கட்டாக் டி20 போட்டியில் மோசமாக பேட் செய்து 92 ரன்களுக்குச் சுருண்ட இந்திய அணி தென் ஆப்பிரிக்காவிடம் டி20 தொடரை இழந்தது. ரசிகர்கள் ஆவேசமடைந்து மைதானத்தில் பாட்டில்களை விட்டெறிந்தனர்.
முதல் டி20 போட்டியின் தோல்விக்கு பழிதீர்க்கும் என்று எதிர்பார்த்த நிலையில் கட்டாக் டி20 போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் படுமோசமாக விளையாட தோல்வியடைந்து தொடரையும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இழந்தது இந்திய அணி.
முதலில் பேட் செய்த இந்திய அணி 17.2 ஓவர்களில் 92 ரன்களுக்குச் சுருண்டது. தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி 96/4 என்று வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தென் ஆப்பிரிக்கா 2-0 என்று முன்னிலை பெற்றுவிட்டது.
ரசிகர்கள் பாட்டில் வீச்சு: தடங்கலுக்குப் பிறகு தென் ஆப்பிரிக்கா வெற்றி
இந்திய இன்னிங்ஸ் சோகமாக 92 ரன்களில் முடிந்ததையடுத்து மைதானத்தில் ரசிகர்கள் ஆவேசமடைந்து பாட்டில்களை மைதானத்துக்குள் விட்டெறிந்தனர்.
ஆனால் நிலைமை சற்றே சரியாக தென் ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் தொடங்கப்பட்டது. அஸ்வின் அபாரமாக வீசி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
அஸ்வின் அபாரப் பந்துவீச்சு: ரசிகர்கள் பாட்டில் வீச்சினால் நிறுத்தப் பட்ட ஆட்டம்
93 ரன்கள் வெற்றி இலக்குடன் தென் ஆப்பிரிக்கா இன்னிங்ஸை தொடங்கியவுடன் குமார் முதல் ஓவரை வீச 2-வது ஓவர் அஸ்வின் வந்தார், 2 ரன்கள் எடுத்த ஆம்லாவை வீழ்த்தினார், லெக் ஸ்லிப்பில் ரோஹித் சர்மா தட்டித் தட்டி கேட்ச் பிடித்தார்.
டுபிளெஸ்ஸிஸ் அஸ்வினை அடித்து ஆடத் தொடங்கினார், மேலேறி வந்து மிட் ஆஃபில் ஒரு சிக்சரும், பவுண்டரியும் அடித்து 16 ரன்களில் இருந்த போது அஸ்வினின் இதே ஓவரில் மீண்டும் ஒரு முறை மேலேறி வந்து ஆட முயன்றார், பந்தை கொஞ்சம் மெதுவாக வீச சரியாக சிக்கவில்லை மோஹித் சர்மா அதே மிட் ஆஃப் திசையில் பின்னால் ஓடி அருமையாக கேட்ச் பிடித்தார்.
மீண்டும் டிவில்லியர்ஸை வீழ்த்தினார் அஸ்வின். அவர் 21 பந்துகளில் 19 ரன்கள் எடுத்து ஆடிவந்த போது ஒதுங்கி கொண்டு ஆட முயன்றார் ஆனால் பந்து மட்டையைக் கடந்து ஆப் ஸ்டம்பை தொந்தரவு செய்தது. இம்முறையும் பந்தை கொஞ்சம் இழுத்து மெதுவாக ரிலீஸ் செய்தார் அஸ்வின், ஏமாந்தார் டிவில்லியர்ஸ்.
அஸ்வின் 4 ஓவர்களில் 24 ரன்கள் கொடுத்து விழுந்த 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். டுமினி 19 ரன்களுடனும், பெஹார்டியன் 8 ரன்களுடனும் ஆட்டம் நிறுத்தப்பட்ட போது களத்தில் இருந்தனர்.
அஸ்வின் ஸ்பெல் முடிந்தவுடன் மீண்டும் ரசிகர்கள் பாட்டில் வீச்சில் ஈடுபட்டனர். அதாவது 11 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்கா 64/3 என்று இருந்த போது மேலும் பாட்டில்கள் மைதானத்துக்குள் விட்டெறியப்பட ஆட்டம் நிறுத்தப்பட்டது.
பிறகு நிலைமை கட்டுக்குள் வர 10 நிமிடங்களுக்குப் பிறகு ஆட்டம் தொடங்கியது தென் ஆப்பிரிக்கா மேலும் 6 ரன்களைச் சேர்த்து 70/3 என்று 13-வது ஓவரில் இருந்த போது ரசிகர்களின் ஒருபகுதியினர் மீண்டும் பாட்டில் வீச்சில் ஈடுபட வீரர்கள் மைதானத்தை விட்டு வெளியேறினர்.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவின் ஸ்கோர் டக்வொர்த் லூயிஸ் கணக்கின் படி 13 ஓவர்களில் தேவைப்படும் 55 ரன்களைக் காட்டிலும் அதிகமாக இருந்ததால் டக்வொர்த் லூயிஸ் முறையில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றதாகவே பொருள். ஆனால், சுமார் 25 நிமிடங்களுக்குப் பிறகு ஆட்டம் மீண்டும் தொடங்கியது.
அப்போது பெஹார்டியன் 12 ரன்கள் எடுத்து அக்சர் படேலின் ஆர்ம் பந்தில் எல்.பி. ஆகி வெளியேறினார். டேவிட் மில்லர் களமிறங்கி அக்சர் படேலை மிகப்பெரிய சிக்சர் அடித்து இலக்குக்கு அருகில் கொண்டு வந்தார். 18-வது ஓவரின் முதல் பந்தை ரெய்னா வீச டுமினி பவுண்டரி அடித்து டி20 தொடர் வெற்றியைச் சாதித்தார். டுமினி 30 ரன்களுடனும், டேவிட் மில்லர் 10 ரன்களுடனும் நாட் அவுட்டாகத் திகழ்ந்தனர்.
எந்த விதமான சீரியசான அணுகுமுறையுமற்ற பேட்டிங்:
டாஸ் வென்ற டுபிளெஸிஸ் இந்திய அணியை முதலில் பேட் செய்ய அழைத்தார். தொடக்கத்தில் அபாட்டும், இம்ரான் தாஹிரும் வீசினர், ஆனால் இம்ரான் தாஹிர் ஒரு ஓவர் வீசிய பிறகு நிறுத்தப்பட்டார்.
முதல் 4 ஓவர்களில் 28 ரன்கள் என்ற சுமாரான தொடக்கம் பெற்றது இந்திய அணி. இந்நிலையில் 4-வது ஓவரில் 10 ரன்களுக்கும் மேல் வந்த நிலையில் கிறிஸ் மோரிஸ் வீசிய நேர் பந்தை ஷிகர் தவண் பிளிக் செய்ய முயன்று பந்தை விட கால்காப்பில் வாங்கி எல்.பி.ஆகி வெளியேறினார். அவர் 11 ரன்களில் அவுட்.
அதன் பிறகு நடந்தெதெல்லாம் இந்திய அணியினர் மறக்க வேண்டியது. விராட் கோலி 1 ரன் எடுத்த நிலையில் பந்தை டீப் மிட்விக்கெட்டில் தட்டி விட்டு 2-வது ரன்னுக்காக் பேட்டிங் முனையை நோக்கி ஓடினார், ஆனால் அங்கு கிறிஸ் மோரிஸ் அபாரமாக ஓடி வந்து பந்தை எடுத்து டிவில்லியர்ஸுக்கு அருமையாக த்ரோ அடிக்க கோலி சில அடிகள் பின் தங்கி ரன் அவுட் ஆனார். அருமையான பீல்டிங் அது.
கடந்த போட்டியின் சத நாயகன் ரோஹித் சர்மா 22 ரன்கள் எடுத்து பாயிண்ட் திசையில் தட்டி விட்டு மில்லரின் கை பலத்தை சோதிக்குமாறு ரன் ஓடினார், பவுலர் முனையில் மில்லரின் த்ரோ நேராக ஸ்டம்பைத் தாக்கியது ரோஹித் ரன் அவுட் ஆனார். மற்றொரு அருமையான பீல்டிங். பின்னங்காலில் சென்று ஆடிவிட்டு குவிக் சிங்கிள் ஓடுவது அவ்வளவு சுலபமல்ல, அதுவும் மில்லர் போன்ற பீல்டருக்கு எதிராக ரோஹித் சர்மாவின் மோசமான முடிவாக இது அமைந்தது.
ராயுடுவின் வேடிக்கையான அவுட்:
9-வது ஓவரில் வேகப்பந்து வீச்சாளர் ரபாதா பந்து வீச வந்தார். அப்போது ரன் கணக்கைத் தொடங்காத அம்பாத்தி ராயுடு அல்வா போல் வந்த புல்டாஸில் பீட் ஆகி பவுல்டு ஆனார். சர்வதேச கிரிக்கெட்டில் இப்படி அவுட் ஆவதை நினைத்துப் பார்க்க முடியாது, ரபாதாவும் இனி அப்படியோரு அல்வா பந்தை வீசப்போவதுமில்லை. ஒரு முறை லஷ்மண் ஒருநாள் போட்டியில் ஷோயப் அக்தரிடம் இப்படி புல்டாஸில் பவுல்டு ஆனார். ஆனால் அது 150 கிமீ வேகம் கொண்ட புல்டாஸ், பந்து வரும்போது கண நேரத்தில் லஷ்மண் பந்தை பார்வையிலிருந்து இழந்தார், ஆனால் இது சாதாரணமான ஒரு புல்டாஸ். இதில் பவுல்டு ஆகியதன் மூலம் ராயுடு தனது இடத்தை இழப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மளமள விக்கெட்டுகள்:
தோனியும், ரெய்னாவும் 45/4 என்பதிலிருந்து தட்டுத் தடுமாறி 67 ரன்களுக்கு ஸ்கோரை உயர்த்தினார்கள். அப்போது 5 ரன்கள் எடுத்த தோனி, தனது சென்னை சூப்பர் கிங்ஸ் சகாவான ஆல்பி மோர்கெல் வீசிய வெளியே சென்ற பந்தை சொத்தையாக கட் செய்ய பந்து எட்ஜ் எடுத்து டிவில்லியர்ஸின் அருமையான கேட்ச் ஆனது.
சுரேஷ் ரெய்னா 22 ரன்கள் எடுத்து படுமோசமாக ஆட்டமிழந்தார். இம்ரான் தாஹிர் வீசிய கூக்ளியை, டிரைவுக்கான பந்தாக அது இல்லாதது தெரியாமல் டிரைவ் ஆட அது கவரில் ஆம்லா கையில் போய் உட்கார்ந்தது. இவ்வளவு அனுபவமிக்க ரெய்னா பந்தை கணிக்க முடியாமல், தரையோடும் அடிக்க முடியாமல் ஆட்டமிழந்தது பார்க்க வேதனையளித்தது.
அடுத்த பந்தே மீண்டும் கூக்ளியாக ஹர்பஜன் சிங் பவுல்டு ஆனார். ஹாட்ரிக் வாய்ப்பைப் பெற்றார் இம்ரான் தாஹிர், ஆனால் எடுக்க முடியவில்லை. 9 ரன்கள் எடுத்த அக்சர் படேல் 16-வது ஓவரின் 4-வது பந்தில் மோர்கெல் பந்தை பிளிக் செய்து ஷார்ட் மிட்விக்கெட்டில் கேட்ச் கொடுத்தார். புவனேஷ் குமார் ரன் எடுக்காமல் அதே ஓவரில் மோர்கெலின் நேர் பந்தை கோட்டை விட்டு பவுல்டு ஆனார். அஸ்வின் 11 ரன்கள் எடுத்த நிலையில் கடைசியாக மோரிஸ் பந்தை ஒதுங்கிக் கொண்டு அடிக்க முயன்று பவுல்டு ஆனார். 17.2 ஓவர்களில் இந்தியா 92 ரன்களுக்குச் சுருண்டது.
ஆல்பி மோர்கெல் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்ற மோரிஸ், தாஹிர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். மொத்தம் 104 பந்துகள் விளையாடிய இந்திய அணி அதில் 50 பந்துகளில் ரன் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மொத்தத்தில் ரசிகர்கள் ரகளை, மோசமான பேட்டிங் என்று இந்தியாவுக்கு மறக்க வேண்டிய டி20 போட்டியாக இது அமைந்தது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago