்டினால் இந்தியா எழுச்சியுற்றதைத்தான் ஒப்பிட முடியும்.

2005-ல் ஆஸ்திரேலியாவை முதன் முதலாக வங்கதேசம் வீழ்த்திய அதே மைதானத்தில் நேற்று திகைப்புக்குரிய இந்த வெற்றியை வங்கதேசம் பெற்றது. இதன் மூலம் 3 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து இன்று மோதும் ஆட்டத்தை ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கிறது.

ஷாகிப்தான் முதலில் சதம் எட்டினார், 111-வது பந்தில் டாப் எட்ஜ் சிக்ஸ் அவரது சதத்தை உறுதி செய்தது. சதத்தை கொண்டாடும் விதமாக டிரெண்ட் போல்ட் பந்தை இரண்டு இடிபோன்ற ஷாட்களில் பவுண்டரிக்கு விரட்டினார். பிறகு பவுல்டு ஆனார். ஆனால் அப்போது வங்கதேசத்துக்குத் தேவை 9 ரன்களே. இது ஷாகிபின் 7-வது சதமாகும். மஹமுதுல்லா தனது 3-வது சதத்தை அடித்தார். இன்றைய வங்கதேச பவுலிங் ஹீரோ மொசாடெக் ஹுசைன் வெற்றி பவுண்டரியை விளாசினார்.

முன்னதாக டிம் சவுதியின் ஸ்விங் மற்றும் வேகத்துக்கு வங்கதேச அணியின் முன்வரிசை பேட்டிங் பெயர்ந்து விழுந்தது. தமிம் இக்பாலை 2-வது பந்திலேயே எல்.பி. யில் வீழ்த்தினார். பிறகு சவுமியா சர்க்கார், சபீர் ரஹ்மான் இருவரையும் வீழ்த்தினார், சவுமியா சர்க்கார் எல்.பி.ஆக, சபிர் ரஹ்மான் லேசாக உள்ளே வந்து வெளியே எடுத்த பந்தில் ரோங்கியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் வங்கதேசம் 12/3 என்று தடுமாறியது.

பிறந்தநாள் கண்ட முஷ்பிகுர் ரஹிமின் மிடில் ஸ்டம்பை ஆடம் மில்ன பதம் பார்த்த போது வங்கதேசம் 33/4. இந்நிலையில் ஆகக்குறைந்த ரன் எண்ணிக்கைக்கான சாதனையை வங்கதேசம் செய்யு என்றே இந்நிலையில் எதிர்பார்க்கப்பட்டது.

பிறகு ஷாகிப், மஹ்முதுல்லாவின் உறுதி தெரிந்தது. ரன்கள் சீரான முறையில் வந்து கொண்டிருந்தன. 62 பந்துகளில் ஷாகிப் உல் ஹசன் தனது 35-வது ஒருநாள் அரைசதத்தை எடுத்தார். மஹ்முதுல்லாவும் ஷாகிபும் சேர்ந்து 107 பந்துகளில் 100 ரன்கள் கூட்டணி அமைத்தனர். ஷாகிபைத் தொடர்ந்து மஹமுதுல்லா 58 பந்துகளில் அரைசதம் கண்டார். இருவரும் இணைந்து வெற்றிக்கு 114 பந்துகளில் 121 ரன்கள் தேவை என்ற நிலைக்கு உயர்த்திய பிறகு கேன் வில்லியம்சனின் பந்தை மஹமுதுல்லா சிக்சருக்குத் தூக்கி, ஆட்டம் எப்படி திரும்பிவிட்டது பார் என்பதைக் காட்டினார்.

கடைசி 10 ஓவர்களில் 70 ரன்கள் தேவை என்ற நிலையில் ஸ்ட்ரைக் பவுலர் சவுதியிடம் வந்தார் வில்லியம்சன், ஆனால் ஒன்றும் நடக்கவில்லை, சாத்துமுறைதான் தொடர்ந்தது. சவுதையை மேலேறி வந்து கவர் திசையில் ஒரு சவட்டு சவட்டினார், பந்து பவுண்டரியில் கதறியது. அடுத்த ஓவரில் சாண்ட்னரை மஹ்முதுல்லா லாங் ஆஃபில் கிழித்தார். அதே ஓவரில் மிட்விக்கெட்டில் தள்ளி விட்டு 2 ரன்களை எடுத்த போது வங்கதேச ஒருநாள் கிரிக்கெட்டில் எந்த ஒரு விக்கெட்டுக்குமான அதிகபட்ச கூட்டணி ரன்கள் சாதனையை எட்டினர் மஹ்முதுல்லா, ஷாகிப் ஜோடி. இதற்கு முன்பாக 2015-ல் தமிம் இக்பால், முஷ்பிகுர் ரஹிம் இணைந்து 130 பந்துகளில் 178 ரன்களைச் சேர்த்ததே சாதனையாக இருந்தது.

நீஷமைக் கொண்டு வந்தார் அப்பர் கட் ஷாட்டில் ஷாகிப் அல் ஹசன் பந்தை பறக்க விட்டார். நியூஸிலாந்து பந்து வீச்சு ஒரு கட்டத்துக்குப் பிறகு வெறும் ஷார்ட் பிட்ச் பந்து வீச்சாக அமைந்தது அந்த அணிக்குப் பின்னடைவை ஏற்படுத்தியது.

46-வது ஓவரில் மில்னவின் லெக்ஸ்டம்ப் ஷார்ட் பிட்ச் பந்தை ஃபைன் லெக் திசைக்கு அப்படியே அனுப்ப சிக்ஸ் ஆனது, ஷாகிபின் சதமும் ஆனது. 115 பந்துகளில் 11 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 114 ரன்கள் எடுத்து போல்ட் பந்தில் பவுல்டு ஆனார். ஷாகிப். இதே ஓவரில் மஹ்முதுல்லா மீண்டும் ஒரு லெக் ஸ்டம்ப் பந்தை ஸ்கொயர்லெக்கில் தூக்கி விட்டு பவுண்டரியுடன் சதம் கண்டார். 48-வது ஓவரின் 2-வது பந்தில் ஸ்லிப், கல்லிக்கு இடையில் மொசாடெக் ஹுசைன் பந்தை பவுண்டரிக்கு விரட்ட 4 ரன்கள், வெற்றி ரன்கள்!! ஷாகிப் அல் ஹசன் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

வங்கதேசம் 33/4 என்ற நிலையிலிருந்து திகைப்புக்குரிய வெற்றியை ஈட்டியது ஒரு புறம் அசாத்தியமானது என்றால், நியூஸிலாந்து தங்களை நொந்து கொள்ள வேண்டியது எதற்காகவெனில் தங்கள் பேட்டிங்கின் போது கடைசி 10 ஓவர்களில் 62 ரன்களை மட்டுமே எடுத்ததற்காக. இதில் 4 விக்கெட்டுகளையும் இழந்தனர், பகுதி நேர ஸ்பின்னர் மொசாட்கெ ஹுசைனிடம் அடுத்தடுத்து மடத்தனமான பேட்டிங்கினால் விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது நியூஸிலாந்தை விட்டு இன்னமும் இம்மாதிரி வரலாற்றுத் தமாஷ்கள் அகலவில்லை என்பதையே காட்டுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்