பல்கலை. கபடி: புதுகை மன்னர் கல்லூரி சாம்பியன்

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளுக்கு இடையிலான மகளிர் கபடி போட்டி புதுக்கோட்டை மன்னர் கல்லூரி மைதானத்தில் 2 நாட்கள் நடைபெற்றது. இதில் திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், கரூர், அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து 27 கல்லூரிகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றன.

நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரி அணி 43-23 என்ற புள்ளிகள் கணக்கில் ஒரத்தநாடு உறுப்புக்கல்லூரியை வீழ்த்தி சாம்பியன் ஆனது. வெற்றி பெற்ற அணிகளுக்கு பல்கலைக்கழக விளையாட்டுச் செயலர் ஏ.பழனிச்சாமி, அணிகளின் ஒருங்கிணைப்பாளர்கள் என்.விஜயரகுநாதன், மகாலட்சுமி, கல்லூரி உடற்கல்வி இயக்குநர் அ.சி.நாகேஸ்வரன் ஆகியோர் சான்றிதழ், பரிசுகளை வழங்கினர்.

தென்னிந்திய விளையாட்டுப் போட்டி: லயோலா, பாரதியார் பல்கலை. வெற்றி

சென்னை

கோவை காருண்யா பல்கலைக்கழகம் சார்பில் 22-வது தென்னிந்திய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்று வருகின்றன. இதில் 2-வது நாளான நேற்று நடைபெற்ற ஹாக்கிப் போட்டியில் சென்னை லயோலா கல்லூரி, பாரதியார் பல்கலை. உள்ளிட்ட அணிகள் வெற்றி பெற்றன.

கால்பந்து போட்டியில் அண்ணாமலை பல்கலை., கோவை ராமகிருஷ்ணா மிஷன், சென்னை ஜேப்பியார் கல்லூரி உள்ளிட்ட அணிகளும், ஆடவர் வாலிபால் போட்டியில் கோவை பி.எஸ்.ஜி.டெக், டாக்டர் என்.ஜி.பி.டெக் அணிகளும், மகளிர் வாலிபால் போட்டியில் சென்னை எத்திராஜ் கல்லூரி அணியும் வெற்றி கண்டன. ஆடவர் கபடி போட்டியில் தமிழ்நாடு விளையாட்டு பல்கலை. அணியும், கூடைப்பந்து போட்டியில் எஸ்.ஆர்.எம். பல்கலை., திரிச்சூர் கேரள வர்மா அணிகளும், ஹாக்கிப் போட்டியில் இரிஞ்சாலகுடா கிறிஸ்து கல்லூரி அணியும் வெற்றி பெற்றன.



தேசிய அளவிலான கபடி: கேரளா, கோவா அணிகள் வெற்றி

புதுச்சேரி

மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கான தேசிய அளவிலான கபடி போட்டி புதுவையில் நேற்று தொடங்கியது.விளையாட்டுத்துறை அமைச்சர் தியாகராஜன் தொடங்கிவைத்த இந்தப் போட்டி வரும் 10ம் தேதி வரை புதுவை உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் நடக்கிறது.

21 மாநிலங்களில் இருந்து 294 பேர் இந்தப் போட்டியில் கலந்துகொண்டுள்ளனர். மத்திய பணியாளர் ஆணைய மேற்பார்வையில் நடக்கும் இப்போட்டிக்காக சர்வதேச தரத்துடன் கூடிய ஆடுகளம் அமைக்கப்பட்டுள்ளது.

தொடக்க நாள் போட்டியில் கோவா அணி 27-7 என்ற கணக்கில் தெலங்கானா அணியையும், கேரள அணி 51-17 என்ற கணக்கில் சத்தீஸ்கரையும், ஒடிசா அணி 65-15 என்ற கணக்கில் ஹைதராபாதையும், ஹரியாணா 65-15 என்ற கணக்கில் கர்நாடகத்தையும் தோற்கடித்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE