ஒருநாள் போட்டியில் அதிகபட்ச ரன்கள்: சேவாக் உலக சாதனையை முறியடித்தார் ரோஹித் சர்மா

By செய்திப்பிரிவு

இலங்கைக்கு எதிரான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா 264 ரன்கள் குவித்தார். இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் 2-வது முறையாக இரட்டைச் சதமடித்த ஒரே வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ள அவர், ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற சேவாக் வசம் இருந்த உலக சாதனையையும் முறியடித்துள்ளார்.

3 மாதங்களுக்குப் பிறகு காயத்திலிருந்து மீண்டு அணிக்குத் திரும்பிய அவர், தனது முதல் போட்டியிலேயே இலங்கை பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்து வரலாற்றை மாற்றி எழுதியிருக்கிறார். 150 ஆண்டுகால பாரம்பரியமிக்க கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அஜிங்க்ய ரஹானேவுடன் இணைந்து இந்தியாவின் இன்னிங்ஸை தொடங்கினார் ரோஹித் சர்மா. ஆரம்பத்தில் சற்று நிதானம் காட்டிய ரோஹித் சர்மா, 72 பந்துகளில் அரைசதம் கண்டார். பின்னர் வேகம் காட்டிய அவர், 100 பந்துகளில் தனது 5-வது சதத்தைப் பூர்த்தி செய்தார்.

அதிரடி வேகம்

சதமடித்த பிறகு வழக்கம்போல் தனக்கே உரிய பாணியில் பந்துகளை மைதானத்தின் நாலாபுறமும் பறக்கவிட்ட ரோஹித் சர்மா, அடுத்த 25 பந்துகளில் 150 ரன்களைக் கடந்தார். அதைத்தொடர்ந்து அடுத்த 26 பந்துகளில் (ஒட்டுமொத்தத்தில் 151 பந்துகள்) தனது இரண்டாவது இரட்டைச் சதத்தை நிறைவு செய்தார். அப்போது ரசிகர்களின் கரவொலியால் ஈடன் கார்டன் மைதானமே அதிர்ந்தது.

தொடர்ந்து சிக்ஸர்களையும், பவுண்டரிகளையும் பறக்கவிட்ட ரோஹித் சர்மா, 220 ரன்களை எட்டியபோது ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் குவித்தவரான இந்திய வீரர் சேவாக்கின் சாதனையை (219 ரன்கள்) முறியடித்தார். இதன்பிறகு தொடர்ந்து வேகமாக ஆடிய அவர் 166 பந்துகளில் 250 ரன்களை எட்டினார். அவர் 200-லிருந்து 250 ரன்களை எட்டுவதற்கு 15 பந்துகளை மட்டுமே எடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

பவுண்டரியிலும் சாதனை

173 பந்துகளில் 9 சிக்ஸர், 33 பவுண்டரிகளுடன் 264 ரன்கள் குவித்த ரோஹித் சர்மா, கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் 33 பவுண்டரிகளை விளாசியதன் மூலம் ஒரு போட்டியில் அதிக பவுண்டரிகளை விளாசியவர் என்ற உலக சாதனையையும் படைத்தார். முன்னதாக சச்சின், சேவாக் ஆகியோர் தலா 25 பவுண்டரிகளை விளாசியதே சாதனையாக இருந்தது.

ஒருநாள் போட்டியில் அதிக சிக்ஸர் அடித்தவர் (16) என்ற சாதனையும் ரோஹித் சர்மா வசமே உள்ளது. கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இரட்டைச் சதமடித்தபோது அதிக சிக்ஸர்களை விளாசியவர் என்ற சாதனையை படைத்தார்.

'மேலும் 50 ஓவர் ஆட தயாராக இருந்தேன்'

"எப்போதும் சிந்தித்து ஆட வேண்டும். அணியின் ஸ்கோருக்கு உகந்ததுபோல நம்முடைய இன்னிங்ஸைக் கட்டமைக்க வேண்டும். அணி இதுவரை எவ்வளவு அடித் துள்ளது, இன்னும் எத்தனை ஓவர்கள் வீசவேண்டும், பந்துவீச்சாளர்கள் ஒவ்வொரு வருக்கும் எத்தனை ஓவர்கள் மீதம் உள்ளன என்று கணக்குப் போட்டுத்தான் ஆடவேண்டும். ஆடுகளம் பேட்டிங்குக்கு ஏற்றதாக இருந்ததால் நல்ல தொடக்கத்தை இழக்க விரும்பவில்லை. இது போன்ற பேட்டிங்குக்கு உகந்த ஆடுகளங்களில் 300, 350 ரன்களைக்கூட சுலபமாக சேஸ் செய்துவிடமுடியும். அதனால் பெரிய ஸ்கோர் அவசியம் என்று நினைத்தோம். ஒரு இடைவெளிக்குப் பிறகு ஆடியதால் மேலும் 50 ஓவர்கள் ஆட தயாராக இருந்தேன்" என்றார் ரோஹித் சர்மா.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்