ஹேமில்டனில் நடைபெற்ற 4-வது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூஸிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-2 என்று சமன் செய்தது.
டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட் செய்து 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 279 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய நியூஸிலாந்து அணி மார்டின் கப்திலின் அதிரடியில் (180 நாட் அவுட், 15 பவுண்டரிகள் 11 சிக்சர்கள்) 45-வது ஓவரில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 280 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்று இன்னமும் ஒரு போட்டி மீதமிருக்க 2-2 என்று ஒருநாள் தொடரை சமன் செய்துள்ளது.
உலகக்கோப்பை 2015-ல் மார்டின் கப்தில் அடித்த இரட்டைச் சதத்திற்கு எந்த விதத்திலும் குறைவில்லாத அதிரடி இன்னிங்ஸ் ஆகும் இது. இதன் மூலம் இலக்கை விரட்டும் போது தனிப்பட்ட முறையில் எடுத்த அதிகபட்ச ஸ்கோரில் 4-வது இடம் பிடித்தார் கப்தில், அதாவது ஷேன் வாட்சனின் 185, தோனியின் 183 நாட் அவுட், விராட் கோலியின் 183 ஆகிய மகாவிரட்டல் இன்னிங்ஸிற்குப் பிறகு மார்டின் கப்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக விரட்டலில் அதிகபட்ச ரன்களை எடுத்து சாதனை புரிந்தார்.
138 பந்துகளைச் சந்தித்த மார்டின் கப்தில் 15 பவுண்டரிகல் 11 சிக்சர்களுடன் 180 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்து நியூஸிலாந்தை வெற்றிக்கு இட்டுச் சென்றார். 45-வது ஓவரில் இம்ரான் தாஹிரை மிட்விக்கெட் மற்றும் நேராக இரண்டு மிகப்பெரிய சிக்சர்களை அடித்து ஆட்டத்தை ஆகிருதியுடன் முடித்தார் கப்தில். அதிக சிக்சர்களுக்கான சாதனையையும் சமன் செய்தார் அவர். 11-ல் குறைந்தது 3 சிக்சர்கள் மைதானத்துக்கு வெளியே சென்றது. 126 ரன்களை பவுண்டரி, சிக்சர்களிலேயே விளாசினார்.
கப்திலின் 12-வது ஒருநாள் சதம் 82 பந்துகளில் வந்தது. 62-ல் பிரிடோரியஸ் பந்தில் எல்.பி.என்று நடுவரால் தீர்ப்பளிக்கப்பட்டு ரிவியூவில் தப்பினார் கப்தில். ஆனால் அவர் ஷாட்களில் அதிக சக்தி இருந்தது. பார்னெலை பெரிய சிக்சரையும் மோரிஸை அதைவிட பெரிய சிக்சர்களையும் அடித்த கப்தில் 38 பந்துகளில் அரைசதம் கண்டார். அடுத்த 50 ரன்கள் 44 பந்துகளில். உண்மையில் சொல்லப்போனால் தென் ஆப்பிரிக்க கேப்டன் டிவில்லியர்ஸ், கப்திலை நிறுத்தும் வழிதெரியாது விழித்தார் என்றே கூற வேண்டும்.
கேன்வில்லியம்சுடன் (21) இணைந்து 2-வது விக்கெட்டுக்காக 72 ரன்களையும் டெய்லருடன் (66) இணைந்து 3-வது விக்கெட்டுக்காக 187 ரன்களையும் சேர்த்தார். டெய்லர் பெரும்பாலும் திணறினாலும் மிட்விக்கெட்டில் ஒரு மிகப்பெரிய சிக்சருடன் அரைசதம் கண்டார்.
தென் ஆப்பிரிக்கா அணி வேகப்பந்து வீச்சாளர்கள் மெதுவான பந்துகள், யார்க்கர்களை வீசமுடியவில்லை, மாறாக வேகமாக வீசியதால் கப்திலின் மட்டைச் சுழற்றலுக்குச் சிக்கினர். டுமினியின் 3 ஓவர்கள் 26 ரன்களுக்குச் சென்றது. பிரிடோரியஸ் 8 ஒவர்களில் 55 ரன்கள் கொடுத்தார். ரபாடா சிக்கனமாக வீசி 8 ஓவர்களில் 41 ரன்கள் விட்டுக் கொடுத்தார். பார்னெல் 7 ஓவர்களில் 44 ரன்கள்.
டிவில்லியர்ஸின் இறுதிகட்ட அதிரடி:
டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி அதிர்ச்சிகரமாக குவிண்டன் டி காக் (0) விக்கெட்டை ஜீதன் படேலிடம் இழந்தது. முதல் ஓவரே ஜீதன் படேல் வீசினார், டி காக் விக்கெட் கீப்பர் ரோங்கியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஹஷிம் ஆம்லா தனது அபார பேட்டிங் மூலம் டிரெண்ட் போல்ட், சவுதியை அருமையாக ஆடி 38 பந்துகளில் 6 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 40 ரன்கள் எடுத்த நிலையில் ஜீதன் படேல் பந்தில் பவுல்டு ஆனார். 13-வது ஓவரில் தென் ஆப்பிரிக்கா 66/2 என்று இருந்த போது நியூசிலாந்து தென் ஆப்பிரிக்காவை நெருக்கியது. நீஷம், சவுதி கட்டர்களை இடையில் வீச தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட்டுகளை 30 ரன்களுக்கு இழந்தது. டுமினியின் திருப்தியற்ற தொடராக இது அமைய சவுதி பந்தில் 25 ரன்களுக்கு வெளியேறினார். டுபிளெசிஸ் தனது 67 ரன்களுக்கு 97 பந்துகளைச் சந்தித்தார். இவர் நீஷம் பந்தில் வெளியேறினார். டேவிட் மில்லர் டீப் மிட்விக்கெட்டில் அவுட் ஆனார். பிரிடோரியஸ் ரன் அவுட் ஆனார்.
அப்போது டிவில்லியர்ஸ் பின்கள வீரர்களைக் கொண்டு 158/6 என்ற நிலையிலிருந்து கட்டமைக்க வேண்டியிருந்தது. 12 ஓவர்கள் பவுண்டர்களே அடிக்க முடியாதக் கட்டத்தை டிவில்லியர்ஸ் கடந்து வந்து 37 பந்துகளில் 27 ரன்கள் என்று ஆடிவந்தார். பிறகு சாண்ட்னரை டீப் மிட்விக்கெட்டுக்கு மேல் சிக்ஸ் ஆடித்து தன் பாணிக்க்குத் திரும்பினார். கடைசி 8 ஓவர்களில் 100 ரன்கள் விளாசப்பட்டது. கிறிஸ் மோரிஸ், வெய்ன் பார்னெல் ஆகியோர் முறையே 28 மற்றும் 29 ரன்களைப் பங்களிப்புச் செய்ய டிவில்லியர்ஸ் 59 பந்துகளில் 4 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 72 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக திகழ்ந்தார். ரிவர்ஸ் ஷாட்களை இருமுறை திறமையாகப் பயன்படுத்தினார் டிவில்லியர்ஸ், அதுவும் போல்ட் வீசிய பந்து ஒன்றை ரிவர்ஸ் ஷாட்டில் பவுண்டரி அடித்தது அசத்தல். சவுதி, போல்ட் பின்னால் கொஞ்சம் ரன்களைக் கசியவிட்டனர். சாண்ட்னர் வழக்கம் போல் அருமையாக வீசி 40 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 1 விக்கெட்டையும் ஜீதன் படேல் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். சவுதி, போல்ட் இருவரும் 70 ரன்களை விட்டுக் கொடுத்தனர்.
ஆட்ட நாயகனாக மார்டின் கப்தில் தேர்வு செய்யப்பட்டார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago