ஆஸி. ஓபன்: இறுதிச்சுற்றில் நடால்: ஃபெடரரை நேர் செட்களில் வீழ்த்தினார்

By செய்திப்பிரிவு

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் உலகின் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் ரஃபேல் நடால் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். இந்தப் போட்டியில் மூன்றாவது முறையாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார் நடால்.

மெல்போர்னில் நடைபெற்று வரும் இப்போட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் அரையிறுதியில் நடால் 7-6 (4), 6-3, 6-3 என்ற நேர் செட்களில் உலகின் 6-ம் நிலை வீரரும், 17கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்றவருமான ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரரை தோற்கடித்தார்.

2 மணி நேரம், 24 நிமிடங்கள் நடைபெற்ற இந்த அரையிறுதியில் முதல் செட்டில் மட்டுமே நடால் போராடி வென்றார். டைபிரேக்கர் வரை சென்ற அந்த செட்டை 7-6 (4) என்ற கணக்கில் கைப்பற்றிய நடால், அடுத்த இரு செட்களிலும் எளிதாக ஃபெடரரை வீழ்த்தி 6-3, 6-3 என்ற என்ற கணக்கில் அந்த செட்களை கைப்பற்றினார்.

இடது கை ஆட்டக்காரரான நடாலின் இடது கையில் கொப்புளம் காரணமாக பெரிய அளவில் காயம் ஏற்பட்டபோதிலும், அதை பொருட்படுத்தாது சிறப்பாக ஆடி போட்டியை வெற்றியில் முடித்தார். ஃபெடரரின் சர்வீஸை 4 முறை முறியடித்த நடால், தனது சர்வீஸை ஒரு முறை மட்டுமே ஃபெடரரிடம் இழந்தார்.

இந்தப் போட்டியில் வெற்றி கண்டதன் மூலம் ஃபெடரருக்கு எதிராக 23-வது வெற்றியைப் பதிவு செய்துள்ளார் நடால். ஃபெடரருடன் கடைசியாக மோதிய 6 கிராண்ட்ஸ்லாம் உள்ளிட்ட 11 போட்டிகளில் வென்றுள்ள நடால், 10 போட்டிகளில் மட்டுமே ஃபெடரரிடம் தோல்வி கண்டுள்ளார்.

வெற்றி குறித்துப் பேசிய நடால்,

“முதல் செட்டின் கடைசி வரை நாங்கள் இருவரும் கடுமையாகப் போராடினோம். நான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அதேவேளையில், ஃபெடரர் ஆக்ரோஷமாக ஆடியதோடு, பந்தை விரைவாக திருப்பினார். இன்று என்னுடைய தலைசிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியதாக நினைக்கிறேன். அதனால் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளேன்” என்றார்.

2009-ல் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபனில் சாம்பியன் பட்டம் வென்ற நடால், தனது இறுதிச்சுற்றில் உலகின் 8-ம் நிலை வீரரான ஸ்விட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்காவை சந்திக்கிறார். இந்த ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. நடாலும், வாவ்ரிங்காவும் இதுவரை 12 முறை மோதியுள்ளனர். அவையனைத்திலும் நடாலே வெற்றி கண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கிராண்ட்ஸ்லாம் போட்டியில் 19-வது முறையாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ள நடால், இந்த முறை பட்டம் வெல்லும் பட்சத்தில் 14-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தைக் கைப்பற்றுவார். அதன்மூலம் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்ற வீரர்கள் வரிசையில் அமெரிக்காவின் பீட் சாம்ப்ரஸுடன் 2-வது இடத்தைப் பகிர்ந்து கொள்வார்.

இறுதிச்சுற்றில் சானியா ஜோடி

கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா-ருமேனியாவின் ஹாரியா டீக்கா ஜோடி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இந்த ஜோடி தங்களின் அரையிறுதியில் 2-6, 6-3, 10-2 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் ஜர்மிலா கேடோசோவா-மேத்யூ எப்டன் ஜோடியைத் தோற்கடித்தது.

1 மணி நேரம் 13 நிமிடங்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதல் செட்டை இழந்த சானியா ஜோடி, பின்னர் சரிவிலிருந்து மீண்டு வெற்றி கண்டது. சானியா ஜோடி தங்களின் இறுதிச்சுற்றில் பிரான்ஸின் கிறிஸ்டினா-மேட்னோவிக்-கனடாவின் டேனியல் நெஸ்டர் ஜோடியை சந்திக்கிறது. இந்த ஜோடி தங்களின் அரையிறுதியில் 6-3, 6-1 என்ற நேர் செட்களில் சீனாவின் ஜீ ஜெங்-அமெரிக்காவின் ஸ்காட் லிப்ஸ்கி ஜோடியைத் தோற்கடித்தது. இறுதி ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

இத்தாலி ஜோடி சாம்பியன்

மகளிர் இரட்டையர் பிரிவில் இத்தாலியின் சாரா எர்ரானி-ராபர்ட்டா வின்ஸி ஜோடி தங்களின் சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துக் கொண்டது.

கடந்த முறையும் சாம்பியன் பட்டம் வென்ற இத்தாலி ஜோடி 6-4, 3-6, 7-5 என்ற செட் கணக்கில் ரஷியாவின் எலினா வெஸ்னினா-எக்டெரினா மகரோவா ஜோடியைத் தோற்கடித்தது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் 3-வது செட்டில் ஒரு கட்டத்தில் சாரா-வின்ஸி ஜோடி 2-5 என்ற கணக்கில் பின்னிலையில் இருந்தது. இதனால் இந்த ஜோடி தோற்றுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சரிவிலிருந்து விரைவாக மீண்டு அந்த செட்டை 7-5 என்ற கணக்கில் கைப்பற்றி போட்டியை வெற்றியில் முடித்தது சாரா-வின்ஸி ஜோடி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

40 mins ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்