ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக ஆடி பெரிய அளவில் ரன் குவிப்பது பற்றியும், சதமடிப்பது பற்றியும் விராட் கோலியிடம் இருந்து கற்றுக்கொண்டேன் என சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்தார்.
பெங்களூரில் நேற்று முன்தினம் நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியைத் தோற்கடித்து சாம்பியன் ஆனது.
முதலில் ஆடிய கொல்கத்தா அணியில் கேப்டன் கம்பீர் 52 பந்துகளில் 80 ரன்கள் குவிக்க அந்த அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய சூப்பர் கிங்ஸ் அணியில் ரெய்னா 62 பந்துகளில் 8 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 109 ரன்கள் குவிக்க, 18.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் குவித்து வெற்றி கண்டது.
தொடர் நாயகன் விருது வென்ற ரெய்னா பேசுகையில், “சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய 7 ஆண்டுகளில் நிறைய விஷயங்களை கற்றிருக்கிறேன். ஆரம்பகாலத்தில் மேத்யூ ஹேடன், மைக் ஹசி, பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளம்மிங் ஆகியோரிடம் இருந்து கற்றுக்கொண்ட விஷயங்கள் என்னை முதிர்ச்சியான கிரிக்கெட் வீரராக மாற்றியது.
இந்திய அணிக்காக விளையாடுகிறபோது விராட் கோலி அசத்தலாக ஆடி சதமடித்து அணியை தூக்கி நிறுத்துவதை பார்த்து அவரிடம் இருந்தும் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன். தோனியுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடியதையும் மறக்க முடியாது. இதேபோல் யுவராஜ் சிங்கின் பெயரையும் குறிப்பிட விரும்புகிறேன்” என்றார்.
கொல்கத்தாவுக்கு எதிரான வெற்றி குறித்துப் பேசிய ரெய்னா, “இதுபோன்ற இறுதிப் போட்டிகளில் சிறப்பாக ஆடி ரன் குவிப்பது மிக முக்கியமானது. கொல்கத்தா அணி 20 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டதாக நினைக்கிறேன். கடைசி வரை களத்தில் நின்று அணிக்கு வெற்றி தேடித்தர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.
குல்தீப் யாதவ், யூசுப் பதான், பியூஷ் சாவ்லா ஆகியோரின் பந்துவீச்சை ஏற்கெனவே எதிர் கொண்டிருந்ததால் இந்த ஆட்டத் தி்ல் அவர்களுடைய பந்து வீச்சை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என நினைத்தேன்” என்றார்.
3 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கோப்பையை வென்றிருப்பது குறித்துப் பேசிய ரெய்னா, “சூப்பர் கிங்ஸின் வெற்றிக்கு முக்கியக் காரணம் அணியின் சூழல்தான். மெக்கல்லம், டூ பிளெஸ்ஸி, பிராவோ போன்ற வீரர்கள் எங்கள் அணியில் உள்ளனர். அதனால் நல்ல சூழல் எங்கள் அணியில் இருக்கிறது” என்றார்.
கேப்டன் தோனி மகிழ்ச்சி
அணியின் ஒட்டுமொத்த செயல்பாடு மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்த சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி, “மொத்தத்தில் இறுதிப்போட்டி மிக அற்புத மானதாக அமைந்தது. எதிரணியின் பந்துவீச்சாளர்களுக்கு இந்தப் போட்டி கடினமானதாக அமைந்துவிட்டது. அதே நேரத்தில் எங்களின் பீல்டிங் சொல்லிக் கொள்ளும்படியில்லை. ஆரம்பத்தில் சில கேட்சுகளை கோட்டைவிட்டுவிட்டோம்” என்றார்.
5 விக்கெட்டுகள் வீழ்த்திய பவன் நெகியை வெகுவாகப் பாராட்டிய தோனி, “அவர் பந்தை மெதுவாக தூக்கி வீசுவதற்கு பயப்படவில்லை. எதிரணி பேட்ஸ்மேன்களை வீழ்த்துவதற்கு இதுபோன்று பந்துவீசுவது மிக முக்கியமானது. குல்தீப் யாதவும் பந்தை தூக்கி வீசுவதற்கு பயப்படவில்லை. அவர் தனது பல்வேறு வகையான பந்துவீச்சை உபயோகிக்கிறார்” என்றார்.
கம்பீர் பெருமை
தனது அணியின் செயல்பாடு குறித்து பெருமை கொள்வதாகக் கூறிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் கவுதம் கம்பீர், “180 ரன்கள் என்பது நல்ல ஸ்கோர்தான். ஆனால் 2-வது இன்னிங்ஸின்போது பனிப்பொழிவு இருந்ததால் பந்துவீச்சாளர்களுக்கு சிக்கலானது. இந்த முறை இறுதிச்சுற்று வரை முன்னேறி யதற்காக கொல்கத்தா வீரர்கள் அனைவரும் பெருமைப்பட வேண்டும். அடுத்த முறை இதைவிட சிறப்பாக செயல்படுவார்கள்” என்றார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago