"பவர் ஹிட்டிங்" மே.இ.தீவுகள் அபார வெற்றி: இந்தியாவை வீழ்த்தி இறுதிக்குள் நுழைவு

By இரா.முத்துக்குமார்

மும்பையில் நடைபெற்ற உலகக்கோப்பை டி20 அரையிறுதியில் இந்திய அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அணி இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை சந்திக்கிறது.

193 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கைத் துரத்திய மே.இ.தீவுகள் அணி 19.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்று இந்தியாவை வெளியேற்றி இறுதியில் இங்கிலாந்தைச் சந்திக்கிறது.

கடைசி 2 ஓவர்களில் 20 ரன்கள் தேவை என்ற நிலையில் நெஹ்ரா, பும்ரா, பாண்டியா ஓவர்கள் முடிய, அஸ்வினுக்கு பதிலாக தோனி ஜடேஜாவிடம் பந்தைக் கொடுக்க, 19-வது ஓவரில் முதல் 4 பந்துகளில் 2 ரன்களையே கொடுத்தார் ஜடேஜா, ஆனால் மீண்டும் ஒரு லெந்த் பந்து விழ ரசல் அதனை நேராக சிக்ஸ் அடித்தார். அதோடு இல்லாமல் கடைசி பந்தை கவர் திசையில் சக்தி வாய்ந்த ஷாட் ஒன்றை ரசல் ஆடி பவுண்டரியும் அடிக்க அந்த ஓவரில் 12 ரன்கள் வந்தது.

கடைசி ஓவரில் 8 ரன்கள் தேவை என்ற நிலையில் ஏற்கெனவே விக்கெட் ஒன்றையும் கைப்பற்றிய விராட் கோலியிடம் கடைசி ஓவர் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அவர் 2 பந்துகளில் 1 ரன்னையே கொடுத்தார், ஆனால், 3-வது பந்தை ஸ்கொயர் லெக் இடைவெளியில் பவுண்டரி அடித்தார் ரஸல், பிறகு 4-வது லெந்த் பந்தை டீப் மிட்விக்கெட்டில் மிகப்பெரிய சிக்ஸ் அடிக்க அதுவே வெற்றி ஷாட்டாக அமைய மே.இ.தீவுகளின் கொண்டாட்டம் தொடங்கியது.

சிம்மன்ஸின் அதிர்ஷ்டம்:

ஆட்ட நாயகனான சிம்மன்ஸ் மூன்று முறை தப்பிப் பிழைத்தார். ஒரு முறை அஸ்வின் பந்தில் பும்ராவிடம் கேட்ச் கொடுக்க அது நோபாலாக அமைந்தது பிழைத்தார், மீண்டும் ஒரு முக்கியக் கட்டத்தில் பாண்டியா பந்திலும் கேட்ச் கொடுத்தார், கேட்சும் பிடிக்கப்பட்டது, ஆனால் அதுவும் நோபால் ஆனது.

கடைசியில் 18-வது ஓவரில் பும்ரா பந்தை லாங் ஆனில் சிம்மன்ஸ் சுழற்ற ஜடேஜா பவுண்டரி அருகே ஓடி வந்து கேட்சைப் பிடித்தார், பேலன்ஸ் தவறிய தருணத்தில் பந்தை கோலிக்கு கொடுக்க கோலி அதனை கேட்ச் பிடித்தார், ஆனால்... ரீப்ளேயில் ஜடேஜா பந்தைப் பிடித்த போது எல்லைக்கோட்டை மிதித்தது தெரியவந்தது, இதனால் அது சிக்ஸ் ஆனது.

கெயில் சோபிக்கவில்லை:

தொடக்கத்தில் 2-வது ஓவரில், அதாவது, பும்ரா தனது முதல் ஓவரின் முதல் பந்திலேயே அபாய அதிரடி வீரர் கெய்ல் (5) விக்கெட்டை பவுல்டு முறையில் கைப்பற்றினார்.

3-வது ஓவரில் ஆஷிஷ் நெஹ்ரா 8 ரன்கள் எடுத்த அடுத்த அபாய வீரர் மர்லன் சாமுவேல்ஸ் விக்கெட்டை வீழ்த்தினார், சாமுவேல்ஸ் மோசமான ஷாட் தேர்வு செய்ய ஆஃப் திசையில் ரஹானேயிடம் கேட்ச் ஆனது. 19/2 என்ற நிலையிலிருந்து சிம்மன்ஸ், சார்லஸ், ரஸல் திரும்பிப் பார்க்கவில்லை.

சிம்மன்ஸ், சார்லஸ் ஜோடி சேர்ந்து புரட்டல்:

2 விக்கெட்டுகளுக்குப் பிறகு ஜோடி சேர்ந்த சிம்மன்ஸ், சார்லஸ் ஜோடி இந்திய பந்து வீச்சை புரட்டி எடுத்தனர், அஸ்வின், ஜடேஜா, பாண்டியா என்று இவர்களிடம் சிக்கினர், எல்லாம் லெந்த் பந்துகளை வீசி வீசி வாங்கிக் கட்டிக் கொண்டனர், ஆனால், சார்லஸ், சிம்மன்ஸ் அருமையான அதிரடியைக் காண்பித்தனர், ஒவ்வொரு ஷாட்டும் கண்கொள்ளாக் காட்சியாகும்.

இருவரும் இணைந்து 10.1 ஓவர்களில் 97 ரன்களை விளாசினர் இதில் சிம்மன்ஸ், சார்லஸ் இருவரும் சரிசமமாக 47 ரன்களை முறையே பங்களிப்பு செய்தனர்.

சார்லஸ் 36 பந்துகளில் 7 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 52 ரன்கள் எடுத்து 14-வது ஓவரில் விராட் கோலியின் பந்தில் அவுட் ஆனார். இதுவும் திருப்பு முனையாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அடுத்து இறங்கிய ரசல், சிம்மன்ஸுடன் இணைந்து அடுத்த 6.3 ஓவர்களில் 80 ரன்களை விளாசியதில் இந்திய அணியினால் ஒன்றும் செய்ய முடியவில்லை, அஸ்வின் 2 ஓவர்களில் 20 ரன்களைக் கொடுத்தார், மீண்டும் கொண்டு வரப்படவில்லை, ஜடேஜா 4 ஓவர்கள் 48 ரன்கள். முதல் 3 ஓவர்களில் 15 ரன்கள் கொடுத்த நெஹ்ரா கடைசி ஓவரில் 9 ரன்களை கொடுத்தார், இந்த ஓவரும் இந்திய அணிக்கு முக்கியத் தருணத்தில் பின்னடைவை ஏற்படுத்தியது, ஹர்திக் பாண்டியா தொடர்ந்து லெந்த் பந்துகளை வேகமாக வீச அவர் 4 ஓவர்களில் 43 ரன்களையும் பும்ரா 4 ஓவர்களில் 42 ரன்களையும் கொடுத்தனர்.

லெண்டில் சிம்மன்ஸ் 51 பந்துகளில் 7 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் 82 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ, அதிரடி மன்னன் ஆந்த்ரே ரசல் 20 பந்துகளில் 3 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 43 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். மொத்தம் 20 பவுண்டரிகள் 11 சிக்சர்கள் அதாவது 146 ரன்கள் ஓடாமலேயே எடுக்கப்படும் அளவுக்கு இந்திய பந்து வீச்சு புரட்டி எடுக்கப்பட்டது. ஆனால் பவர் ஹிட்டிங் என்றால் என்ன என்பதை மே.இ.தீவுகள் இன்று காண்பித்தது.

இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் மே.இ.தீவுகளின் ஆடவர், மகளிர் அணிகள் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது.



மீண்டும் விராட் கோலியின் ‘மாஸ்டர் கிளாஸ்’ : இந்தியா 192 ரன்கள் குவிப்பு

முன்னதாக முதலில் பேட் செய்ய அழைக்கப்பட்ட இந்திய அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 192 ரன்கள் குவித்தது.

முதல் ஓவர் 6 ஓவர்களில் 55/0, 10 ஒவர்களில் 86/1, 15 ஓவர்களில் 127/1; 20 ஓவர்களில் 192/2. இதுதான் ரோஹித், ரஹானே, விராட் கோலி, தோனி ஆகியோர் இன்னிங்ஸைக் கட்டமைத்த விதம்.

விராட் கோலி 47 பந்துகளில் 11 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 47 பந்துகளில் 89 ரன்களை அடித்து நொறுக்கி 89 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். பவுண்டரி, சிக்ஸ் தவிர விக்கெட்டுகளுக்கு இடையே விரைவில் ஓடி 2 ரன்களை அதிகம் எடுத்தார் கோலி, ஓட்டம் கோலியின் பேட்டிங்கில் புதிதாக சேர்ந்துள்ள அம்சம், இந்தப் போட்டியிலும் அது அவருக்கு தகைந்தது. மே.இ.தீவுகள் ஒரு விதத்தில் அவரது ஓட்டத்தைக் கண்டு வெறுப்படைந்தது என்றே கூற வேண்டும்.

ஆனால் இதற்கும் அவர்கள் தங்களைத் தாங்களே குற்றம் சுமத்திக் கொள்ள வேண்டியதுதான்.

கோலிக்கு அடுத்தடுத்து ரன் அவுட் வாய்ப்பை கோட்டை விட்ட மே.இ.தீவுகள்:

ஆட்டத்தின் 9-வது ஓவரில்தான் விராட் கோலிக்கு இந்த ‘சான்ஸ்’ வழங்கப்பட்டது. முதலில் பவுன்சர் போட்ட பிராவோவுக்கு நோ-பால் கொடுக்கப்பட்டு ஃப்ரீ ஹிட் அளிக்கப்பட்டது, அந்தப் பந்தை கோலியால் அடிக்க முடியவில்லை பந்து அவரைக் கடந்து செல்ல, கோலி ஒரு ரன் எடுக்கலாம் என்று முன்னேறி வர, ரஹானே அவரைத் திருப்பி அனுப்ப, முதலில் விக்கெட் கீப்பர் அடித்த த்ரோ நூலிழையில் ஆஃப் ஸ்டம்பைத் தவற விட்டது, தாண்டி வந்த பந்தை பவுலர் பிராவோ எடுத்து அடிக்கும் போது கூட விராட் வெளியில்தான் இருந்தார், ஆனால் பிராவோவின் த்ரோவும் நூலிழையில் ஸ்டம்பைத் தவற விட 1 ரன்னில் இரண்டு வாய்ப்புகள் நழுவியது.

இதை விடவும் கொடுமை, அடுத்த பந்தை லெக் திசையில்தட்டி விட்டு 2-வது ரன்னுக்காக ஓடி வந்தார், அப்போது லெண்டில் சிம்மன்ஸ் அடித்த த்ரோவை ராம்தின் சரியாக சேகரிக்கவில்லை, அவர் ஒழுங்காகச் சேகரித்திருந்தால் கோலி ரன் அவுட் ஆகியிருப்பார், இது கடந்த அவுட் வாய்ப்பை விட மேலும் எளிதானது. இந்த 2 வாய்ப்புகளையும், அதாவது 3 வாய்ப்புகளையும் மே.இ.தீவுகள் கோட்டை விட்டதன் பலனை இறுதியில் அனுபவித்தனர்.

டேரன் சமியின் புதிர் கேப்டன்சி:

முதல் ஓவரை ஆந்த்ரே ரசல் வீசினார், நன்றாகவே வீசினார் ஒரு பீட்டனுடன் 2 ரன்களே வந்தது. 2-வது ஓவரை பத்ரி வீசினார் 4 ரன்களே வந்தது. ஆனால் திடீரென 3-வது ஓவரை பிராத்வெய்ட்டிடம் கொடுக்க முதல் பந்து அல்வா போன்ற ஓவர் பிட்ச் பந்தை லாங் ஆனில் அலட்சியமாக பெரிய வலுவெல்லாம் இல்லாமல் அனாயாசமாக தூக்கி சிக்ஸ் அடிக்க, மே.இ.தீவுகளுக்கு சாத்துமுறை தொடங்கியது.

அந்த ஓவரில் 9 ரன்கள். ஏன் பந்து வீச்சு மாற்றம் செய்தார் என்று புரியவில்லை. உடனே 4-வது ஓவரில் இடது கை ஸ்பின்னர் சுலைமான் பென்னைக் கொண்டு வந்தார். ரோஹித் கவரில் ஒரு பவுண்டரியையும் பிறகு சக்தி வாய்ந்த ஸ்வீப் ஷாட்டில் ஒரு பவுண்டரியையும் விளாசினார். அந்த ஓவரில் 11 ரன்கள். மீண்டும் ஏனோ பத்ரியைக் கொண்டு வந்தார் சமி. அந்த ஓவரில் ரஹானே ஒரு எட்ஜ் பவுண்டரி அடிக்க 9 ரன்கள். சரி 5 ஓவர்களுக்குள் இப்படி பந்து வீச்சாளர்களை மாற்றியதால் ஒருவருக்கும் லைன் மற்றும் லெந்த் கிடைக்கவில்லை.

இதை விடவும் தமாஷ் கேப்டன்சி, அடுத்த ஓவரில் மீண்டும் ரசலைக் கொண்டுவந்தார். அவர் முதல் ஒவருக்குப் பிறகு தேவையில்லாமல் கட் செய்யப்பட்டு, தற்போது ரோஹித் சர்மாவுக்கு மாட்டத் தொடங்கியதும் மீண்டும் 6-வது ஓவரில் கொண்டு வந்தார். ஆனால் ஒரு இடுப்பக்கு மேலான புல்டாஸை அவர் வீச பந்து சிக்ஸுக்கு பறந்தது. இது நோபால் என்பதால் ப்ரீ ஹிட், இது மீண்டும் ஒரு லெந்த் பந்து, பவுலர் தலைக்கு மேல் இன்னொரு சிக்ஸ். அந்த ஓவரில் 20 ராக்ள் வர 2 ஓவர்களில் 4 ரன்கள் என்றிருந்த இந்திய அணி பவர் பிளே முடிவில் 55/0 என்று ஆனது.

பத்ரீ வீசிய 3-வது ஓவரில்ம் 31 பந்துகளில் 3 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 43 ரன்கள் எடுத்த ரோஹித் சர்மா, பத்ரீ பந்தில் எல்.பி.ஆனார். உள்ளே வந்த பந்திற்கு பின்னங்காலில் வாங்கினார் ரோஹித்.

இதன் பிறகு ரஹானே, கோலி இணைந்தனர் அப்போதுதான் மேற்கூறிய ரன் அவுட் அத்தியாயம் நடந்து முடிந்து, கோலி செட்டில் ஆகத் தொடங்கினார், நிறைய 2 ரன்களை ஓடினார், பந்துகளை அனாயாசமாக இடைவெளியில் தட்டி விட்டு 2 ரன்களை அவர் அடிக்கடி எடுக்க முடிந்தது. ரஹானே பத்ரீயை மிட்விக்கெட்டில் பவுண்டரி விளாச 10 ஒவர்களில் 86/1 என்று இருந்தது இந்திய அணி. இருவரும் இணைந்து 8.1 ஓவர்களில் 2-வது விக்கெட்டுக்காக 66 ரன்களைச் சேர்த்தனர், இதில் கோலியின் பங்களிப்பு 41 ரன்கள் ரஹானேயின் பங்களிப்பு 22 ரன்கள்.

ரஹானே நீண்ட இடைவெளிக்குப் பின் ஆடினாலும் நிதானத்துடன் ஆடி 35 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் எடுத்து 16-வது ஓவரில், அருமையான சிக்ஸர் ஷாட்டில் பவுண்டரிக்கு வெகுஅருகில் பிராவோவின் எம்பிப் பிடித்த அபார கேட்சுக்கு வெளியேறினார். 33 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் எட்ட்டிய விராட் கோலி அடுத்த 14 பந்துகளில் 39 ரன்களை விளாசினார், இதில் மேலும் 5 அருமையான பவுண்டரிகளையும் ஒரு சிக்சரையும் எடுத்தார். கடைசி 4.3 ஓவர்களில் விராட் விளாச, தோனி அவருக்கு உறுதுணையாக நிற்க 64 ரன்கள் விளாசித் தள்ளப்பட்டது. கோலி 47 பந்துகளில் 89 நாட் அவுட், தோனி 9 பந்துகளில் 15 நாட் அவுட். மே.இ.தீவுகள் தரப்பில் பத்ரீ மட்டுமே சிறப்பாக வீசி 4 ஓவர்களில் 26 ரன்களுக்கு 1 விக்கெட்டைக் கைப்பற்றினார்.

2016-ம் ஆண்டில் கோலியின் டி20 ஸ்கோர்: 90*, 59*, 50, 7, 49, 56*, 41*, 23, 55*, 24*, 82*, 89*, இதில் 10 நாட் அவுட்கள், 8 அரைசதங்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

மேலும்