ஆசியக் குத்துச் சண்டையில் அநீதி இழைக்கப்பட்ட சரிதா தேவி விளையாடத் தடை

இந்தியக் குத்துச் சண்டை வீராங்கனை சரிதா தேவி விளையாட சர்வதேச குத்துச் சண்டை கூட்டமைப்பு தற்காலிக தடை விதித்துள்ளது.

இன்சியானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு மகளிர் குத்துச் சண்டை பிரிவில் இந்திய வீராங்கனை சரிதா தேவிக்கு அநீதி இழைக்கப்பட்டது. இதனையடுத்து அவர் வெண்கலப்பதக்கத்தை பெற்றுக் கொள்ள மறுத்தார்.

இது பெரிய சர்ச்சைகளைக் கிளப்பிய நிலையில் சர்வதேச குத்துச் சண்டை கூட்டமைப்பு அடுத்த அறிவிப்பு வரும் வரை சர்வதேச குத்துச் சண்டைக் கூட்டமைப்பின் கீழ் நடைபெறும் எந்த போட்டியிலும் விளையாடக்கூடாது என்று தற்காலிகத் தடை விதித்துள்ளது.

அதோடு மட்டுமல்லாமல் சரிதா தேவியின் பயிற்சியாளர்கள் குர்பக்‌ஷ் சிங் சாந்து, பிளாஸ் இக்லீசியாஸ், சாகர் மால் தயால், ஆகியோருக்கும் தடை விதித்துள்ளது.

கொரியாவில் இதே ஆண்டில் நடைபெறவிருக்கும் மகளிர் உலக சாம்பியன் குத்துச் சண்டைப் போட்டிகளில் சரிதா தேவி பங்கேற்க முடியாது. இதில் பங்கேற்பது அவரது கனவாக இருந்து வந்தது. இப்போது சர்வதேச குத்துச் சண்டை கூட்டமைப்பின் இத்தகைய முடிவு அவரை பெரிய அளவுக்கு பாதித்திருக்கும் என்று கூறலாம்.

இன்சியான் ஆசிய விளையாட்டு போட்டியில் 60கிலோ உடல் எடைப்பிரிவினருக்கான குத்துச் சண்டை அரையிறுதியில் கொரிய வீராங்கனை ஜினா பார்க் என்பவரை ஆதிக்கம் செலுத்தினார் சரிதா தேவி. ஆனால் நடுவர் சரிதா தேவி தோற்றதாக தீர்ப்பளித்ததையடுத்து கொதிப்படைந்தார். வெண்கலப்பதக்கத்தை வாங்க மறுத்தார்.

ஆனால் இதற்காக அவர் ஆசிய ஒலிம்பிக் கூட்டமைப்பிடம் மன்னிப்பும் கேட்டார். அமைப்பும் அவரை கடுமையாக எச்சரித்தது.

சரிதா தேவியின் எழுத்துபூர்வ மன்னிப்புக் கடிதத்தை கவனத்தில் கொண்ட பிறகும் சர்வதேச குத்துச் சண்டை கூட்டமைப்பு சரிதா தேவி விளையாடத் தடை விதித்திருப்பது விளையாட்டு ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE