தென் ஆப்பிரிக்காவுக்கு செல்லும் முன்னர், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரை வெல்வது, இந்திய அணிக்கு புதிய உற்சாகத்தை கொடுக்கும் என, வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் கூறியுள்ளார்.
கொச்சியில் நடந்த முதல் போட்டியை, இந்தியா ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெல்ல, கடைசி ஓவர் வரை சென்ற இரண்டாவது போட்டியை மே.தீ.அணி வென்றது. மூன்றாவது ஒரு நாள் போட்டி நடக்கும் கான்பூரின் கிரீன் பார்க் மைதானத்தில், பத்திரிக்கையாளர்களை சந்தித்துப் பேசிய புவனேஸ்வர் குமார், "தென் ஆப்பிரிக்காவுக்கு செல்ல ஆயத்தமாக இருக்கும் இந்த தருணத்தில், நாளைய போட்டி முக்கியமானதாக இருக்கும். அதை வெற்றி பெற்று, தொடரைக் கைப்பற்றினால், இன்னும் தன்னம்பிக்கையுடன் வரும் தொடரில் களமிறங்குவோம்" எனக் கூறினார்.
தனது சொந்த மண்ணில் விளையாட இருக்கும் புவனேஸ்வர் குமார், தனது விளையாட்டை இன்னும் சிறப்பாக வெளிப்படுத்த தயாராக இருப்பதாக நம்பிக்கை தெரிவித்தார்.
கான்பூர் மைதானம்
கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் கழித்து, கான்பூர் மைதானத்தில் ஒரு சர்வதேச கிரிக்கெட் போட்டி நடக்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், நாளைய ஆட்டம் யாருக்கு சாதகமாக அமையும் என்பதைக் கூறுவது கடினம். இந்திய அணி 1998 முதல் 2008 வரை கான்பூரில் நடைபெற்ற 11 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் 8-ல் வெற்றியும், 3-ல் தோல்வியும் கண்டுள்ளது. இங்கு இரு போட்டிகளில் விளையாடியுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி இரண்டிலும் வெற்றி கண்டுள்ளது. இந்தியாவும் மேற்கிந்தியத் தீவுகளும் இங்கு ஒரு போட்டியில் மோதியுள்ளன. 1994-ல் நடைபெற்ற அந்த போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியுள்ளது. ஆனால் அப்போது இருந்த இரு அணிகளுமே வேறு வேறு.
கடைசியாக 2008-ல் இந்தியா, இலங்கை அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டி கான்பூரில் நடைபெற்றது. அதில் இந்தியா வெற்றி பெற்றது. 2007-ல் பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியா 294 ரன்கள் குவித்தே ஓர் அணி இங்கு எடுத்த அதிகபட்ச ரன் சாதனையாக உள்ளது. வட மாநிலங்களில் தற்போது கடுமையான பனிப்பொழிவு நிலவி வருவதால், டாஸ் முக்கியப் பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெற்றி பயணம் தொடருமா?
சாம்பியன் டிராபி தொடரிலிருந்து, இந்திய அணி விளையாடிய அனைத்து தொடருமே, வெற்றித் தொடர்களாகவே அமைந்தன. இந்தத் தொடரிலும், இரண்டாவது ஒரு நாள் போட்டி வரை, இந்திய அணியே ஆதிக்கம் செலுத்தி வந்தது.
வலுவான பேட்டிங் வரிசையைக் கொண்ட இந்திய அணியில், ரோஹித், கோலி, கேப்டன் தோனி ஆகியோர் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகின்றனர். கடந்த போட்டியில் 1 ரன்னில் சதமடிக்கும் வாய்ப்பை இழந்த கோலி, இந்த போட்டியிலும் மேற்கிந்தியத் தீவுகள் பௌலர்களுக்கு சிம்மசொப்பனமாகத் திகழ்வார். ஆனால், யுவராஜ் சிங், ரெய்னா ஆகியோர் ரன் குவிக்க முடியாமல் தடுமாறி வருவது கவலையளிப்பதாக உள்ளது.
2-வது ஒருநாள் போட்டிக்குப் பிறகு பேசிய இந்திய கேப்டன் தோனி, “யுவராஜ் சிங் சிறப்பாக விளையாட வேண்டும். அவர் 4-வது வீரராக களமிறங்கி எதிரணியிடம் இருந்து ஆட்டத்தைப் பறிக்கும் ஆற்றல் பெற்றவர். கடந்த சில போட்டிகளில் அவர் ரன் குவிக்க முடியாமல் போராடி வருகிறார்” என்றார்.
பந்துவீச்சை பொறுத்தவரையில் முகமது சமி, புவனேஸ்வர் குமார், அஸ்வின், ஜடேஜா ஆகியோரை நம்பியுள்ளது இந்தியா. 3-வது வேகப்பந்து வீச்சாளராக இடம்பெற்ற மோஹித் சர்மாவுக்கு இந்த போட்டியில் வாய்ப்பு கிடைக்குமா என்பது உறுதியாகத் தெரியவில்லை. அவர் இல்லையெனில், உனட்கட் அல்லது வினய் குமாருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்திய தொடர்களில், இந்திய அணியின் பலவீனமாகப் இருந்து வருவது, பவுலிங்க். அதிலும், கடைசி ஓவர்களில், பௌலர்கள் சோபிக்க கடுமையாக பாடு படுகின்றனர். இரண்டாவது போட்டியில் சிறப்பாக செயல்பட்டும், விசாகப்பட்டினத்தில் கடும் பனி நிலவியதன் காரணமாக பந்துவீச்சு எடுபடவில்லை. கேப்டன் தோனியும் இக்கருத்தை எதிரொலித்தார். ஆனால் 3-வது போட்டி பகலில் நடைபெறுவதால் பனியால் எவ்வித பிரச்சினையும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த போட்டியில் 4 கேட்சுகளை கோட்டைவிட்ட இந்திய வீரர்களின் பீல்டிங்கும் மோசமாக அமைந்தது.
அனைவரையும் நம்பியிருக்கும் மே.தீ அணி
மேற்கிந்தியத் தீவுகள் அணியைப் பொறுத்தவரையில, கெயில் இல்லாத போதிலும், கிரண் பாவெல், டேரன் பிராவோ, லென்ட் சிம்மன்ஸ், டேரன் சமி ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் கடந்த போட்டியில் 289 ரன்கள் என்ற இலக்கையும் எட்டிப்பிடித்தது. இதன்மூலம் இந்திய சுற்றுப்பயணத்தில் முதல் வெற்றியை ருசித்தது மேற்கிந்தியத் தீவுகள். தனிப்பட்ட ஒரு வீரரை மட்டுமே நம்பாமல், அனைவரும் இணைந்து வெற்றிக்காக உழைத்தனர். இது மே.தீ.அணிக்கு பெரிய பலம். எனினும் கேப்டன் டுவைன் பிராவோ, மார்லான் சாமுவேல்ஸ் ஆகியோர் ரன் குவிக்க முடியாமல் தடுமாறி வருவது கவலையளிப்பதாக உள்ளது.
பந்துவீச்சில் ரவி ராம்பால், ஜேசன் ஹோல்டர், சுனில் நரேன் என வலுவான பௌலர்களை அந்த அணி கொண்டிருந்தாலும், இதுவரை இந்திய பேட்ஸ்மேன்களை அவர்கள் கட்டுப்படுத்தவில்லை. கடந்த போட்டியில் இந்தியாவின் முன்னணி பேட்ஸ்மேன்களை வீழ்த்தியபோதும், கடைசிக் கட்டத்தில் விராட் கோலி, கேப்டன் தோனி ஆகியோர் ரன்களைக் குவித்தனர்.
தாய் மண்ணில் விளையாடும் இந்திய அணி, எப்பாடு பட்டாவது வெற்றிக்காகவே விளையாடும் என்பதில் சந்தேகமில்லை. சென்ற போட்டியில் அனைவரையும் வியக்க வைத்த மேற்கிந்தியத் தீவுகள் அணியோ, இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கண்ட படுதோல்வியை ஈடுகட்ட, ஒருநாள் தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் களமிறங்கும். தொடரை முடிவு செய்யும் நாளைய போட்டியில் இந்த இரு அணிகளின் பலப்பரீட்சையை பார்க்க கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருமே ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago