சென்னை ஓபன்: காலிறுதியில் யூகி, கிரானோலர்ஸ்
போராடி வீழ்ந்தார் ராம்குமார்

By ஏ.வி.பெருமாள்

சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, ஸ்பெயினின் மார்செல் கிரானோலர்ஸ் ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர். காலிறுதிக்கு முந்தைய சுற்றில் யூகி பாம்ப்ரியை எதிர்த்து விளையாடிய இத்தாலியின் ஃபாபியோ ஃபாக்னினி காயம் காரணமாக விலகியதால் அவர் எளிதாக காலிறுதியை உறுதி செய்தார்.

19-வது ஏர்செல் சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. டென்னிஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. போட்டியின் 4-வது நாளான வியாழக்கிழமை சென்டர் கோர்ட்டில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் வைல்ட்கார்ட் வீரரான இந்தியாவின் யூகி பாம்ப்ரியும், போட்டித் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள இத்தாலியின் ஃபாபியா ஃபாக்னினியும் மோதினர்.

ஃபாக்னினி விலகல்

சர்வதேச தரவரிசையில் 16-வது இடத்தில் உள்ள ஃபாக்னினி, சர்வதேச தரவரிசையில் 195-வது இடத்தில் இருக்கும் யூகி பாம்ப்ரிக்கு கடும் சவாலாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 4-வது கேமில் ஃபாக்னினியின் சர்வீஸை முறியடித்து பாம்ப்ரி 3-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார். அடுத்த கேமில் யூகி பாம்ப்ரியின் சர்வீஸை முறியடிக்க போராடிய ஃபாக்னினி, 6-வது கேமில் மீண்டும் தனது சர்வீஸை இழந்தார். இந்த கேமில் ஃபாக்னினி எவ்வித சவாலும் அளிக்காததோடு, வேண்டுமென்றே பந்தை வெளியில் அடித்தார்.

ஃபாக்னினி ஏற்கெனவே காயம் காரணமாக இரட்டையர் பிரிவில் இருந்து விலகியிருந்த நிலையில், 6-வது கேமில் சரியாக ஆடாததால் அவர் போட்டியிலிருந்து விலகலாம் என எதிர்பார்க்கப்பட்டது. முதல் செட்டில் ஃபாக்னினியின் சர்வீஸை இருமுறை முறியடித்த பாம்ப்ரி, 7 கேம்களில் அந்த செட்டை முடிவுக்குக் கொண்டு வந்தார். இதனால் 25 நிமிடங்கள் மட்டுமே நடைபெற்ற இந்த செட் 6-1 என்ற கணக்கில் பாம்ப்ரியின் வசமானது.

பின்னர் நடைபெற்ற 2-வது செட்டின் 4-வது கேமில் யூகி பாம்ப்ரியை ஓடவிட்ட ஃபாக்னினி, அவரின் சர்வீஸை முறியடிக்க முயன்றார். எனினும் விடாப்பிடியாக போராடிய யூகி பாம்ப்ரி, தனது சர்வீஸை மீட்டார். 5-வது கேமில் யூகியிடம் சர்வீஸை இழந்த ஃபாக்னினி, அடுத்த கேமில் யூகியின் சர்வீஸை முறியடித்து பதிலடி கொடுத்தார். இருவரும் 5-5 என சமநிலையில் இருந்தபோது போட்டியிலிருந்து விலகினார் ஃபாக்னினி. அவருடைய இடது தொடைப்பகுதியில் தசைநார் முறிவு ஏற்பட்டதே அவரின் விலகலுக்கு காரணம் ஆகும்.

போஸ்பிஸிலுடன் மோதல்

இதனால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட பாம்ப்ரி, காலிறுதியை உறுதி செய்தார். பாம்ப்ரி தனது காலிறுதியில் போட்டித் தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள கனடாவின் வசேக் போஸ்பிஸிலை சந்திக்கிறார்.

முன்னதாக போஸ்பிஸிலுடன் விளையாடவிருந்த சீனதைபேவின் யென் ஷன் லூவின் வலது தொடையில் ஏற்பட்ட தசைநார் முறிவு காரணமாக அவர் களமிறங்கவில்லை. அதனால் போஸ்பிஸில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் களமிறங்காமலேயே காலிறுதிக்கு முன்னேறினார்.

கிரானோலர்ஸ் வெற்றி

மற்றொரு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஸ்பெயினின் மார்செல் கிரானோலர்ஸும், இந்தியாவின் ராம்குமார் ராமநாதனும் மோதினர். ராம்குமார் தனது முதல் சுற்றில் இந்தியாவின் முன்னணி வீரரான சோம்தேவை வீழ்த்தியிருந்ததால், அவரின் ஆட்டத்தைக்காண சென்னை ரசிகர்கள் குவிந்தனர். உள்ளூர் ரசிகர்களின் ஆதரவோடு விளையாடிய ராம்குமார் அதிவேக சர்வீஸை அடித்தாலும், அதை சிறப்பாக எதிர்கொண்டார் கிரானோலர்ஸ். இதனால் முதல் செட்டின் முதல் கேமிலேயே தனது சர்வீஸை கிரானோலர்ஸிடம் இழந்தார் ராம்குமார்.

அடுத்த கேமில் தனது சர்வீஸை எளிதாக வசப்படுத்திய கிரானோலர்ஸ், 3-வது கேமில் மீண்டும் ராம்குமாரின் சர்வீஸை முறியடிக்கும் முயற்சியில் இறங்கினார். டியூஸ் வரை சென்ற இந்த கேமில் இரு ஏஸ் சர்வீஸ்களை விளாசிய ராம்குமார், கடும் போராட்டத்துக்குப் பிறகு தனது சர்வீஸை மீட்டார். பின்னர் ராம்குமார் ஆக்ரோஷமாக விளையாடியபோதும், மறுமுனையில் அமைதியாக ஆடினார் கிரானோலர்ஸ். ராம்குமாரை ஓடவிட்ட கிரானோலர்ஸ், 5-வது கேமில் மீண்டும் அவரின் சர்வீஸை முறியடித்தார். இதன்பிறகு பதற்றமடைந்த ராம்குமார், முதல் செட்டை 2-6 என்ற கணக்கில் கிரானோலர்ஸிடம் இழந்தார். இந்த செட் 34 நிமிடங்கள் நடைபெற்றது.

போராடிய ராம்குமார்

பின்னர் நடைபெற்ற 2-வது செட்டிலும் முதல் கேமிலேயே ராம்குமாரின் சர்வீஸை முறியடித்து அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தினார் கிரானோலர்ஸ். 5-வது கேமில் ராம்குமார் 2-வது முறையாக தனது சர்வீஸை இழக்க, கிரானோலர்ஸ் 4-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார். இதனால் அடுத்த இரு கேம்களில் போட்டி முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் 6-வது கேமில் கிரானோலர்ஸின் சர்வீஸை முறியடித்து சரிவிலிருந்து மீண்டார் ராம்குமார்.

இதன்பிறகு ஆக்ரோஷமாக ஆடிய ராம்குமார், 8-வது கேமில் மீண்டும் கிரானோலர்ஸின் சர்வீஸை முறியடித்து 4-4 என்ற கணக்கில் சமநிலையை எட்டினார். இதன்பிறகு சுதாரித்துக் கொண்ட கிரானோலர்ஸ் அடுத்த கேமில் ராம்குமாரின் சர்வீஸை முறியடித்ததோடு, 10-வது கேமோடு போட்டியை முடிவுக்கு கொண்டு வந்தார். 1 மணி நேரம் 10 நிமிடங்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில் கிரானோலர்ஸ் 6-2, 6-4 என்ற நேர் செட்களில் ராம்குமாரைத் தோற்கடித்து காலிறுதிக்கு முன்னறினார்.

இந்தப் போட்டியில் அதிகபட்சமாக மணிக்கு 203 கி.மீ. வேகத்தில் சர்வீஸ் அடித்த ராம்குமார், 3 ஏஸ்களையும் அடித்தார். அதேநேரத்தில் கிரானோலர்ஸ் ஒரு ஏஸ் சர்வீஸை மட்டுமே அடித்தார். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் விளையாடிய அனுபவம் பெற்றவரான கிரானோலர்ஸ் இதுவரை 4 ஏடிபி பட்டங்களை வென்றுள்ளார். அவரின் சர்வதேச தரவரிசை 38. ஆனால் முதல்முறையாக ஏடிபி போட்டியில் விளையாடும் 19 வயது ராம்குமாரின் சர்வதேச தரவரிசை 526.

சர்வதேச தரவரிசையில் தன்னைவிட 488 இடங்கள் முன்னிலையில் இருக்கும் கிரானோலர்ஸிடம் ராம்குமார் தோற்றாலும்கூட, அவர் சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார். அவர் பதற்றத்தில் சில தவறான ஷாட்களை அடித்தபோதும்கூட, கிரானோலர்ஸுக்கு நெருக்கடியை ஏற்படுத்தத் தவறவில்லை. சென்னை ஓபனில் 3-வது முறையாக பங்கேற்றுள்ள கிரானோலர்ஸுக்கு இது 6-வது வெற்றியாகும்.

பூரவ் ராஜா ஜோடி தோல்வி

இரட்டையர் காலிறுதிச் சுற்றில் இந்தியாவின் பூரவ் ராஜா-இஸ்ரேலின் டூடி செலா ஜோடி 4-6, 4-6 என்ற நேர் செட்களில் ஸ்வீடனின் ஜோகன் பிரன்ஸ் ட்ரோம்-டென்மார்க்கின் ஃபிரெட்ரிக் நீல்சன் ஜோடியிடம் தோல்வி கண்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

மேலும்