ஒரே டி20: நியூஸிலாந்தை நொறுக்கியது தென் ஆப்பிரிக்கா

By இரா.முத்துக்குமார்

ஆக்லாந்து, ஈடன்பார்க்கில் நடைபெற்ற ஒரே டி20 போட்டியில் நியூஸிலாந்து அணியை தென் ஆப்பிரிக்க அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

டாஸ் வென்று முதலில் தென் ஆப்பிரிக்காவை பேட் செய்ய அழைத்த தவறைச் செய்தவர் நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன். தென் ஆப்பிரிக்கா ஹஷிம் ஆம்லா அதிரடி அரைசதத்துடன் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 185 ரன்கள் எடுக்க தொடர்ந்து ஆடிய நியூஸிலாந்து 14.5 ஓவர்களில் 107 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது, கிறிஸ் மோரிஸ் அற்புதமான தொடக்க ஓவர்களில் பாய்ச்சலை நிகழ்த்த பிறகு இம்ரான் தாஹிர் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஆட்ட நாயகன் விருதுக்குரியவரானார்.

இலங்கைக்கு எதிராக டி20-யில் ஓய்வு அளிக்கப்பட்ட ஆம்லா தொடக்கத்தில் களமிறங்கி நியூஸிலாந்து பந்து வீச்சை பிரித்து மேய்ந்தார். குறிப்பாக நியூஸிலாந்தின் பென் வீலர் பந்து வீச்சை அவர் மிகவும் ரசித்திருக்க வேண்டும், காரணம் 6 பவுண்டரிகளை 2 ஓவர்களில் விளாசினார், இதில் தொடர்ச்சியாக 4 பவுண்டரிகள் என்பதும் கவனிக்கத்தக்கது. 32 பந்துகளில் ஆம்லா அரைசதம் கண்டார், நியூஸி தரப்பில் 61 ரன்களில் ஆம்லாவுக்கு ஸ்டம்பிங்கை ரோங்கி விட்டார், ஆனால் ஆம்லா உடனேயே, 43 பந்துகலில் 9 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 62 ரன்கள் எடுத்து அதே வீலர் பந்தில் டீப்பில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

டுபிளெசிஸ் (25 பந்துகளில் 36, 1 பவுண்டரி 3 சிக்சர்), ஆம்லா இணைந்து 2-வது விக்கெட்டுக்காக 57 பந்துகளில் 81 ரன்களை விளாசினர். ஏ.பி.டிவில்லியர்ஸ் 17 பந்துகளில் 3 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 26 ரன்கள் எடுத்து போனால் போகிறது என்று விட்டுவிட்டார் போலும் இதனால் தென் ஆப்பிரிக்கா 200 ரன்களுக்கும் மேல் செல்லும் வாய்ப்பு தடுக்கப்பட்டது. ‘டுமீல்’ டுமினி 2 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 16 பந்துகளில் 29 ரன்களை விளாசித் தள்ளினார்.

கடைசி 5 ஒவர்களில் 46 ரன்கள் எடுக்கப்பட்டது, ஆனால் இந்த களேபரத்திலும் டிரெண்ட் போல்ட் 4 ஓவர்களில் 8 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். டிகிராண்ட் ஹோம் 22 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். தொடக்கத்தில் குவிண்டன் டி காக் ரன் எடுக்காமல் போல்ட்டிடம் அவுட் ஆனார்.

186 ரன்கள் இலக்கைத் துரத்திய நியூஸிலாந்து அணி கிறிஸ் மோரிஸின் அற்புதமான பந்து வீச்சுக்கு 3-வது ஓவரில் அறிமுக வீரர் பிலிப்ஸ் (5), அடுத்த பந்தே அதிரடி வீரர் மன்ரோ (0) ஆகியோரை இழந்தது. வில்லியம்சன் 13 ரன்களில் வெளியேறினார், புரூஸ் மட்டுமே அதிகபட்சமாக 27 பந்துகளில் 3 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 33 ரன்கள் எடுத்தார்.

10 வது ஓவரில் 55/3 என்று இருந்த நியூஸிலாந்து இம்ரான் தாஹிரின் அருமையான பவுலிங்கிற்கு அடுத்த 4.5 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்தது.

தென் ஆப்பிரிக்க அணியில் மோரிஸ் 2 விக்கெட்டுகளையும் பெலுக்வாயோ 3 விக்கெட்டுகளையும், இம்ரான் தாஹிர் 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். டி20 கிரிக்கெட்டில் 5 விக்கெட்டுகள் கைப்பற்றும் 3-வது தென் ஆப்பிரிக்க பவுலர் இம்ரான் தாஹிர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்