ஜெர்மனிக்கு அதிர்ச்சி அளித்து யூரோ 2016 இறுதியில் பிரான்ஸ்!

By ஆர்.முத்துக்குமார்

ரசிகர்களுக்கு விறுவிறுப்பு விருந்து

யூரோ 2016 கால்பந்து தொடரின் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் ஜெர்மனியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரான்ஸ் அணி இறுதிக்குள் நுழைந்தது.

ஆண்டாய்ன் கிரீய்ஸ்மேனின் 2 கோல்கள் மட்டுமே ஜெர்மனிக்கு எதிராக அமைந்தது. மற்றபடி ஜெர்மனி அணியினர் இன்னொரு முறை இப்படியொரு வெற்றி நமக்குத் தேவையில்லை என்று பிரான்ஸ் அணி நினைக்குமளவுக்கு படுத்தி எடுத்தனர். மொத்தத்தில் உயர்ரக கால்பந்தாட்டத்தின் முழு விறுவிறுப்பையும் ரசிகர்களுக்கு விருந்தாக அளித்த போட்டி இது என்றால் அது மிகையல்ல.

மற்ற ஆட்டங்களுக்கும் கால்பந்துக்கும் உள்ள பெரிய வித்தியாசம் என்னவெனில் ஒரு அணி அன்றைய தினத்தில் ஆதிக்கம் செலுத்துகிறதா அல்லது ஆதிக்கத்துக்கு உட்படுகிறதா என்பதல்ல விஷயம், வெற்றி தோல்விகளைத் தீர்மானிப்பது பிற காரணிகளே.

அதிர்ஷ்டம் அல்லது தனிநபர் சாதனை என்று எப்படி வேண்டுமானாலும் அது அமையலாம். பிரான்ஸுக்கு இந்த ஆட்டத்தில் இரண்டின் கலவையே ஜெர்மனிக்கு எதிரான ஓர் அரிய வெற்றியைப் பெற்றுத் தந்துள்ளது. அதாவது அதிர்ஷ்டமோ திடீர் திறமையோ பளிச்சிடும் போது அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள ஒரு அணி எப்போதும் தயாராக இருக்க வேண்டும். இதுதான் ஸ்போர்ட்ஸில் 'ஸ்பிரிட் - உத்வேகம்' என்று கருதப்படுகிறது. அந்த ஸ்பிரிட் பிரான்ஸிடம் காணப்பட்டது.

எதிரணி எவ்வளவு திறமையான அணியாக இருந்தாலும் எவ்வளவு அச்சுறுத்தல் அணியாக இருந்தாலும் நேரம், காலம் கூடி வரும் போது கடவுளின் புன்னகை எந்த அணியினரை நோக்கி வீசுகிறதோ அந்த அணிக்கு வெற்றி கைகூடும். பிரான்ஸுக்கு அத்தகைய தருணமாகும் இது.

18 ஆண்டுகளுக்கு முன்னதாக பிரேசிலின் அதிரடி 'மொட்டை' ரொனால்டோவை சந்தித்த பிரான்ஸ் அணி தற்போது இறுதியில் இன்னொரு (கிறிஸ்டியானோ) ரொனால்டோவை எதிர்கொள்கிறது.

இதனால், தற்போது தங்கள் சொந்த மண்ணில் யூரோ 1984, உலகக்கோப்பை 1998-க்குப் பிறகு கோப்பையை வெல்ல பிரான்ஸுக்கு வாய்ப்பு கிட்டியது.

ஜெர்மனி அணியில் போடெங், ஹெக்டர், ஷ்வெய்ன்ஸ்டெய்ஜர், முல்லர், பொடோல்ஸ்கி போன்ற சிறந்த வீரர்கள் இருந்தனர். பிரான்சில் போக்பா, மட்டூய்டி, கிரீய்ஸ்மேன், லோரிஸ், கிரவுட் என்று நம்பிக்கை நட்சத்திரங்கள் இருந்தனர். இதில் ஆட்டத்தின் 61-வது நிமிடத்தில் போடெங் காயமடைந்ததும் ஜெர்மனிக்கு சற்றே அயர்ச்சியை ஏற்படுத்தியது.

தொடக்க நிமிடங்களிலேயே இரு அணிகளின் ஆட்டத்திலும் தீப்பொறி பறந்தது. 3-வது நிமிடத்தில் பிரான்ஸுக்கு இடது புறம் கார்னர் கிடைத்தது. அந்த ஷாட் பெனால்டி பகுதி வரை பயேட்டினால் வந்தது அங்கு ஜெர்மனி அதனை தடுத்தது.

ஆனால் மட்டூய்டி, கிரீய்ஸ்மேன் சேர்க்கை ஜெர்மனிக்கு தொல்லைகளை கொடுக்கத் தொடங்கியது. இடது புறம் இருவரும் பந்தை மாறி மாறி ஒருவருக்கு ஒருவர் அனுப்பி வேகமாக முன்னேறினர். பிறகு அருமையாக பந்தை பாக்ஸின் ஓரத்துக்கு தள்ளி பிறகு அவரே மின்னல் வேகத்தில் பந்தை வலதுகாலுக்கு மாற்றி ஒரு உதை உதைத்தார், ஜெர்மனி கோல் கீப்பர் நியூயருக்கு இடது புறம் குறிவைத்தார் கிரீய்ஸ்மேன் ஆனால் நியூயர் என்றால் சும்மாவா, ஃபுல் டைவ் அடித்து கோலை முறியடித்தார். இது உண்மையில் கிரீய்ஸ்மேன் ஏற்படுத்திய அச்சுறுத்தல் மூவ் ஆகும்.

11-வது நிமிடத்தில் ஜெர்மனி வலது புறம் இத்தகைய தாக்குதலை மேற்கொண்டது கிம்மிஸ் அடித்த கிராஸ் தடுக்கப்பட்டது, ஆனால் ஜெர்மனியும் தங்கள் வேலைகளைக் காட்டத் தொடங்கியது. இதற்கு அடுத்த கணத்திலும் கிம்மிச், முல்லர் சேர்க்கையில் ஜெர்மனி பிரான்ஸ் கோல் அருகே அச்சுறுத்தியது. 14-வது நிமிடத்தில் ஜெர்மனியின் கேன் அடித்த ஷாட்டை பிரான்ஸ் கோல் கீப்பர் ஹியூகோ லோரிஸ் வலது புறம் பாய்ந்து தடுத்தார். இதற்கு அடுத்து 15-வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் போக்பா, ஒரு மரடோனா வேலையைச் செய்தார், ஜெர்மனி வீரர் கேனைக் கடந்து தனிப்பட்ட முறையில் 50 அடிகள் பந்தை வேகமாக எடுத்து வந்தார், ஆனால் கடைசியில் கிம்மிச்சினால் எதிர்கொள்ளப்பட்டார்.

இப்படியே ஆட்டம் விறுவிறுப்பின் உச்சகட்டத்தில் இருந்தது. 19-வது நிமிடத்தில் மட்டூய்டியை ஏமாற்றி குரூஸ் பந்தை பிரான்ஸின் கோல் பகுதிக்குள் சென்று கோல் நோக்கி அடித்த ஷாட் அடிக்க முற்பட்டபோது போக்பா அவரை முறையற்ற விதத்தில் தடுத்தார், ஜெர்மனி பெனால்டி கேட்டது, ஆனால் பாக்சிற்கு வெளியே ப்ரீ கிக் அளித்திருக்க வேண்டும், ஆனால் நடுவர் அசரவில்லை.

20,25 நிமிடங்களில் ஆட்டம் பிரான்ஸுக்கு கடும் நெருக்கடியாக அமைந்தது. 25-வது நிமிடத்தில் 25 அடியிலிருந்து ஷ்வெய்ன்ஸ்டெய்ஜர் பிரான்ஸ் தடுப்பாட்ட வீரர்களுக்கு மேல் தூக்கி அடித்தார் ஆனால் பிரான்ஸ் கோல் கீப்பர் லோரிஸ் அதனை பாருக்கு மேலே தள்ளி விட்டார். 32-வது நிமிடத்திலும் ஜெர்மனி அணியினர் பிரான்ஸின் கோல்பகுதிக்குள் பல குழப்பங்களை விளைவித்தனர், ஆனாலும் பிரான்ஸ் மீண்டது, இதைத்தான் அதிர்ஷ்டம் என்று கூறுகிறோம்.

முதல் கோல் வந்த அதிர்ஷ்ட கணம்:

45-வது நிமிடத்தில் பிரான்ஸ் பெற்ற கார்னர் ஷாட் ஜெர்மனி கோல் அருகே இருந்த ஈவ்ராவுக்கு உயரமாக வர அவர் பந்தை தலையால் முட்டினார், அங்குதான் அதிர்ஷ்ட தேவதை பிரான்ஸை நோக்கி புன்னகைத்தாள். கார்னர் ஷாட் வாய்ப்பு கிடைக்க பிரான்ஸ் வீரர் ஈவ்ராவை கவர் செய்யும் முயற்சியில் ஜெர்மனி கேப்டன் ஷ்வெய்ன்ஸ்டெய்ஜர் இருந்தார், ஆனால் ஈவ்ரா, ஷ்வெய்ன்ஸ்டெய்ஜர் இருவரும் கார்னர் ஷாட்டை தங்கள் வசம் கொண்டு வர எம்பினர் அப்போது ஷ்வெய்ன்ஸ்டெய்ஜர் கையில் பந்து பட்டது. ஆனால் இவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை, பிரான்ஸ் வீரரும் கையில் அடிக்க வேண்டும் என்று அடிக்கவில்லை, முழுக்க முழுக்க அந்தக் கணத்தினால் தீர்மானிக்கப்பட்ட ஆட்டத்தின் விதியானது. பெனால்டி ஏரியாவில் கையில் வாங்கியதால் பெனால்டி கிக் பிரான்ஸுக்கு அளிக்கப்பட்டது. கிரீய்ஸ்மேன் அதனை நியூயருக்கு வலது புறம் பக்கவாட்டு பாத உதையினால் கோலுக்குள் செலுத்தினார். அவ்வளவு நெருக்கடிக்குப் பிறகு பிரான்ஸுக்கு அதிர்ஷ்ட கோல் வாய்ப்பு முதல் கோலாக அமைந்தது.

இதுதான் கால்பந்தின் எதேச்சைத் தன்மை. 10-வது நிமிடம் முதல் 43-வது நிமிடம் வரை ஜெர்மனி முழுக்கட்டுப்பாட்டில் இருந்தது, ஆதிக்கம் செலுத்தியது, அச்சுறுத்தியது ஆனால் கடைசியில் ஒரேயொரு அறியாப்பிழை பிரான்ஸ் முதல் கோலை அடித்தது. கால்பந்துக்கேயுரிய விநோதம்!

இடைவேளைக்குப் பிறகு பிரான்ஸுக்கு தொடக்கத்தில் கார்னர் வாய்ப்பு கிடைத்தது பயேட் அடித்தார், ஆனால் வர்ணனையாளர்கள் நகைச்சுவையாக ஷ்வெய்ன்ஸ்டெய்ஜரின் கைகள் பந்திலிருந்து பத்தடி தள்ளியிருந்தது என்று கூறினர்.

இரண்டாவது பாதியும் முதல் பாதியின் நகல் என்றே கூற வேண்டும் ஜெர்மனி வசம் பந்து இருந்தது கடும் முயற்சிகள், அச்சுறுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டன. 72-வது நிமிடத்தில் மீண்டும் பிரான்ஸ் பக்கம் அதிர்ஷ்ட தேவதை. கொஞ்சம் ஜெர்மனி வீரர்கள் பக்கமும் தவறு இருந்தது. ஆட்டத்தின் 72வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர்கள் 3, 4 பேர் அருகில் இருக்கும்போதே ஜெர்மனி தங்கள் பகுதியில் தங்கள் கோல் கீப்பருக்கு அருகிலேயே பந்தை வைத்திருந்தனர், வெளியே அனுப்பியிருந்தால் இந்த கோல் வந்திருக்காது, ஆனால் முஸ்டபியும் ஜோஷுவா கிம்மிச்சும் தங்கள் கோலுக்கு அருகிலேயே பந்தை தங்களுக்கு இடையே ஆடிக் கொண்டிருக்க அருகிலிருந்த பிரான்ஸ் வீரர் போக்பா இருவருக்கிடையே தன் காலை விட்டு பந்தை தன் வசம் கொண்டு வந்தார், கோலுக்கு அருகே இடது புறம் அவர் ஜெர்மனி வீரர்களுக்கு போக்குக் காட்டினார், பிறகு கிரவ்திடம் பந்தை அனுப்ப அவரது முயற்சியை ஜெர்மனி கோல் கீப்பர் நியூயர் சரியாக முறியடிக்கவில்லை, அப்போது கிரீய்ஸ்மேன் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு உள்ளே புகுந்து 2-வது கோலை அடித்தார்.

இது பற்றி கிரீய்ஸ்மேன் கூறும்போது, "பால் போக்பா அருமையாக கடைந்தெடுத்தார், பந்து எனக்குத்தான் வரும் என்று நான் காத்திருந்தேன். பந்து வந்தது" என்றார்.

2-வது கோலை பிரான்ஸ் அடிக்க ஜெர்மனியின் ரத்தம் சூடேறியது. தூரத்திலிருந்து ஜெர்மனியின் கிம்மிஸ் அடித்த ஷாட் நூலிழையில் கோல் போஸ்டில் பட்டுச் சென்றது.. டிராக்ஸ்லரின் ஃப்ரீ கிக் பிரான்ஸ் கோல் அருகே வந்தது. குரூஸ் ஒரு அருமையான நகர்வை தலைமையேற்க பந்து ஹவீடஸிடம் வர அவர் தலையால் முட்டியது மேலே சென்றது. பிறகு இஞ்ஜுரி நேரத்தில் கிம்மிச் தலையால் முட்டிய பந்தை பிரான்ஸ் கோல் கீப்பர் மிக அருமையாகத் தடுத்தார். இது ஆட்டத்தின் சிறந்த தடுப்பாகக் கருதப்படுகிறது. லாங் விசில் ஊதப்பட்டது, ஜெர்மனி கடுமையான சவால் அளித்து, இரண்டே தவறினால் வெளியேறியது. ஒன்று பெனால்டி பகுதியில் பந்தை எம்பித் தடுக்கும் முயற்சியில் ஷ்வெய்ன்ஸ்டெய்ஜர் கையை உயர்த்தி பந்தை கையில் வாங்கியது, 2-வது பந்தை வெளியே அடித்து விரட்டாமல் தங்கள் கோல் அருகிலேயே பந்துடன் விளையாடியது. இந்த இரண்டு தருணங்களையும் பிரான்ஸ் அருமையாக பயன்படுத்திக் கொண்டது.

ஆட்டம் முடிந்தவுடன் ஜெர்மனி பயிற்சியாளர் ஜோக்கிம் லோவிடம் ஜெர்மனி செய்த தவறென்ன என்று கேட்டபோது, "நத்திங்" என்று கூறியதன் அர்த்தம் என்னவென்று நமக்குப் புரிகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்