இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையே ஓவல் மைதானத்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தியாவுக்கு அதிர்ச்சியளித்தது.
322 ரன்கள் இலக்கை விரட்டிய இலங்கை அணி 5-வது ஓவரிலேயே துவக்க ஆட்டக்காரர் டிக்வெல்லாவை (7 ரன்கள்) இழந்தது. இதன் பின் இணைந்த குணதிலகாவும், மெண்டிஸும் இணைந்து ரன் சேர்க்க ஆரம்பித்தனர். அவ்வபோது கிடைத்த மோசமான பந்துகளை பவுண்டரிகளுக்கும், சிக்ஸருக்கும் விளாசி 159 ரன்களை பார்ட்னர்ஷிப்பில் குவித்தனர்.
குறிப்பாக ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா இருவரது ஓவர்களிலும் இலங்கைக்கு ரன் மழையே பொழிய ஆரம்பித்தது. குணதிலகா, மெண்டிஸ் இருவரும் அரை சதம் கடக்க 28வது ஓவரில் குணதிலகா துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் ஆனார் (76 ரன்கள்). தொடர்ந்து பெரேராவும் ரன் சேர்ப்பில் இணைந்தார்.
அடுத்த சில ஓவர்களில் புவனேஸ்வர் குமாரின் அற்புதமான ஃபீல்டிங்கினால் மெண்டிஸும் ஆட்டமிழக்க (89 ரன்கள்) கேப்டன் மேத்யூஸ் களமிறங்கினார். இங்கிருந்து ஆட்டம் கொஞ்சம் கொஞ்சமாக இலங்கைக்கு சாதகமாக மாற ஆரம்பித்தது. ஒரு ஓவருக்கு குறைந்தது ஒரு பவுண்டரி என்ற ரீதியில் ரன் சேர இந்திய கேப்டன் கோலி செய்வதறியாது திகைத்தார். ஒரு கட்டத்தில் அவரே பந்துவீசவும் வந்தார். எதுவும் பலனளிக்காமல் போக இலங்கை, இலக்கை நெருங்க ஆரம்பித்தது. பும்ரா, உமேஷ் யாதவ் அவ்வபோது சில ஓவர்கள் ரன் சேர்ப்பை கட்டுப்படுத்தினாலும் அடுத்த ஓவர்களில் 2 பவுண்டரிகள் அடித்து அதற்கு சரி கட்டினர் இலங்கை வீரர்கள்.
தசைபிடிப்பின் வலியை சகித்துக் கொண்டே அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பெரேரா, ஒரு கட்டத்தில் களத்தில் நிற்க முடியாமல் வெளியேறினார் (47 ரன்கள்). அவர் பெவிலியன் திரும்பிய கட்டத்தில் இலங்கை அணிக்கு 42 பந்துகளில் 51 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. கைவசம் 7 விக்கெட்டுகளும் இருந்தன.
தொடர்ந்து களமிறங்கிய குணரத்னே, தான் சந்தித்த 4வது பந்தை சிக்ஸருக்கு விளாசி அவர் பங்குக்கு இந்திய ரசிகர்களை வெறுப்பேற்றினார். அடுத்த ஓவரிலும் 2 பவுண்டரிகளை அடிக்க இலங்கை அணிக்கு 30 பந்துகளில் 32 ரன்கள் மட்டுமே தேவை என்றானது. அடுத்த ஓவரில் ஒரு சிக்ஸருடன் மேலும் 11 ரன்கள் வந்ததால், தேவைப்பட்டது 24 பந்துகளில் வெறும் 21 ரன்கள். அடுத்த ஓவரில் மேத்யூஸ் அவர் பங்குக்கு ஒரு பவுண்டரி அடிக்க, அந்த ஓவரில் மேலும் 4 ரன்கள் வந்தது தேவை 18 பந்துகளில் 13 ரன்கள்.
தொடர்ந்து இந்த இணை சிக்ஸரிலும், பவுண்டரியிலுமே பதிலளித்துக் கொண்டிருக்க இலங்கை அணி 48.4 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்து இந்திய அணிக்கும், ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தது. மாத்யூஸ் ஆட்டமிழக்காமல் 52 ரன்களும், குணரத்னே 34 ரன்களும் எடுத்திருந்தனர். ஒரு நாள் போட்டிகளில் இலங்கை அணி இதுவரை விரட்டியிருக்கும் அதிகபட்ச இலக்கு இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றிருந்தால் இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெற்றிருக்கும். ஆனால் தோல்வியுற்றதால் க்ரூப் - பி பிரிவில் எந்த அணியும் அரையிறுதிக்குப் போகலாம் என்ற நிலை உருவாகியுள்ளது. இந்தியா - தென் ஆப்பிரிக்கா ஆட்டத்தில் ஜெயிக்கும் அணியும், இலங்கை - பாகிஸ்தான் ஆட்டத்தில் ஜெயிக்கும் அணியும் க்ரூப் பி-ல் அரையிறுதிக்கு தகுதி பெறும். எனவே அடுத்து வரும் க்ரூப் - பி ஆட்டங்களை காலிறுதி ஆட்டங்கள் என்றே சொல்லலாம்.
சதமடித்த ஷிகர் தவண்
முன்னதாக ஆடிய இந்திய அணி, ரோஹித் சர்மா - தவண் அணியின் சிறப்பான ஆட்டத்தால், பெரிய ஸ்கோருக்கான அடித்தளத்தை உருவாக்கிக் கொண்டது. சர்மா ஆட்டமிழந்ததும், கோலி ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சி தந்தார். தொடர்ந்து யுவராஜ் சிங்கும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, தோனி - தவண் இணை இந்தியாவை கரை சேர்த்தது. தவண் சதமும், தோனி அரை சதமும் கடக்க, கடைசியில் களமிறங்கிய கேதர் ஜாதவும் சில பவுண்டரிகள் விளாசி இந்தியாவை 321 ரன்களுக்கு எடுத்துச் சென்றார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago