வங்கதேச ஸ்பின்னர்களை குறைவாகக் கருத முடியாது: இந்திய ஆதிக்கம் தொடருமா?

By ராமு

வங்கதேச அணி இந்திய மண்ணில் முதல் டெஸ்ட் போட்டியை நாளை ஆடவிருக்கிறது. அந்த அணி சமீப காலங்களில் நல்ல முன்னேற்றம் கண்டு வந்துள்ளது. அதற்கு இந்திய ரசிகர்கள் போலவே வங்கதேச ஆக்ரோஷ ரசிகர்களும் ஒரு காரணம்.

இந்நிலையில் நாளை (வியாழன்) ஹைதராபாத்தில் உலகின் நம்பர் 1 டெஸ்ட் அணியை நம்பர் 9 அணியான வங்கதேசம் எதிர்கொள்வது இருதரப்பு ரசிகர்களின் ஆவலைத் தூண்டியுள்ளது.

ஐசிசி-யில் ‘எதிர்காலப் பயணத்திட்டம்’ (FTP) அறிமுகமான 2001-ம் ஆண்டு முதல் இந்தியா நீங்கலாக அனைத்து முழு உறுப்பு அணிகளும் வங்கதேசத்துடன் இருதரப்பு தொடரை தங்கள் மண்ணில் நடத்தியுள்ளனர். இந்நிலையில் முதல் இருதரப்பு டெஸ்ட் தொடரில் ஆடும் வங்கதேசம் இங்கு வரும்போது வங்கதேசத்தை ஒருபொருட்டாகவே கருதாத பிசிசிஐ நிர்வாக அதிகாரிகள் இப்போது பதவி காலியாகிச் சென்றுள்ளனர். உண்மையில் வங்கதேசத்தை அழைக்க பிசிசிஐ பராமுகம் காட்டியது என்பதே உண்மை. பாகிஸ்தான் கிரிக்கெட் சீரழிவிற்கு எப்படி பிசிசிஐ ஒரு காரணமோ அதே போல் வங்கதேச கிரிக்கெட் அணியை இங்கு அழைக்காததும் பிசிசிஐ-யின் பணபலம், அதிகாரபலத்தை உணர்த்தும் தருணங்களாகும்.

இதனால்தான் இரு அணிகளுக்குமான பகைமை ஒருநாள் போட்டிகளில் கடுமையாக வெளிப்பட்டது, இந்திய அணிக்கு சரிசமமாக இந்த வடிவத்தில் வங்கதேசம் சவால்களை அளித்தது. இதே கோபதாபங்களை டெஸ்ட் போட்டிக்கு, இந்திய மண்ணில் கொண்டு வருவது கடினம். ஆனால், ஒருநாள் போட்டிகளில் காட்டிய அதே உத்வேகம் சவால்களை வங்கதேசம் இங்கு காண்பிக்காது என்பதற்கும் உத்தரவாதமில்லை.

இங்கிலாந்தை தங்கள் சொந்த மண்ணில் வீழ்த்தியது வங்கதேசம், இந்த அணியின் புதிய ஆஃப் ஸ்பின்னர் மெஹதி ஹசன் மிராஸ் தான் வேறு ஒரு மட்டத்திற்கான ஸ்பின்னர் என்பதை இந்தத் தொடரில் நிரூபித்தார், இவரது பிளைட், பல்வேறு விதமான லெந்த்கள், வேகங்கள், பந்தை பிட்ச் செய்யும் சரியான இடம், பேட்ஸ்மென் கண்ணில் மண்ணைத்தூவும் பவுலிங் உத்தி ஆகியவை வெகுவாகப் பாராட்டப்பட்டுள்ளது என்பதை இந்திய அணி மறுத்துவிட முடியாது.

சமீபத்தில் நியூஸிலாந்தில் ஷாகிப் அல் ஹசன் இரட்டைச் சதத்தையும், முஷ்பிகுர் ரஹிம் 150 ரன்களையும் எடுத்து ரெக்கார்ட் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளனர், தமிம் இக்பால், சவுமியா சர்க்கார், மஹமுதுல்லா, ஷாகிப் உல் ஹசன், முஷ்பிகுர் என்று அந்த பேட்டிங் வரிசை ஓரளவுக்கு சவால் அளிக்கக் கூடியதே.

ஆனால் கடந்த முறை கோலி தலைமையில் வங்கதேசம் சென்ற போது ஃபாதுல்லாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் வங்கதேசத்தை வருண பகவான் தோல்வியிலிருந்து காப்பாற்றினார். அஸ்வின் பந்து வீச்சில் திணறினர் என்பதில் இருவேறு கருத்துகள் இல்லை. மேலும் உமேஷ் யாதவ்வின் உயிரோட்டமான வேகப்பந்து வீச்சும் இசாந்த் சர்மாவின் திணறவைக்கும் பவுன்ஸும் வங்கதேசத்துக்கு புதிய பிரதேசத்தைக் காட்டின என்பதையும் அந்த அணி மறந்திருக்க வாய்ப்பில்லை.

ஆனால் தொடக்கத்தில் ஆட்டம் காணும் ஜோடியுடன் நடுக்கள, பின்கள வீரர்கள் வலுவுடன் இறங்கும் இந்திய அணியை ஏதாவது வங்கதேசம் அச்சுறுத்த முடியுமெனில் அது அவர்கள் பவுலிங்கைக் கொண்டுதான் என்பதில் ஐயமில்லை. ஆனாலும் மிகப்பெரிய இந்தத் தருணத்தில் இந்தியாவுக்கு எதையும் வங்கதேசம் எளிதாக்காது என்பதை நம்பலாம்.

இங்கு வந்து ஆடிய தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து, இங்கிலாந்து அணிகளை விட சற்றே கூடுதல் சவால்களை வங்கதேசம் அளிக்கும் என்றே தெரிகிறது. கோலியை விரைவில் வீழ்த்தினால் மெஹதி ஹசன் மிராஸ், ஷாகிப் அல் ஹசன், தைஜுல் இஸ்லாம் ஆகியோரை வைத்து இந்தியாவை அது மிரட்ட வாய்ப்புள்ளது. ஹைதராபாத் மைதானத்தில் நன்றாக அனுபவம் பெற்ற இடது கை வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹிம் இல்லாதது அந்த அணிக்கு ஒரு பின்னடைவே.

இந்திய அணியில் விஜய், ரஹானே, விருத்திமான் சஹா விளையாடுவார்கள், 5 பவுலர்களில் நிச்சயம் ஜெயந்த் யாதவ்வின் ஆல்ரவுண்ட் திறமைக்கே முதலிடம் அளிக்கப்படும் என்று நம்பலாம், அல்லது ஹர்திக் பாண்டியாவை ஒரு ஆல்ரவுண்டராக வளர்க்க இந்த டெஸ்ட் போட்டியில் அவருக்கு வாய்ப்பளிக்கலாம். ஆனால் எதுவும் இன்னமும் முடிவாகவில்லை. கருண் நாயர் முச்சதம் அடித்து அடுத்த டெஸ்ட்டே உட்கார வேண்டியிருப்பது துரதிர்ஷ்டமே. ஆனால் ரஹானேவுக்கு இது சோதனைக் காலம் என்பதை அவர் அறிந்து செயல்படுவது நல்லது. இங்கிலாந்துக்கு எதிராக மிக அலட்சியமாக ஆடி அவுட் ஆனார் என்பதையும் அவர் நினைவில் கொள்வது நல்லது.

அஸ்வின் 250 விக்கெட்டுகளை அதிவேகமாக வீழ்த்தினார் என்ற சாதனை நிகழ்த்த இன்னும் 2 விக்கெட்டுகளே உள்ளன. டெனிஸ் லில்லி 250 விக்கெட்டுகளை 48 டெஸ்ட் போட்டிகளில் கைப்பற்றியதே இதுவரை சாதனையாக உள்ளது. வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் அஸ்வினின் 45-வது டெஸ்ட் என்பது குறிப்பிடத்தக்கது. வியாழன் காலை 9.30 மணிக்கு இந்த டெஸ்ட் போட்டி தொடங்குகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்