ரியோ ஒலிம்பிக் போட்டி ஆடவர் ஹாக்கி ‘பி’பிரிவு போட்டியில் அயர்லாந்து அணியை இந்தியா 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபாரத் தொடக்கம் கண்டது.
இந்திய அணியில் ரகுநாத் முதல் கோலையும் பிறகு ருபீந்தர் பால் 2 கோல்களையும் பெனால்டி முறையில் அடித்தனர். ஆனால் அயர்லாந்து அணியினர் கடைசி 15 நிமிட நேர ஆட்டத்தில் இந்திய அணியை கதிகலக்கினர் என்றே கூற வேண்டும், இந்த கடைசி 15 நிமிட ஆட்டத்தில்தான் 2-வது கோலை பெனால்டி முறையில் அடித்த அயர்லாந்து 3-வது கோலுக்காக கடும் நெருக்குதல் கொடுத்தது, இந்திய அணி இதனை ஆக்ரோஷமாக எதிர்கொள்ளாமல் சற்றே தொய்வு காட்டியதால் வந்த விளைவு, இதில் 3-வது கோல் விழுந்து விடும் என்ற அளவுக்கு அயர்லாந்து சார்பில் தொடர் பெனால்டி கார்னர்கள்! ஆனால் அயர்லாந்து வெளியில் அடித்ததும், ஸ்ரீஜேஷ் ஒரு ஷாட்டை அற்புதமாகத் தடுத்ததும், மற்றபடி தடுப்பும் கோலாகாமல் தடுத்தன.
கடைசியில் கோல் கீப்பரையும் களத்தில் இறக்கி 11 வீரர்களும் களத்தில் இருந்தனர். ஆனால் ஆட்டம் முடிய 2 நிமிடங்களே இருந்தன, கவலைதரும் அயர்லாந்து ஆக்ரோஷத்தை இந்திய அணியினர் ஒருவாறாக முறியடித்து இறுதி விசில் அடித்தவுடன் கொண்டாடினர்.
முன்னதாக ஆட்டம் தொடங்கி 3-வது நிமிடத்திலேயே ஹர்மன்பிரீத் ஒரு அருமையாக மூவைச் செய்ய கோலுக்கு நெருக்கமாகச் சென்றனர். அயர்லாந்தும் சளைக்கவில்லை ஒரு ஷாட்டை அடுத்த 3-வது நிமிடத்தில் தூக்கி அடிக்க ஸ்ரீஜேஷ் தலைக்கும் மேல் சென்றது. அடுத்ததாக ஸ்ரீஜேஷ் கைகொடுக்க அயர்லாந்து கோல் முயற்சி வீணானது.
இப்படியே சென்று கொண்டிருந்த ஆட்டத்தில் இடது புறம் உத்தப்பா பந்தை அருமையாக எடுத்துச் சென்றார், ஆனால் அயர்லாந்து தடுப்பாட்டம் சம அளவில் சிறப்பாக அமைந்தது. முதல் கால் மணி ஆட்டத்தின் இறுதியில் இந்தியாவுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பு வீணானது பினிஷிங் இல்லை, இதற்கு அடுத்தபடியான பீல்ட் கோல் வாய்ப்பையும் இந்தியா தவற விட்டது.
கடைசியில் அயர்லாந்து டி-வட்டத்துக்குள் இந்தியா நுழைய சர்தார் சிங் அடித்த ஷாட் அயர்லாந்து வீரர் காலில் பட்டது என்று ஒரு முறையீடு, வீடியோ ரெபரலில் உறுதியாக இந்தியாவுக்கு மீண்டும் பெனால்டி வாய்ப்பு. இதனையும் விரயம் செய்தது இந்தியா, ஆனால் மீண்டும் அயர்லாந்து வீரர் காலில் பட்டதாக நடுவர் தீர்ப்பளிக்க இன்னொரு பெனால்டி வாய்ப்பு உடனடியாகக் கிடைத்தது. இப்போது வந்த பெனால்டி கார்னர் ஷாட்டை ரகுநாத் மிக அருமையாக டிராக் பிளிக் மூலம் கோலாக மாற்றினார் இந்தியா 1-0 என்று முன்னிலை வகித்தது.
2-வது 15 நிமிட நேர ஆட்டம் தொடங்கியது, இந்திய கோல் பகுதியிலிருந்து நிகின் திம்மையாவுக்கு ஒரு பந்து தூக்கி அடிக்கப்பட கவர் செய்யாமல் இருந்த அவர் மிக வேகமாக இடது புறம் பந்தை எடுத்து சென்று அயர்லாந்து கோலுக்குள் நுழைந்தார். ஆனால் இவரது கடைசி பாஸை ரமந்தீப் சிங் கோலுக்குள் செலுத்த தவறினார்.
இந்நிலையில் லாங் பாஸுக்கு சென்ற அயர்லாந்து இந்தியப் பகுதிக்குள் தங்களது 2-வது கார்னரைப் பெற்றனர், ஆனால் வைடாக அடித்து விரயம் செய்தனர். இதற்கு அடுத்த படியாக இந்திய அணி அழுத்தம் கொடுத்து அயர்லாந்து கோல் பகுதிக்குள் நுழைந்து கடுமையாக ஆட்டம் காண்பிக்க அயர்லாந்து தவறு செய்தது இந்தியாவுக்கு பெனால்டி கார்னர். தற்போது ருபீந்தர் பால் சிங் அருமையாக அதனை கோலாக மாற்றினார்.
ரகுநாத் 15-வது நிமிடத்திலும் ருபிந்தர் பால் சிங் 27-வது நிமிடத்திலும் கோல்களை அடிக்க இந்தியா 2-0 என்று முன்னிலை பெற்றது.
சர்தார் சிங் இன்று அருமையாக ஆடினார், எஸ்.வி.சுனிலும் இவரும் ஒரு மூவில் அருமையாக கூட்டணி அமைத்து அயர்லாந்தை சிறிது படுத்தினர், மற்றபடிக்கு சுனிலுக்கு அமைதியான போட்டியாக இது அமைந்தது.
அதன் பிறகுதான் 45-வது நிமிடத்தில் ரகுநாத் இந்திய கோல் பகுதிக்குள் தவறிழைக்க அயர்லாந்து பெனால்டி கார்னர் வாய்ப்பைப் பெற்றது, அதனை அயர்லாந்தின் ஜெர்மைன் அதிரடி ஷாட்டாக ஸ்ரீஜேஷுக்கு வலது புறம் கோல் அடித்தார். இந்தியா 2 அயர்லாந்து 1.
4வது கால் மணி நேர ஆட்டம் தொடங்கி 3-வது நிமிடத்திலேயே இந்திய அணியினர் அயர்லாந்து பகுதிக்குள் ஊடுருவி பெனால்டி வாய்ப்பை பெற்றனர். இதனை மீண்டும் ருபிந்தர் பால் சிங் கிடைத்த சிறிய இடைவெளியில் தண்டர் போல்ட் அடி என்பார்களே அந்த வகையில் கோலிக்கு வலது புறம் கோலுக்குள் செலுத்தினார் இந்தியா 3-1 என்று முன்னிலை பெற்றது.
இதன் பிறகுதான் அயர்லாந்து தங்கள் ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்தி கடுமையாக இந்தியாவுக்கு நெருக்கடி கொடுத்தனர், ஸ்ரீஜேஷ் இருமுறை தடுத்தார், அதில் ஒரு தடுப்பு நம்பமுடியாத தடுப்பாகும். இதில்தான் அயர்லாந்து தங்களது 8-வது பெனால்டி கார்னர் வாய்ப்பை பெற்றனர். இது கோலானது ஆனால் இந்தியா வீடியோ ரெபரலுக்குச் சென்றனர். அதாவது தடுக்கப்பட்ட பந்து மீண்டும் புல்டாஸாக சற்று உயரே வர அதனை அயர்லாந்து வீரர் மீண்டும் ஸ்டிக்கினால் கோலினில் தள்ளினார். இது அபாயகரமான ஷாட்டா என்ற கேள்வி எழ ரெபரல் சென்றது, ஆனால் கோல் என்று முடிவானது, அயர்லாந்து 2-3 என்று நெருக்கியது.
அதன் பிறகு 9-வது பெனால்டி வாய்ப்பையும் நெருக்குதல் மூலம் அயர்லாந்து பெற்றது ஆனால் இம்முறை இந்திய தடுப்பாட்டம் அவர்கள் 3-வது கோல் ஆசையை முறியடித்தது.
அடுத்ததாக சாம்பியன் ஜெர்மனி அணியுடன் கடினமான போட்டியில் இந்தியா விளையாடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
3 கோல்கள் அடித்த பிறகே ஆட்டத்தில் தொய்வு ஏற்பட்டது, அயர்லாந்தை எழும்ப விட்டது மந்தமான ஆட்டத்தினால்தான், இதுவல்லாமல் வெறியுடன் கடைசி வரை ஆடியிருந்தால் அயர்லாந்து கடைசியில் நெருக்கடி கொடுக்க விடாமல் செய்திருக்கலாம். தடுப்பாட்டம் திடீரென மோசமானதே அயர்லாந்தின் 2-வது கோலுக்குக் காரணம்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
13 mins ago
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago