தென் ஆப்பிரிக்க டி20 தொடர்: ஆஸி. அணியில் ஷேன் வாட்சன்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ள 13 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. காயத்திலிருந்து மீண்டுள்ள மூத்த ஆல்ரவுண்டரான ஷேன் வாட்சன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தென் ஆப்பிரிக்க அணி வரும் நவம்பரில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 போட்டி மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. நவம்பர் 5-ம் தேதி தொடங்கும் டி20 தொடரில் ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் புதுமுக விக்கெட் கீப்பர் பென் டங்க் இடம்பிடித்துள்ளார்.

பிராட் ஹேடின், டிம் பெய்ன், மேத்யூ வேட் போன்ற முன்னணி விக்கெட் கீப்பர்கள் இருந்த போதும், கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஒருநாள் போட்டியில் டாஸ்மேனியாவுக்காக 229 ரன்கள் குவித்து சாதனை படைத்ததன் மூலம் அனைவரையும் பின்னுக்குத்தள்ளி டி20 தொடரில் இடம்பிடித்துள்ளார் பென் டங்க்.

இது தொடர்பாக ஆஸ்திரேலிய தேர்வாளர் ரோட் மார்ஷ் கூறுகையில், “ஆஸ்திரேலிய அணி இளமை, அனுபவம் என சமபலம் கொண்ட அணியாகும். பேட்டிங், பவுலிங் இரண்டிலும் கேப்டன் பிஞ்ச் நிறைய மாற்றம் செய்து கொள்ளும் வகையில் அணியைத் தேர்வு செய்துள்ளோம்” என்றார்.

அணி விவரம்: ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), சியான் அபோட், டக் போலிங்கர், கேமரூன் பாய்ஸ், பட் கம்மின்ஸ், பென் கட்டிங், பென் டங்க், ஜேம்ஸ் ஃபாக்னர், நிக் மேடின்சன், நாதன் ரியார்டன், கேன் ரிச்சர்ட்சன், ஷேன் வாட்சன், கேமரூன் ஒயிட்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE