தோனி நல்ல கேப்டன்தான் ஆனால் தனக்குப் பிடித்தது கங்குலி என்கிறார் யுவராஜ் சிங்

தோனி நன்றாகவே கேப்டன்சி செய்து வந்தாலும் தனக்குப் பிடித்த கேப்டன் சவுரவ் கங்குலியே என்று யுவராஜ் சிங் கூறியுள்ளார்.

ஆங்கில நாளிதழ் ஒன்றில் அவர் இது குறித்து கூறியிருப்பதாவது:

"எனக்குப் பிடித்த கேப்டன் சவுரவ் கங்குலியே. அவரிடமிருந்து நான் நிறைய கற்றுக் கொண்டேன், அவரது கேப்டன்சியில் என்னுடைய பேட்டிங் திறமைகள் செழுமை பெற்றது. அயல்நாட்டில் நாம் வெற்றி பெற முடியும் என்ற உணர்வை எங்களிடம் ஏற்படுத்தியவர் கங்குலி. அதே போல் கேரி கர்ஸ்டன் ஒரு அபாரமான பயிற்சியாளர், அவரது பயிற்சியின் கீழும் நான் சிறப்பாக விளையாடினேன்" என்றார்.

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் 90களின் இறுதியில் முதல் சர்வதேச ஒருநாள் போட்டியில் விளையாடிய இளம் யுவராஜ் சிங் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 80 பந்துகளில் 84 ரன்கள் விளாசியதும், அதே போட்டியில் விளையாடிய அறிமுக வீரர் ஜாகீர் கான் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதும் இந்திய வெற்றிக்கு வித்திட்டது.

அதன் பிறகு யுவராஜ் சிங்கின் கிரிக்கெட் கிராஃப் மேலே சென்றது. 2011 உலகக் கோப்பை தொடர் நாயகன் பரிசுடன் அவரது ஒருநாள் ஆட்டம் உயர் பீடத்திற்குச் சென்றது.

ஆனால் சமீபத்தில் வங்கதேசத்தில் நடந்த டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் 21 பந்துகளில் 11 ரன்கள் எடுத்து அணியின் தோல்விக்குக் காரணமாக அவர் மீது ரசிகர்கள் பாய்ந்தனர்.

சில ரசிகர்கள் கோபத்தின் உச்சக்கட்டத்தில் அவர் வீட்டின் மீது கல்வீச்சும் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

"அந்தப் போட்டி குறித்து அவர் கூறும்போது, "அந்த இறுதிப் போட்டிக்குப் பிறகு ரசிகர்கள், விமர்சகர்கள் அனைவரும் என் மீது பாய்ந்தனர். பந்து மட்டைக்கு வேகமாக வரவில்லை, ஸ்ட்ரோக் பிளே கடினமாக அமைந்தது, இலங்கை பவுலர்களை ஏன் ஒருவரும் பாராட்டவில்லை?" என்கிறார் யுவராஜ் சிங்.

தோனி பற்றிக் குறிப்பிடுகையில், “தற்போது 3 வடிவங்களிலும் தோனி சிறப்பாகவே கேப்டன்சி செய்து வருகிறார். இந்திய வெற்றிகள் பலவற்றில் அவரது பங்களிப்பு அதிகம், பின் எதற்கு மாற்ற வேண்டும்?” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE