சச்சின் விளையாட்டுத் துறை அமைச்சராக வேண்டும் - முன்னாள் டெஸ்ட் வீரர் சந்து போர்டே விருப்பம்

By செய்திப்பிரிவு

சச்சின் டெண்டுல்கர் விளையாட்டுத் துறை அமைச்சராக வேண்டுமென்று முன்னாள் டெஸ்ட் வீரர் சந்து போர்டே விருப்பம் தெரிவித்துள்ளார்.

இந்திய, சர்வதேச கிரிக்கெட் அகாடெமி சார்பில் நொய்டாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர் இது தொடர்பாக மேலும் கூறியுள்ளது:

ஓய்வுக்குப் பின் சச்சின் விளையாட்டுத் துறையில் இருந்து ஒதுங்கியிருப்பார் என்று நான் நினைக்கவில்லை. ஏனெனில் விளையாட்டு என்பது அவரது ரத்தத்துடன் கலந்தது. எதிர்காலத்தில் அவரை இந்திய விளையாட்டுத் துறை அமைச்சராகப் பார்க்க விரும்புகிறேன். இந்தியா அனைத்து விளையாட்டுகளிலும் சிறந்து விளங்க அவரால் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

மைதானத்தில் எப்படி ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதை சச்சினிடம் இருந்து இன்றைய இளம் வீரர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். தனக்கு எதிராக நடுவர் தவறாக அவுட் கொடுத்தாலும், எந்தவித எதிர்ப்பும், அதிருப்தியும் தெரிவிக்காமல் அமைதியுடன் சச்சின் வெளியேறுவார். இது அவரது சிறந்த குணநலன்களில் ஒன்று என்றார்.

1989-ம் ஆண்டு சச்சின் தனது சர்வதேச கிரிக்கெட் பயணத்தைத் தொடங்கியபோது சந்து போர்டே, இந்திய அணியின் மேலாளராக இருந்தார். கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழு தலைவராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE