இப்போட்டியின் ஆட்ட நாயகனாகவும், தொடர் நாயகனாகவும் ரோஹித் சர்மா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பெங்களூரில் இன்று (சனிக்கிழமை) நடந்து முடிந்த போட்டியில், இந்திய அணி 57 ரன்களில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.
இப்போட்டியில் 384 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 45.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 326 ரன்களை எடுத்துத் தோல்வியடைந்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக பாக்னர் 116 ரன்கள் குவித்தார். மேக்ஸ்வெல் 60 ரன்கள் சேர்த்தார். வாட்சன் 49 ரன்களும், ஹிதின் 60 ரன்களும் எடுத்தனர். ஹூகிஸ் 23 ரன்களை எடுத்தார். மெக்கே 18 ரன்கள் எடுத்தனர். ஏனையோர் சொற்ப ரன்களே எடுத்தனர்.
இந்தியா அதிரடி... ரோஹித் வான வேடிக்கை!
முன்னதாக, ரோஹித் சர்மாவின் அபார இரட்டைச் சதத்தின் துணையுடன் இந்திய அணி தனது இன்னிங்ஸ்சில் 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 383 ரன்கள் குவித்தது.
தீபாவளியையொட்டி, ஆடுகளத்தில் வான வேடிக்கைக் காட்டி, கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார் ரோஹித் சர்மா. அதன் மூலம், ஆஸ்திரேலியாவுக்கு 384 ரன்கள் என்ற மிகக் கடினமான வெற்றி இலக்கு நிர்ணியிக்கப்பட்டது.
துவக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா அபாரமாக பேட் செய்து, 158 பந்துகளில் 209 ரன்கள் குவித்து, அணியின் ரன் எண்ணிக்கையை வெகுவாகக் கூட்டினார். ரோஹித் விளாசலில் 16 சிக்ஸர்களும், 12 பவுண்டரிகளும் அடங்கும்.
ரோஹித் சர்மா உலக சாதனை...
இந்தப் போட்டியில் சர்வதேச ஒருநாள் போட்டியில் இரட்டைச் சதம் அடித்த மூன்றாவது வீரர் என்ற உலக சாதனையை ரோஹித் சர்மா படைத்தார்.
இவருக்கு முன்பு ஒருநாள் போட்டிகளில் இரட்டைச் சதமடித்தவர்கள் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் மற்றும் வீரேந்திர சேவாக் ஆகியோர் ஆவர்.
அத்துடன், ஒருநாள் போட்டியில் ஒரே இன்னிங்ஸ்சில் அதிக சிக்ஸர்கள் என்ற சாதனையையும் அவர் புரிந்தார். ஆஸ்திரேலியாவின் ஷேன் வாட்சனின் சாதனை இதன் மூலம் அவர் முறியடித்தார்.
ரோஹித்துடன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய தவாண் 60 ரன்களை எடுத்தார். கேப்டன் மகேந்திர சிங் தோனி 38 பந்துகளில் 62 ரன்கள் சேர்த்தார். சுரேஷ் ரெய்னா 28 ரன்களையும், யுவராஜ் சிங் 12 ரன்களையும் எடுத்தனர். விராட் கோலி ரன் ஏதும் எடுக்காமல் ரன் அவுட் ஆனார்.
"200 ரன்கள் எடுத்ததில் மகிழ்ச்சி. விக்கெட்டை இழக்காமல் விளையாட எண்ணினேன். பெங்களூர் மைதானம் சிறியது. இதில் விளாசுவது சுலபம். அந்த வாய்ப்புகளை நான் பயன்படுத்திக்கொண்டேன்" என்றார், ரசிகர்களுக்கு தீபாவளி விருந்து படைத்த ரோஹித் சர்மா.
முந்தைய 6 போட்டிகளில் இரு ஆட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், இரு அணிகளும் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் இருந்த நிலையில், இந்தக் கடைசி போட்டியில் வென்றால் மட்டுமே தொடரைக் கைப்பற்ற முடியும் என்ற இக்கட்டான நிலையில் இரு அணிகளும் களம் கண்டது குறிப்பிடத்தக்கது.