ஒலிம்பிக் ஹாக்கி: பதற்றம் நிறைந்த வெற்றிகளுக்கிடையே நெதர்லாந்தை எதிர்கொள்ளும் இந்திய அணி

By ஆர்.முத்துக்குமார்

காலிறுதிக்கு தகுதி பெறுவது ஏறக்குறைய உறுதியான நிலையில் தற்போது இந்திய ஹாக்கி அணி தங்கள் பிரிவில் கூடியமட்டும் அதிக புள்ளிகளைப் பெற்று காலிறுதியில் ஆஸ்திரேலியாவை சந்திப்பதை தவிர்க்க வேண்டியுள்ளது.

இதற்கு நாளை (வியாழன்) நெதர்லாந்து அணியை இந்தியா வெற்றி பெறுவது அவசியமாகிறது, கூடுதல் கோல் வித்தியாசமும் இருந்தால் இரட்டை நலம்.

இது வரை பெற்ற 2 வெற்றிகளிலும் அயர்லாந்து, அர்ஜெண்டினா அணிகள் கடைசி நேரத்தில் கடும் நெருக்கடிகளைக் கொடுத்தன, ஒரு நல்ல பினிஷிங் உள்ள அணி, ஒரு நல்ல பெனால்டி கார்னர் சிறப்பு வீரர் அந்த அணிகளிலில் இருந்தால் இந்திய அணி தோற்றிருக்கும் என்பதையும் நாம் மறந்து விடலாகாது.

ஒருகாலத்தில் சார்ல்ஸ்வொர்த் (ஆஸி.), போவிலாண்டர் (நெதர்லாந்து) ஆகியோர் பெனால்டி கார்னர் நிபுணர்கள் என்றே கூற வேண்டும், இந்தியாவில் நடுவில் மொஹீந்தர்பால் சிங், ரஜீந்தர் சிங் போன்றோரும் சிறந்து விளங்கினார்கள், ஆனால் தற்போது ரகுநாத், ருபீந்தர்பால் சிங் இருவரும் அந்த அளவுக்கு நிபுணத்துவம் உடையவர்கள் என்று கூற முடியாது என்பதே எதார்த்தம்.

ஜெர்மனியுடன் எப்பாடுபட்டாவது டிரா செய்திருந்தால் பிரச்சினையில்லை, ஆனால் கடைசி வரை கோலுக்காக ஆடும் ஜெர்மனி, ஏன் அர்ஜெண்டினா, அயர்லாந்து அணிகளிடமிருந்து இந்திய அணியினர் கற்றுக் கொள்ள வேண்டும். தாக்குதலே சிறந்த தடுப்பு வியூகம் என்ற தாரகமந்திரத்தை மறக்கக் கூடாது.

நாம் பார்த்தவரையில் பந்து மட்டைக்கு வந்தவுடன் விறுவிறுவென எடுத்துச் செல்லும் இந்திய ஹாக்கி அணியைத்தான் பார்த்துள்ளோம், ஆனால் தற்போது அந்த சுறுசுறுப்பு இல்லை, பார்த்துப் பார்த்து ஆடுகின்றனர், சில வேளைகளில் பாஸ்களை கோட்டை விடுகின்றனர், மேலும் சில தருணங்களில் எதிரணியினர் நம் மட்டையிலிருந்தே பந்தைப் பிடுங்கிச் செல்கின்றனர். இவற்றை ஆல்ட்மன்ஸ் கவனித்திருப்பார்.

இதை நன்கு அறிந்துள்ள இந்திய அணியின் சுவர்-கேப்டன் ஸ்ரீஜேஷ் கூறும்போது, “நாம் இன்னும் கடினமாகவும் சிறப்பாகவும் ஆட வேண்டியுள்ளது. ஏனெனில் காலிறுதியில் யாருடன் மோத வேண்டும் என்பதை தீர்மானிக்கும் 2 போட்டிகள் மீதமுள்ளது என்பது எங்களுக்கு நினைவில் உள்ளது, அதிக புள்ளிகளுடன் உயர்வாக முடிந்தால் காலிறுதியில் சற்றே எளிதான அணியை எதிர்கொள்ள வாய்ப்பு கிட்டும்.

நெதர்லாந்து தரவரிசையில் 2-வதாக உள்ள அணி. எனவே அவர்களை வீழ்த்துவது நம்பிக்கையை வளர்த்தெடுக்கும். அவர்கள் அனுபவசாலிகள் எனவே அவர்களை எதிர்கொள்வது மன/உடல் ரீதியாக கடுமையான தயாரிப்பை எதிர்நோக்குவதாகும்” என்றார்.

இந்திய அணிக்கு ஒரேயொரு சாதகம் என்னவெனில் ஹாலந்து பயிற்சியாளர் ஆல்ட்மன்ஸ் நம்மிடையே உள்ளார். அர்ஜெண்டினா அணியுடன் 3-3 என்று நெதர்லாந்து டிரா செய்தாலும் 3 போட்டிகளில் 15 கோல்களுடன் சாம்பியன் ஜெர்மனிக்கு அடுத்த இடத்தில் உள்ளனர். அர்ஜெண்டினா டிராவுக்குப் பிறகு அயர்லாந்தை 5-0 என்றும், கனடாவை 7-0 என்றும் ஒன்றுமில்லாமல் செய்துள்ளது நெதர்லாந்து.

பயிற்சியாளர் ஆல்ட்மான்ஸ் கூறும்போது, “அவர்களுக்கு நெருக்கமாக ஒரு உத்தியை வகுக்க வேண்டும், அல்லது அவர்களை வீழ்த்தவே உத்திகளை வகுக்க வேண்டும். அவர்களுடன் சிலபல போட்டிகளை ஆடியுள்ளோம். இந்திய அணிக்காக நான் பணியாற்றும் போது ஒன்றை விரும்புகிறேன், எனது சொந்த நாட்டை இந்திய அணி வீழ்த்த வேண்டும் என்பதே அது” என்றார்.

நெதர்லாந்து அணியின் கேப்டன் ராபர்ட் வான் டெர் ஹர்ஸ்ட் ஒரு அனுபவசாலி, 2015-ம் ஆண்டின் சிறந்த வீரர். மேலும் 18 வயது குழந்தை முக வீரர் ஜாரிட் குரூன் என்பவர் அபாயகரமானவர்.

எனவே வெற்றி பெற்ற மற்ற அணிகளிடத்தில் கடைசி 15 நிமிடங்கள்தான் பதற்றமாக இருந்தது, ஆனால் நெதர்லாந்து அணிக்கு எதிராக 60 நிமிடங்களும் பதற்றம்தான், அனைத்தும் பக்காவாக 100% துல்லியத்துடன் இருந்தாலே அந்த அணியின் சிறப்புத் திறமை நம்மை அசத்தும் தன்மை கொண்டது. எனவே துல்லியத்துடன் கற்பனை வளமும் இணைந்து புதிய புதிய உத்திகளுடன் களமிறங்க வேண்டும், எஸ்.வி.சுனில் இதுகாறும் அமைதியாக ஆடி வருகிறார், நாளை அவரது ஹாக்கி ஸ்டிக்கிற்கு வேலை உள்ளது. பார்ப்போம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்