விளையாட்டு வீரர்களுக்காக பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு வரும் தமிழக அரசு, வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என தமிழக விளையாட்டு வீரர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
தமிழக அரசு விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் ரொக்கப் பரிசுகளை வழங்கி வருவது மட்டுமின்றி, அவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 3 இடங்கள், பொறியியல் படிப்பில் 500 இடங்களை ஒதுக்கியுள்ளது. இதுதவிர கால்நடை மருத்துவர், சட்டப் படிப்பு, வேளாண் படிப்பு, பி.எஸ்.சி. நர்சிங், சித்தா, பாலிடெக்னிக் போன்ற படிப்புகளிலும் விளையாட்டு வீரர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு வருகிறது.
பல்வேறு படிப்புகளில் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டாலும், வேலைவாய்ப்பு என்று எடுத்துக் கொண்டால் தமிழக அரசுப் பணிகளில் காவல் துறையைத் தவிர வேறு எந்த துறையிலும் விளையாட்டு வீரர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்படுவதில்லை. காவல் துறையிலும் 5 சதவீத இடஒதுக்கீடு மட்டுமே அளிக்கப்படுகிறது.
இதனால் பெரும்பாலான தமிழக விளையாட்டு வீரர்கள் தங்களின் வேலைவாய்ப்புக்காக மத்திய அரசுப் பணி, ரயில்வே, வங்கிகள், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் (ஓ.என்.ஜி.சி.), இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி), இந்திய உணவுக் கழகம் போன்ற பொதுத்துறை நிறுவனங்களை மட்டுமே நம்பியுள்ளனர். அதிலும் அனைவருக்கும் வேலை கிடைப்பதில்லை.
தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மின்சார வாரியம், போக்குவரத்துத் துறை, ஆவின் ஆகிய நிறுவனங்கள் வாலிபால், ஹாக்கி, கபடி போன்ற அணிகளை பராமரித்து வந்தன. இதனால் தமிழக விளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது. ஆனால் காலப்போக்கில் விளையாட்டு வீரர்களுக்கு அளித்து வந்த வேலைவாய்ப்பை அந்த நிறுவனங்கள் நிறுத்திவிட்டதால், தமிழக விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை என்பது குதிரைக் கொம்பாகி விட்டது.
2 சதவீத ஒதுக்கீடு
1980 ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியின் கேப்டனாக இருந்த பாஸ்கரன் கூறுகையில், “விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். 15 ஆண்டுகளுக்கு முன்பு பல்லவன் போக்குவரத்து கழகத்தில் விளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டது. பல்வேறு அணிகள் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வந்தன. காலப்போக்கில் விளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பது நிறுத்தப்பட்டுவிட்டது.
போக்குவரத்துத் துறையில் விளையாட்டு வீரர்களுக்கு மீண்டும் வேலைவாய்ப்பு அளித்து சிறந்த அணிகளை உருவாக்கி பராமரிக்க வேண்டும். இப்போது போக்குவரத்துத் துறை பெரிய அளவில் விரிவடைந்துள்ளது. எனவே மாவட்டத்துக்கு ஓர் அணியைக்கூட பராமரிக்கலாம்.
தமிழ்நாடு மின்சார வாரியத்திலும் சிறந்த அணிகள் இருந்தன. அங்கு ஆண்டுக்கு 150 வீரர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டு வந்தது. அங்கிருந்த கபடி அணியைச் சேர்ந்த வீரர்கள் அர்ஜுனா விருதை வென்றிருக்கிறார்கள். இதேபோல் சென்னை மாநகராட்சியும்கூட விளையாட்டு அணிகளை பராமரித்து வந்தது. அதுவும்கூட இப்போதைக்கு இல்லாமல் போய்விட்டது. தமிழக அரசின் கட்டுப்பாட்டில் ஏராளமான துறைகள் உள்ளன. அதில் குறைந்தபட்சம் 2 சதவீத இடஒதுக்கீடு அளித்தால்கூட, விளையாட்டு வீரர்களுக்கு பயனளிப்பதாக அமையும். ரயில்வே துறையில் மட்டும் ஆண்டுதோறும் 1200 விளையாட்டு வீரர்கள் பணி நியமனம் செய்யப்படுகிறார்கள்.
அதேபோன்று தமிழக அரசுப் பணிகளிலும் வேலைவாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். இன்றைக்கு வீரர், வீராங்கனைகள் அனைவருமே நன்றாக படிக்கிறார்கள். அதனால் உயர் பணிகளில் நியமிக்கப்பட்டாலும், அதை சிறப்பாக கையாளும் திறமை விளையாட்டு வீரர்களிடம் இருக்கிறது” என்றார்.
குரூப் 2 பணியில் நேரடி நியமனம் வேண்டும்!
இது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த தடகளப் பயிற்சியாளர் நாகராஜ் கூறுகையில், “இன்றைய சூழலில் ஒரு துறையை தேர்வு செய்தால், அதனால் நமக்கு என்ன பயன் என்றுதான் எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள். விளையாட்டடை ஒருவர் தேர்வு செய்யும்போது அதன்மூலம் அவருக்கு வேலை கிடைத்தால்தான் பயனுள்ளதாக அமையும். ஒரு வீரருக்கு ஒலிம்பிக்கில் பங்கேற்க வேண்டும் என்ற கனவு இருந்தாலும், இந்த சமூகத்தில் வாழ்வதற்கு நிச்சயம் வேலை வேண்டும். அது இருந்தால் மட்டுமே அவருக்கு இங்கு அங்கீகாரம் கிடைக்கிறது.
தமிழக காவல் துறையில் விளையாட்டுக்கென 5 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. அதைப் போன்று எல்லாத் துறைகளிலும் 5 சதவீத அளவுக்கு இடஒதுக்கீடு அளிக்கலாம்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் பல்வேறு பணியிடங்களை நிரப்பும்போது, விளையாட்டுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு அளிக்கலாம். சர்வதேச போட்டிகளில் பதக்கம் வெல்பவர்களுக்கு நேரடியாக குரூப் 2 பிரிவு பணிகளில் வாய்ப்பு அளிக்க வேண்டும். கல்வித் துறையில் விளையாட்டு வீரர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்படுவதைப் போன்று, வேலை வாய்ப்பிலும் தமிழக முதல்வர் இடஒதுக்கீடு அளிப்பார் என நம்புகிறோம். தமிழக அரசுப் பணிகளில் விளையாட்டு வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்போது, தமிழர்களும் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் சூழல் உருவாகும்” என்றார்.
ஹரியாணாவில் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்புக்கான உத்தரவாதம் உள்ளது. காவல் துறை மட்டுமின்றி, அரசுத் துறை, பல்வேறு வாரியங்கள், மாநகராட்சி போன்றவற்றிலும் விளையாட்டு வீரர்கள் பணியில் அமர்த்தப்படுகின்றனர். சர்வதேசப் போட்டிகளில் பதக்கம் வெல்லும் பட்சத்தில் அவர்கள் நேரடியாக துணை காவல் கண்காணிப்பாளராக (டிஎஸ்பி) நியமிக்கப்படுகிறார்கள். ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றாலே ஹரியாணாவில் அரசு வேலை வழங்கப்படுகிறது. அதனால்தான் ஹரியாணா வீரர்கள் ஒலிம்பிக்கிலும், சர்வதேசப் போட்டிகளிலும் ஜொலிக்கிறார்கள். பதக்கத்தைக் குவிக்கிறார்கள்.
அதேபோன்ற சூழலை தமிழகத்திலும் ஏற்படுத்த வேண்டும். தமிழக வீரர்கள் சர்வதேசப் போட்டிகளில் பதக்கம் வெல்லும்போது, அவர்கள் வென்ற பதக்கங்களின் அடிப்படையில் வேலைவாய்ப்புகள் அளிக்கப்படுமானால், தமிழகம் வலுவான விளையாட்டு அணிகளைப் பெறும். இதனால் ஏராளமானோர் விளையாட்டுத் துறையில் சாதனை படைப்பார்கள். சர்வதேசப் போட்டிகளிலும் தமிழகம் கோலோச்சும் சூழல் ஏற்படும்.
மாநகராட்சிக்கு ஓர் அணி
தமிழகத்தில் தற்போதைய நிலையில் 10 மாநகராட்சிகள் உள்ளன. விரைவில் திண்டுக்கல், தஞ்சாவூர் என இரு புதிய மாநகராட்சிகள் உதயமாகவுள்ளன. இந்த மாநகராட்சிகள் அனைத்தும் ஓர் அணியை பராமரிக்க வேண்டும். உதாரணமாக திருநெல்வேலியில் ஹாக்கி விளையாட்டு பிரபலம் என்றால், அந்த மாநகராட்சி ஓர் ஹாக்கி அணியை பராமரிக்கலாம். இப்படி ஒவ்வொரு மாநகராட்சியும், தங்கள் பகுதியில் பிரபலமாக இருக்கும் விளையாட்டின் அடிப்படையில் ஓர் அணியை பராமரிக்கலாம்.
சென்னை மாநகராட்சியில் கால்பந்து, கேரம், கிரிக்கெட் உள்ளிட்ட போட்டிகளுக்கான அணிகள் 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்துள்ளன. ஆனால் இப்போது எந்த அணியும் இல்லை. விளையாட்டு வீரர்களுக்கும் வேலைவாய்ப்பு அளிக்கப்படுவதில்லை. எனவே சென்னை மாநகராட்சி மீண்டும் விளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து அணிகளை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னை போன்ற பெரிய மாநகராட்சிகள் 3 அல்லது 4 அணிகளைக்கூட பராமரிக்கலாம் என விளையாட்டு வீரர்கள் தெரிவித்தனர்.
ஒளி வீசுமா மின் வாரிய அணி?
தமிழக மின்சார வாரியம் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை வாலிபால், ஹாக்கி, கபடி போன்ற அணிகளை பராமரித்து வந்தது. அப்போதைய காலக்கட்டத்தில் பலம் வாய்ந்த அணியாகத் திகழ்ந்த மின்சார வாரிய அணி, ஏராளமான பதக்கங்களைக் குவித்தது. ஆனால் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு விளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படவில்லை. அதனால் ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்த மின்சார வாரிய அணி, இப்போது போன இடம் தெரியாமல் போய்விட்டது. சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்த மின்சார வாரிய அணியைப் பார்த்தால், அதில் 50 வயது நிறைந்தவர்கள்தான் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
எனவே மின்சார வாரியத்தில் மீண்டும் இளம் விளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து, பொலிவிழந்து போன மின்சார வாரிய அணியை மீண்டும் ஒளி வீசச் செய்ய வேண்டும் என்பதே விளையாட்டு ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago