ஹாலிவுட் வில்லனைப் போன்ற தோற்றம். எப்போதும் சற்றே கோபத்துடனும் தீவிரமான சிந்தனையிலும் இருப்பதுபோன்ற முக பாவம். விக்கெட் எடுத்தாலும் சதம் அடித்தாலும் பெரிதாக அலட்டிக்கொள்ளாத அமைதி. அதுதான் ஜாக்ஸ் ஹென்றி காலிஸ்.
கிரிக்கெட் உலகம் கண்ட தலைசிறந்த ஆல்ரவுண்டர்கள் வரிசையில் முதல் சில இடங்களைப் பிடிக்கக்கூடிய திறமைசாலி. தற்போது நடந்துவரும் பாக்ஸிங் டே டெஸ்டுடன் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்தது பலருக்கும் அதிர்ச்சியான செய்தியாகவே இருந்திருக்கும். அவர் ஆட்டத்திறனிலோ உடல் திறனிலோ கண்கூடான சரிவு ஏதும் இல்லாத நிலையிலும் அவர் இத்தகைய முடிவை எடுத்துள்ளதுதான் இந்த அதிர்ச்சிக்குக் காரணம். ஒரு நாள் போட்டிகளில் முதலில் ஓய்வுபெறுவதும் பிறகு டெஸ்ட் போட்டியில் ஓய்வுபெறுவதும்தான் பொதுவான வழக்கம். ஸ்டீவ் வா, ரிக்கி பாண்டிங், சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் அப்படித்தான் செய்தார்கள். இதனால்தான் காலிஸ் டெஸ்ட் போட்டியிலிருந்து முதலில் விலகியது ஆச்சரியம் அளிக்கிறது.
காலிஸ் விலகியதற்குத் தென்னாப்பிரிக்க அணி நிர்வாகம் மறைமுகமாக எந்த அழுத்தமும் கொடுத்திருக்க வாய்ப்பில்லை. அணித் தலைவர் க்ரீம் ஸ்மித்தைவிடவும் அதிகமான சராசரி (ஸ்மித் 49.43 – காலிஸ் 55.12) இவருடையது. அணியின் பிரதான மட்டையாளர் இன்றளவிலும் இவர்தான். தவிர, முக்கியமான பந்து வீச்சாளராகவும் இவர் இருக்கிறார். பிரதான வேகப் பந்து வீச்சாளர்களால் விக்கெட் வீழ்த்த முடியாதபோது பல சமயங்களில் முக்கியமான விக்கெட்களை காலிஸ் வீழ்த்தியிருக்கிறார். இன்று வரையிலும் சிறப்பாகவே பந்து வீசுகிறார். எனவே வெளியிலிருந்து நெருக்கடி வந்திருக்க வாய்ப் பில்லை என்ற முடிவுக்கு வரலாம். அப்படியானால் டெஸ்ட் போட்டிக்குத் தேவையான ஏதோ ஒன்று தன்னிடம் இல்லை என்று காலிஸ் நினைத்திருக்கலாம். அல்லது 2015ஆம் ஆண்டில் நடக்கவிருக்கும் உலகக் கோப்பைப் போட்டியில் ஆடுவதற்கான முழுத் தகுதியைப் பேண வேண்டும் என்று இந்த 38 வயதில் நினைத்திருக்கலாம்.
அவர் ஏன் இப்போது விலகினார் என்பதில் குழப்பம் இருக்கலாம். தலைசிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவர் என்பதில் யாருக்கும் எந்தக் குழப்பமும் இருக்க முடியாது. மட்டை வீச்சைப் பொறுத்தவரை சச்சினோடு ஒப்பிடத்தகுந்த மிகச் சில மட்டையாளர்களில் ஒருவர் ஜாக்ஸ் காலிஸ் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது. டெஸ்ட் போட்டியில் 51 சதங்கள் அடித்துள்ள சச்சினை நெருங்கக்கூடியவர் என்று நம்பப்பட்ட ஒரே மட்டையாளர் இவர்தான். இங்கிலாந்தின் அலாஸ்டர் குக் இந்தச் சாதனையை நிகழ்த்தக்கூடும் என்று கருதப்படுகிறது. அவர் இதுவரை 100 டெஸ்ட்கள் ஆடி 25 சதம் எடுத்துள்ளார் என்பதால் இந்த ஒப்பீடு செய்யப்படுகிறது. எனினும் மேலும் பல டெஸ்ட் போட்டிகளுக்குத் தாக்குப்பிடித்தால்தான் அவரை இந்தக் கணக்கில் சேர்க்க முடியும்.
சச்சின் 200 டெஸ்ட் போட்டிகளில் 51 சதம் அடித்திருக்கிறார். காலிஸ் 165 டெஸ்ட்களில் 44 சதம் அடித்துள்ளார். மேலும் 15 முதல் 20 டெஸ்ட் வரை இவர் ஆடினால் சச்சினைப் பின்னுக்குத் தள்ளிவிடுவது சாத்தியம்தான். சதங்களில் முதலிடம் பெறுவதற்கான வாய்ப்பு கைக்கெட்டிய தூரத்தில் இருப்பது தெரிந்தும் அவர் விலகுகிறார் என்றால் தன்னுடைய ஆட்டத் திறன், உடல் திறன் ஆகியவை குறித்த துல்லியமான மதிப்பீட்டின் அடிப்படையிலேயே அவர் அப்படிச் செய்திருக்க வேண்டும்.
மட்டை வீச்சு ஒருபுறம் இருக்க காலிஸ் பந்து வீச்சிலும் சிறந்து விளங்குகிறார். மித வேகப் பந்து வீச்சாளரான இவர் ஐந்தாவது பந்து வீச்சாளராக, தன் அணியின் கேப்டனுக்கு நெருக்கடியில் கைகொடுக்கும் ஆபத்பாந்தவனாகத் திகழ்ந்தார். கடந்த கால்நூற்றாண்டு காலத்தில் இவர் அளவுக்கு நம்பகமான ஆல்ரவுண்டர் யாரும் இல்லை என்று சொல்லலாம். அதற்கு முன்பும் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கேரி சோபர்ஸைத் தவிர வேறு ஆல்ரவுண்டரை இவருக்கு இணையாகவோ மேலாகவோ சொல்ல முடியாது. சோபர்ஸ் 93 போட்டிகளில் 26 சதங்கள் அடித்திருக்கிறார். சராசரி ரன் 57.78. ஓர் இன்னிங்ஸில் அதிகபட்ச ரன்கள் 365*. காலிஸ் சச்சினைப் போலவே முச்சதம் அடித்ததில்லை. சோபர்ஸ் 93 போட்டிகளில் 235 விக்கெட்கள் வீழ்த்தியிருக்கிறார். காலிஸ் 165 போட்டிகளில் 292. கபில்தேவ், இயான் போத்தம் போன்ற ஆல்ரவுண்டர்கள் மட்டை வீச்சிலும் பிரகாசிக்கக்கூடிய பந்து வீச்சாளர்களாக இருந்தார்களே தவிர சோபர்ஸ், காலிஸுடன் ஒப்பிடும் அளவுக்கு அவர்களது பன்முகத் திறமை பரிமளிக்கவில்லை. ஸ்போர்டாலஜி என்னும் இணைய தளம் நடத்திய ஆய்வில் டெஸ்ட் கிரிக்கெட்டின் தலைசிறந்த ஆல்ரவுண்டர்களில் சோபர்ஸுக்கு அடுத்த இடம் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
டெஸ்ட் போட்டிக்குத் தேவையான பொறுமையும் உறுதியும் கொண்ட ஆட்டம், எதிரணியின் பந்து வீச்சையும் வாய் வீச்சையும் கண்டு அசராத தன்னம்பிக்கை, தேவைப்படும் போது அடித்து ஆடும் திறன், கட்டுக்கோப்பான பந்து வீச்சு, நம்பகமான ஃபீல்டிங், நிதானம் தவறாத நடத்தை ஆகிய அரிய குணங்கள் கொண்ட ஜாக் காலிஸின் விலகல் டெஸ்ட் அரங்கில் பெரிய இடைவெளியை ஏற்படுத்தும். ரிக்கி பாண்டிங், மைக்கேல் ஹஸ்ஸி, ராகுல் திராவிட், வி.வி.எஸ். லட்சுமணன், சச்சின் டெண்டுல்கர் ஆகியோரைத் தொடர்ந்து காலிஸும் விலகிய நிலையில் டெஸ்ட் அரங்கம் வறுமைப்பட்டு நிற்கிறது என்று சொல்லலாம்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago