ஆஸி. ஓபன்: ஜோகோவிச் கனவை தகர்த்தார் வாவ்ரிங்கா: இவானோவிச், ஃபெரர் அதிர்ச்சி தோல்வி

By செய்திப்பிரிவு

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதியில் நடப்பு சாம்பியனான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் தோல்வி கண்டு வெளியேறினார். இதன்மூலம் ஆஸ்திரேலிய ஓபனில் தொடர்ச்சியாக 4-வது பட்டம் வெல்லும் ஜோகோவிச்சின் கனவு தகர்ந்தது.

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற காலிறுதியில் உலகின் 8-ம் நிலை வீரரான ஸ்விட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்கா 2-6, 6-4, 6-2, 3-6, 9-7 என்ற செட் கணக்கில் 2-ம் நிலை வீரரான ஜோகோவிச்சை தோற்கடித்தார். இதன்மூலம் ஆஸி. ஓபனில் தொடர்ச்சியாக 3 முறை சாம்பியன் பட்டம் வென்றவரான ஜோகோவிச்சின் தொடர் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

4 மணி நேரம் நடைபெற்ற 5 செட்களைக் கொண்ட இந்தப் போட்டியில் ஜோகோவிச் விடாப்பிடியாக போராடியபோதும், மறுமுனையில் கடுமையாகப் போராடிய வாவ்ரிங்கா இறுதியில் வெற்றி கண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியின் முதல் செட்டை ஜோகோவிச் கைப்பற்ற, அடுத்த இரு செட்களையும் வென்று போட்டியில் த்ரில்லை ஏற்படுத்தினார் வாவ்ரிங்கா. பின்னர் நடைபெற்ற 4-வது செட் ஜோகோவிச் வசமாக, ஆட்டம் 5-வது செட்டுக்கு சென்றது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த செட்டின் ஆரம்பத்தில் வாவ்ரிங்காவின் சர்வீஸை ஜோகோவிச் முறியடித்தார். எனினும் உடனடியாக ஜோகோவிச்சின் சர்வீஸை முறியடித்து வாவ்ரிங்கா பதிலடி கொடுத்தார். இதன்பிறகு ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட 16-வது கேமில் ஜோகோவிச்சின் சர்வீஸை முறியடித்து போட்டியை முடிவுக்கு கொண்டு வந்தார் வாவ்ரிங்கா. இந்தப் போட்டியின் கடைசி செட் மட்டும் 1 மணி நேரம், 19 நிமிடங்கள் நடைபெற்றது.

இந்த வெற்றியின் மூலம் கடந்த ஆண்டில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் மற்றும் அமெரிக்க ஓபனில் ஜோகோவிச்சிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்துள்ளார் வாவ்ரிங்கா. அந்த இரு போட்டிகளும் 5 செட்கள் வரை சென்றது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு ஜனவரி 21-ம் தேதி நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் காலிறுதியில் 5 மணி நேரத்துக்கும் மேலாக போராடிய வாவ்ரிங்கா, அதில் தோற்று கண்ணீர் தோய்ந்த முகத்துடன் வெளியேறினார். இந்த ஆண்டு அதே 21-ம் தேதி நடைபெற்ற காலிறுதியில் ஜோகோவிச்சை வீழ்த்தியிருக்கிறார் வாவ்ரிங்கா. இந்த முறையைப் போன்றே கடந்த முறையும் 5 செட் நடைபெற்றது.

ஆனால் ஒரேயொரு வித்தியாசம் என்னவென்றால், கடந்த முறை போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த முறை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 2006-க்குப் பிறகு இப்போதுதான் ஜோகோவிச்சை வீழ்த்தியிருக்கிறார் வாவ்ரிங்கா.

மேலும் ஜோகோவிச்சின் தொடர் வெற்றிக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டிக்கு முன்னதாக தொடர்ச்சியாக 28 போட்டிகளில் வென்றிருந்தார் ஜோகோவிச். வாவ்ரிங்கா தனது அரையிறுதியில் செக்.குடியரசின் தாமஸ் பெர்டிச்சை சந்திக்கிறார்.

வெற்றி குறித்துப் பேசிய வாவ்ரிங்கா, “ஜோகோவிச் ஒரு வியக்கத்தக்க சாம்பியன். அவர் எப்போதும் எதிராளியை வெல்லவிடமாட்டார். அவரை வீழ்த்தியதில் மிக மிக மிக மகிழ்ச்சி. பாயிண்டுக்குப் பிறகு பாயிண்டை வெல்வதில் தீவிரக் கவனம் செலுத்தினேன். நான் ஆக்ரோஷத்துடன் இருந்தாலும், விட்டுக்கொடுக்கவில்லை. நான் மிகவும் சோர்வடைந்ததால் தசைகளில் வலி ஏற்பட்டது. மேலும் பதற்றமும் ஏற்பட்டது” என்றார்.

பெரர் தோல்வி

மற்றொரு காலிறுதியில்உலகின் 7-ம் நிலை வீரரான செக்.குடியரசின் தாமஸ் பெர்டிச் 6-1, 6-4, 2-6, 6-4 என்ற செட் கணக்கில் உலகின் 3-ம் நிலை வீரரான டேவிட் ஃபெரருக்கு அதிர்ச்சி தோல்வியளித்தார். இதன்மூலம் அனைத்து கிராண்ட்ஸ்லாம் போட்டிகளிலும் அரையிறுதிக்கு முன்னேறியவர் என்ற பெருமையைப் பெற்றார் தாமஸ் பெர்டிச்.

அரையிறுதியில் லீ நா

மகளிர் ஒற்றையர் காலிறுதியில் உலகின் 4-ம் நிலை வீராங்கனையான சீனாவின் லீ நா 6-2, 6-2 என்ற நேர் செட்களில் இத்தாலியின் பிளேவியா பென்னட்டாவைத் தோற்கடித்தார். லீ நா தனது அரையிறுதியில் கனடாவின் யூஜீனி புச்சார்டை சந்திக்கிறார். உலகின் 30-ம் நிலை வீராங்கனையான புச்சார்டு 5-7, 7-5, 6-2 என்ற செட் கணக்கில் 14-ம் நிலை வீராங்கனையான செர்பியாவின் அனா இவானோவிச்சை தோற் கடித்தார்.

சானியா ஜோடி தோல்வி

மகளிர் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் சானியா மிர்சா-ஜிம்பாப்வேயின் காரா பிளாக் ஜோடி 2-6, 6-3, 4-6 என்ற செட் கணக்கில் உலகின் முதல்நிலை ஜோடியான இத்தாலியின் சாரா எர்ரானி-ராபர்ட்டா வின்ஸி ஜோடியிடம் தோல்வி கண்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

40 mins ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்