முதல் டி20: தோனி நின்றும் ஜிம்பாப்வேயிடம் இந்தியா தோல்வி

By இரா.முத்துக்குமார்

ஹராரேயில் நடைபெற்ற ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை 2 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே வீழ்த்தியது.

முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி சிகும்பராவின் கடைசி கட்ட தாறுமாறு இன்னிங்சினால் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய இந்திய அணி கடைசி ஓவரில் வெற்றிக்குத் தேவைப்படும் 8 ரன்களை ‘பினிஷர்’ தோனி இருந்தும் எடுக்க முடியாமல் 168 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி தழுவியது.

கடைசி ஓவரை வீசிய வேகப்பந்து வீச்சாளர் நெவில் மட்சிவா என்பவர் அருமையாக வீசினார். அக்சர் படேலும், தோனியும் களத்தில் இருந்தனர். 20-வது ஓவரின் முதல் பந்தை தோனிக்கு அவர் வீசியபோது முதல் பந்தை ஓங்கி அடித்தார் தோனி ஆனால் லாங் ஆஃபில் 1 ரன் மட்டுமே கிடைத்தது. லெக் திசையில் பவுண்டரிகள் பெரிது என்பதால் தோனி 2 ரன்களாகவே ஓடி முடித்துவிடுவார் என்று தெரிந்த மட்சிவா ஆஃப் திசையில் டீப் பாயிண்ட் வைத்துக் கொண்டு வைடு யார்க்கர்களாக வீசினார்.

2-வது பந்து அக்சர் படேல் ஆட்டமிழந்தார், இந்தப் பந்தை உண்மையில் சிக்சருக்குத் தூக்கியிருக்க வேண்டும், ஆனால் ஷாட்டில் பவர் இருந்தும் பந்து காற்றில் எழும்பிச் செல்லவில்லை. இதனால் அவர் லாங் ஆஃபில் கேட்ச் ஆனார். தோனி இப்போது கிராஸ் செய்திருந்தார். புதிய பேட்ஸ்மென் ரிஷி தவண் இறங்கினார், இவருக்கு இது அறிமுக போட்டியாகும். மட்சிவா தோனிக்கு வைடு யார்க்கரை வீசினார் தோனி 1 ரன் எடுத்திருக்கக் கூடாது, ஆனால் ரிஷி தவணை நம்பி ஒரு ரன் எடுத்து விட்டார். 4-வது பந்து மட்சிவாவின் அருமையான யார்க்கர், ரிஷி தவணால் ரன் எடுக்க முடியவில்லை. 5-வது பந்து நடுவர் டிஃபினால் மிகமிகத் தவறாக வைடு என்று அறிவிக்கப்பட்டது. மீண்டும் 5-வது பந்தை மட்சிவா வீச ஆஃப் ஸ்டம்புக்கு வெளியேயான ஃபுல் பந்து, தவண் இதனை சிங்கிள் எடுத்தார்.

கடைசி பந்து வெற்றிக்குத் தேவை 4 ரன்கள், தோனி ஸ்ட்ரைக்கில், மிகவும் பிரபலமான சூழ்நிலை இது. மீண்டும் ஃபுல் லெந்தில் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே ஒரு பந்து தோனி அதனை பவுண்டரி அடிக்க முடியவில்லை நேராக பீல்டரிடம் சிக்கியது 1 ரன்னே வந்தது. ஜிம்பாப்வே அபார வெற்றி பெற்றது. கடைசி ஓவர் வரை இழுத்தடித்த தோனி 17 பந்துகளில் 19 ரன்களை எடுத்து அதில் ஒரேயொரு பவுண்டரி மட்டுமே எடுத்தது தோல்விக்கு முக்கியக் காரணமானது.

ரிஷி தவணுக்கு சிங்கிள் எடுத்துக் கொடுக்காமல் தோனியே ஆடியிருக்க வேண்டும், ஆனால் ஏனோ தோனி சிங்கிள் ஓடினார். அறிமுக ஆட்டத்தில் ஆடும் ரிஷி தவணை நெருக்கடி தருணத்தில் ஆடவிட்டது தோனியின் தவறு. தோல்வியில் முடிந்தது. ஜிம்பாப்வே 1-0 என்று முன்னிலை.

முன்னதாக மற்றொரு அறிமுக வீரர் கே.எல்.ராகுல் முதல் பந்திலேயே திரிபானோ பந்தை தேர்ட்மேன் திசையில் திருப்பி விட நினைத்தார் பந்து மட்டையின் உள்விளிம்பில் பட்டு பவுல்டு ஆனது. மந்தீப் சிங் 5 பவுண்டரிகளை விளாசி 27 பந்துகளில் 31 ரன்கள் எடுக்க, அம்பாத்தி ராயுடு 16 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 19 ரன்கள் எடுக்க இருவரும் இணைந்து 5.5 ஓவர்களில் 2-வது விக்கெட்டுக்காக 44 ரன்களைச் சேர்த்தனர். அப்போது ராயுடு மேலேறி வந்து அவசரக்குடுக்கை தனமாக ஒரு பெரிய சுற்று சுற்ற பந்து அவரைத் தாண்டி சென்றது ஆஃப் ஸ்டம்ப் இடம்பெயர்ந்தது.

மந்தீப் சிங் கவர் திசையில் அடிக்க நினைத்து கடைசியில் லாங் ஆஃபில் கேட்ச் கொடுத்து வெளியேற இந்தியா 53/3 என்று தடுமாற்றம் கண்டது.

கேதர் ஜாதவ் (19 ரன்கள் ஒரு பவுண்டரி 1 சிக்ஸ்). மணீஷ் பாண்டே ஸ்கோரை 90 ரன்களுக்கு உயர்த்தினர், அப்போது கேதர் ஜாதவ்வும் திருப்திகரமில்லாத ஷாட் ஒன்றில் பவுல்டு ஆகி வெளியேறினார்.

மணிஷ் பாண்டே, தோனி இணைந்தனர். இருவரில் மணிஷ் பாண்டே ஆக்ரோஷம் காட்டி 3 சிக்சர்கள் ஒரு பவுண்டரி அடிக்க 35 பந்துகளில் 48 ரன்கள் எடுத்த நிலையில் களைப்படைந்த ஷாட் ஒன்றில் அவுட் ஆனார். பாண்டியின் உதவியுடன் தோனியின் நிதானமும் இணைய 5 ஓவர்களில் 53 ரன்கள் வந்தது. ஆனால் தோனி நிறைய 2 ரன்களை வேகமாக ஓடியதால் பாண்டே உண்மையில் களைப்படைந்தார், அவரது ஷாட்டும் களைப்பான ஒரு ஷாட்டாகவே அமைந்தது.

இந்த 2 ரன்கள் ஓடுவதை விளையாட்டுத்தனமாக தோனி பலகாலமாகச் செய்து வருகிறார், இதனால் பவுண்டரி பந்துகளை அவர் சரியாக கணிக்க முடியாமல் போய் வருகிறது, மணீஷ் பாண்டே ஆட்டமிழந்தவுடன் அக்சர் படேல் 2 அற்புதமான சிக்ஸர்களுடன் 9 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து கடைசி ஓவரில் முக்கியக் கட்டத்தில் ஆட்டமிழக்க இந்தியா 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 168 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி தழுவியது.

தோனி 17 பந்துகளில் 1 பவுண்டரியுடன் 19 ரன்களை மட்டுமே எடுத்து பரிதாபமாக நாட் அவுட்டாக இருந்தார்.

எல்டன் சிகும்பராவின் தாக்குதல்:

முன்னதாக ஜிம்பாப்வே அணி மசகாட்சா (25), சிபாபா (20) ஆகியோர் மூலம் 4.3 ஓவர்களில் 33 ரன்கள் என்ற நல்ல தொடக்கம் கண்டது. சிபாபா, ரிஷி தவணிடம் பவுல்டு ஆக, முதும்பாமி காயத்தினால் ரிட்டையர்டு ஆனார். முன்னதாக பும்ராவிடம் மசகாட்சா அவுட் ஆக, ஜிம்பாப்வே 6.6 ஓவர்களில் 50 ரன்கள் எடுத்தது. சிகந்தர் ரசா, வாலர் இணைந்து 5.4 ஓவர்களில் 47 ரன்கள் சேர்த்தனர். வாலர் 21 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து சாஹலிடம் வீழ்ந்தார். ரசா 20 ரன்களில் பாண்டே தோனி கூட்டணியில் ரன் அவுட் ஆனார்.

ஆனால் எல்டன் சிகும்பரா ஆடிய ஆட்டம் உண்மையில் அபாரமான அதிரடியாகும். 1 பவுண்டரி 7 சிக்சர்களுடன் 26 பந்துகளில் 54 ரன்களை அவர் பின்னி எடுத்தார். முதலில் 15-வது ஓவரில் அவர் சாஹலை லாங் ஆஃபில் ஒரு சக்தி வாய்ந்த ஷாட்டில் சிக்ஸ் அடித்தார். பிறகு சாஹலில் அடுத்த ஓவரில் கவர் திசையில் ஒரு சிக்ஸ் அடித்தார், இது அழகான சிக்ஸ். மீண்டும் இதே ஓவரில் இறங்கி வந்து லாங் ஆஃபில் ஒரு சிக்ஸ். 19வது ஓவரில் ஜெயதேவ் உனட்கட் சிக்க முதலில் ஒரு பவுண்டரி பிறகு ஓவர் பிட்ச் மிடில் ஸ்டம்ப் பந்தை ஒரு அசுர அடி அடிக்க பந்து மைதானத்தை விட்டு வெளியே சென்றது. அதே ஓவரில் மீண்டும் மிட்விக்கெட்டில் ஒரு சிக்ஸ் விளாசினார்.

20-வது ஓவரை பும்ரா வீச சிகும்பரா இவரையும் விட்டு வைக்கவில்லை. லாங் ஆஃபில் தாழ்வான புல்டாஸை சிக்சராக மாற்றினார், மீண்டும் ஒரு வேகம் குறைவாக வந்த பந்தை மீண்டும் ஒரு சிக்ஸ். 54 ரன்களை இவர் விளாசியதால் கடைசி 5 ஓவர்களில் ஜிம்பாப்வே 59 ரன்களை நொறுக்கியது. இதில் கடைசி 3 ஓவர்களில் 40 ரன்கள். இந்திய தரப்பில் பும்ரா மட்டுமே கடைசி ஓவர் நீங்கலாக சிக்கனமாக வீசி 24 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அக்சர் படேல் ஸ்பின்னர்கள்ல் அதிசிக்கனமாக வீசி 4 ஓவர்களில் 18 ரன்களுக்கு 1 விக்கெட்டைக் கைப்பற்றினார்.

ஆட்ட நாயகனாக எல்டன் சிகும்பரா தேர்வு செய்யப்பட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்