1970-களை ஞாபகப்படுத்தியிருக்கும் ஐஎஸ்எல்!

By ஏ.வி.பெருமாள்

ஒன்றல்ல, இரண்டல்ல…35 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் மூலம் சென்னையில் மட்டுமல்ல, தமிழகத்திலும் மீண்டும் புத்துயிர் பெற்றிருக்கிறது கால்பந்து போட்டி. கடந்த செவ்வாய்க்கிழமை சென்னை ஜவஹர்லால் நேரு மைதானத்தில் நடைபெற்ற சென்னையின் எப்.சி.-மும்பை சிட்டி அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தைப் பார்க்க ஏறக்குறைய 20 ஆயிரம் ரசிகர்கள் மைதானத்துக்கு படையெடுத்தனர்.

போட்டி தொடங்குவதற்கு முன்னதாகவும், போட்டி முடிந்த பிறகும் மைதானத்தின் அருகில் உள்ள சாலைகள் முழுவதுமாக ஸ்தம்பித்தன. போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்த போராடியது காவல்துறை. கிரிக்கெட் தவிர வேறு எந்த விளையாட்டுக்கும் இப்படியொரு பெரும் கூட்டம் கூடுவதை இன்றைய இளம்தலைமுறையினர் இதற்கு முன்னர் பார்த்திருக்க வாய்ப்பில்லை.

ஆனால் முந்தைய தலைமுறையினருக்கு இது வியப்பாகத் தெரியவில்லை. ஏனென்றால் 1970-களிலும், 1980-களின் தொடக்கத்திலும் சென்னையில் நடைபெறும் கால்பந்து போட்டிகளுக்கு திரளான ரசிகர்கள் படையெடுத்ததை அவர்கள் பார்த்திருக்கிறார்கள். விட்டல் டிராபி போன்ற தேசிய அளவிலான போட்டி, டி.எப்.ஏ. ஷீல்டு, சென்னை லீக் ஆகிய போட்டிகள் உச்சத்தில் இருந்த காலக்கட்டம் அது. இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ), ஐசிஎப், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ), தெற்கு ரயில்வே, விம்கோ போன்ற அணிகளுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருந்திருக்கிறது.

கடைகளுக்கு விடுமுறை

போட்டி நடைபெறுகிறபோது மைதானத்தின் அருகேயிருந்த வியாபாரிகள் தங்களின் கடைகளை அடைத்துவிட்டு போட்டியைக் காண சென்றிருக்கிறார்கள். விட்டல் டிராபி போன்ற தேசிய அளவிலான போட்டிகளில் கேரள அணிகள் விளையாடுகிறபோது சென்னையில் டீக்கடை வைத்திருக்கும் பெரும்பாலான மலையாளிகள் கடைக்கு விடுமுறை விட்டுவிட்டு மைதானத்திற்கு செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்திருக்கிறார்கள்.

தற்போதைய நேரு மைதானம் அப்போது மாநகராட்சியின் மைதானமாக இருந்திருக்கிறது. ஏ, பி என இரண்டு மைதானங்கள் இருந்திருக்கின்றன. இந்த மைதானங்களின் ஒருபுறத்தில் மட்டுமே 3 அடுக்கு கேலரிகள் இருந்திருக்கின்றன. ஆனால் ஒவ்வொரு போட்டிக்கும் சுமார் 15 ஆயிரம் ரசிகர்கள் மைதானத்துக்கு வந்திருக்கிறார்கள். அதனால் போட்டி நடைபெறும் தருணங்களில் மரப்பலகைகளைக் கொண்டு தற்காலிக கேலரிகள் அமைக்கப்படுவது வழக்கமாக இருந்திருக்கிறது. 1970-களிலேயே டிக்கெட் கட்டணம் ரூ.2, ரூ.3, ரூ.5 என்ற அளவில் இருந்துள்ளன. அப்போதைய காலக்கட்டத்தில் 5 ரூபாயின் மதிப்பு மிகப்பெரியது.

மறக்க முடியாத வீரர்கள்

குணபாண்டியன், குணசிங், கோஷி, எட்வின் ரோஸ், சிட்டி பாபு, தாமஸ், ராஜூ, செலஸ்டின் (அனைவரும் ஆர்பிஐ), நாகேஷ், மோகன் ராஜ் (ஐசிஎப்), ஆர்லேன்டோ, சூசை, அருமைநாயகம், சண்முகம் (அனைவரும் ரயில்வே), ஜான்சன், முகைதீன் குட்டி (எஸ்பிஐ) உள்ளிட்டோர் தமிழக கால்பந்து ரசிகர்களின் உயிர்நாடியாக இருந்திருக்கிறார்கள். அவர்களின் ஆட்டத்தைக் காண கண் கோடி வேண்டும் என்கிறார்கள் முன்னாள் கால்பந்து வீரர்கள்.

வட சென்னையை சேர்ந்தவரான நாகேஷ் ஆடிய காலத்தில் அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருந்திருக்கிறது. இந்தியாவில் இன்றளவிலும் அவருக்கு நிகரானதொரு முன்கள வீரர் இல்லை என கூறப்படுகிறது. தனக்கு முன்னால் எத்தனை வீரர்கள் இருந்தாலும் மிக லாவகமாக அவர்களை வீழ்த்திவிட்டு பந்தை கடத்தி சென்று கோலடிக்கும் ஆற்றல் பெற்றவர்.

“வாலி கோல்” (பறந்து வரும் பந்து தரையை அடைவதற்கு முன்னதாக கோலடிப்பது) அடிப்பதில் கில்லாடியான நாகேஷ் குள்ளமானவர் என்றாலும்கூட, மார்பளவு உயரத்தில் வரும் பந்துகளைக்கூட மேல் நோக்கி பாய்ந்து கோலாக்குவதில் கெட்டிக்காரராக திகழ்ந்திருக்கிறார். கேரளாவில் நடைபெறும் போட்டியில் நாகேஷ் பங்கேற்கிறார் என்றால் அங்கே மைதானம் நிரம்பி வழியுமாம். சென்னையில் விளையாடுகிறபோது போட்டி முடிந்தபிறகு நாகேஷின் வீடு வரை ரசிகர்கள் செல்வார்களாம்.

தென்னாட்டு பீலே

நாகேஷ் பற்றி முன்னாள் கால்பந்து வீரரான சுப்பிரமணி கூறுகையில், “நாகேஷை தென்னாட்டு பீலே என்றுதான் அனைவரும் அப்போது அழைத்தார்கள். ரயில்வே அணிகள் இடையிலான கால்பந்து போட்டியில் ஒரு முறை பங்கேற்றிருந்த நாகேஷ், ஈஸ்ட் பெங்காலைச் சேர்ந்த அசாத்திய திறமை பெற்ற கோல் கீப்பரான மனோ ரஞ்சன் பட்டாசார்ஜியை மிக எளிதாக வீழ்த்தி கோலடித்தபோது அப்போதைய ரயில்வே அணியின் தலைமைப் பயிற்சியாளரே அசந்து போனாராம்.

ஒருமுறை சந்தோஷ் டிராபியில் நாகேஷை கட்டுப்படுத்துவதற்காக மட்டுமே இரு வீரர்களை நியமித்தது பஞ்சாப். ஆனாலும் நாகேஷ் கோலடிப்பதை தடுக்க முடியவில்லை. அவர் ஆடிய ஆட்டமெல்லாம் வெற்றிதான் என்றநிலை அப்போது இருந்தது”என்றார்.

அதிவேக ஜான்சன்

1970 மற்றும் 1980-களில் இந்திய கால்பந்தில் கலக்கியவரும், முன்னாள் சர்வதேச கால்பந்து வீரருமான ஆர்லேன்டோ, தெற்கு ரயில்வேயின் அசைக்க முடியாத பின்கள வீரராக திகழ்ந்தவர். பின்கள வீரராக இருந்தபோதும் இக்கட்டான நேரங்களில் முன்கள வீரராக மாறி கோலடித்து பல போட்டிகளில் வெற்றி தேடித்தந்தவர்.

அவர் கூறுகையில், “35 ஆண்டுகளுக்குப் பிறகு ரசிகர்களின் கவனம் கால்பந்தின் பக்கம் திரும்பியிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. 1970-களில் எஸ்பிஐ வீரர் ஜான்சன் ஆடிய ஆட்டத்தை எப்போதுமே மறக்க முடியாது. அவருடைய ஆட்டத்தில் அவ்வளவு வேகம் இருக்கும். அவர் பந்தை எடுத்துக் கொண்டு முன்னேறினால் அவரின் வேகத்துக்கு ஈடுகொடுத்து தடுத்து நிறுத்துவது கடினம்.

அற்புத ஆட்டக்காரர் சுந்தர்ராஜ்

இதேபோல் நான் ஆரம்பத்தில் ஆர்பிஐக்காக ஆடியபோதும் தமிழக அணிக்காக ஆடியபோதும் பின்களத்தில் எனக்கும், குணபாண்டியனுக்கும் நல்ல புரிதல் இருந்தது. அவர் தலையால் முட்டுகிற எந்த பந்துமே குறி தவறாது. அந்த அளவுக்கு துல்லியமாக ஆடுவார். ஒலிம்பிக்கில் ஆடிய முன்னாள் கால்பந்து வீரர் சைமன் சுந்தர்ராஜின் ஆட்டமெல்லாம் மெய்சிலிர்க்க வைக்கும். அவருடைய ஷாட்டில் அவ்வளவு வேகம் இருக்கும். அதேநேரத்தில் அவருடைய ஆட்டம் மிக நிறைவானதாக இருக்கும். எதிரணி வீரர்களை கீழே தள்ளுவது உள்ளிட்ட ஆபத்தான ஆட்டங்களை அவர் ஒருபோதும் வெளிப்படுத்தமாட்டார்.

நடிகர் முத்துராமன்

நான் ரயில்வே அணிக்காக ஆடியபோது போட்டி முடிந்தவுடன் வெளியே வர முடியாது. எங்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக மைதான வாசலில் ஏராளமான ரசிகர்கள் சூழ்ந்து நின்று கொள்வார்கள். பலத்த பாதுகாப்புடன்தான் வெளியேற முடியும். சில நேரங்களில் வீடு வரை போலீஸ் பாதுகாப்புடன் சென்றிருக்கிறோம். தெற்கு ரயில்வேயில் பணிபுரிந்த அனைத்து சுமை தூக்கும் தொழிலாளர்களும் சிவப்பு நிற சீருடையுடன் மைதானத்தில் குவிந்துவிடுவார்கள். மறைந்த நடிகர்கள் நாகேஷ், முத்துராமன் ஆகியோர் மைதானத்துக்கு வருவார்கள். அதிலும் முத்துராமன் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு வந்துவிடுவார்” என்றார்.

கால்பந்தின் பொற்காலம்

ஏரோஸ் எப்.சி. அணியின் பயிற்சியாளர் தியாகராஜன் கூறுகையில், “1975 முதல் 1986 வரையிலான காலம் சென்னையில் கால்பந்தின் பொற்காலம் என்றுதான் சொல்ல வேண்டும். அந்தக் காலக்கட்டத்தில் கால்பந்து விளையாட்டு கொடிகட்டிப் பறந்தது. அப்போது தேசிய அளவிலான போட்டிகள் நிறைய நடத்தப்பட்டன. அதனால் ஆண்டு முழுவதும் போட்டிகள் நடந்துகொண்ட இருக்கும். 1986-க்குப் பிறகு கால்பந்து சங்கத்தின் செயல்பாடு சிறப்பாக அமையாததால் கால்பந்து விளையாட்டு நொறுங்கிப்போனது.

தொடர்ச்சியாக போட்டிகள் நடைபெறாததால் ரிசர்வ் வங்கி உள்ளிட்ட அரசுத் துறைகளில் வீரர்கள் நியமனம் செய்யப்படவில்லை. அதனால் அரசுத்துறை நிறுவனங்களைச் சேர்ந்த அணிகளின் செயல்பாடு மோசமானது. போட்டி தரமில்லாமல் போனதால் ரசிகர்களும் கால்பந்திலிருந்து விலகத் தொடங்கினார்கள். ஆனால் இப்போது ஐஎஸ்எல் வந்திருப்பதன் மூலம் ரசிகர்களின் கவனம் கால்பந்தின் பக்கம் திரும்பியிருக்கிறது. கால்பந்துக்கு இனி நல்ல எதிர்காலம் இருக்கும் என நம்புகிறேன்” என்றார்.

கடந்த 35 ஆண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாக ரசிகர்களின் கவனத்தை இழந்த கால்பந்து போட்டி ஐஎஸ்எல்லின் மூலம் மீண்டும் புத்துயிர் பெறத் தொடங்கியிருக்கிறது. சமீப காலங்களில் நடைபெற்ற சென்னை லீக் போட்டி, தற்போது நடைபெற்று வரும் ஐஎஸ்எல் போட்டி என இரண்டையும் நேரில் பார்த்த ஒருவரால் மட்டும்தான் வித்தியாசத்தையும், ஐஎஸ்எல்லின் தாக்கத்தையும் உணர முடியும்.

ஐஎஸ்எல் தொடரும்போது கிரிக்கெட்டை போன்று கால்பந்தின் மீதும் எல்லோருக்கும் காதல் ஏற்படும் தருணமும், 40 ஆயிரம் இருக்கை கொண்ட நேரு மைதானத்தில் டிக்கெட் கிடைக்காமல் ரசிகர்கள் திண்டாடும் காலமும் வெகுதொலைவில் இல்லை!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

மேலும்