முதல் நாள் ஆட்டத்தில் அஸ்வின், ராகுல் அசத்தல்: மே.இ.தீவுகள் 196; இந்தியா 126/1

By இரா.முத்துக்குமார்

கிங்ஸ்டன் ஜமைக்கா பிட்ச் நீண்ட நாட்களுக்குப் பிறகு அதன் அசல் தன்மையுடன் அமைய மே.இ.தீவுகள் 196 ரன்களுக்கு முதல் இன்னிங்சில் சுருண்டது. தொடர்ந்து ஆடிய இந்திய அணி தன் முதல் இன்னிங்சில் 1 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்துள்ளது.

தொடக்கத்தில் இசாந்த் சர்மா, மொகமது ஷமி ஆகியோருக்கு ஓரளவுக்கு நல்ல ஸ்விங்கும் பவுன்சும் இருந்தன. இசாந்த் சர்மா ஒரே ஓவரில் பிராத்வெய்ட், டேரன் பிராவோவை வீழ்த்தினார். இதில் டேரன் பிராவோவுக்கு நல்ல பந்து. பிராத்வெய்ட்டிற்கு பந்து நெஞ்சுயரம் எகிறியது. ஷார்ட் லெக்கில் கேட்ச் ஆனது. மொகமது ஷமி சந்திரிகாவுக்கு அவுட் ஸ்விங்கரை எழுப்ப அவர் ஆடாமல் விட வேண்டிய பந்தை பலவீனமாக ஆட எட்ஜ் ஆனது. 7/3 என்ற நிலையில் பிளாக்வுட் இறங்கினார்.

பிளாக்வுட் மட்டுமே எதிர்த்தாக்குதல் இன்னிங்சை ஆடினார். ஆனால் முதலில் ஷமி இன்ஸ்விங்கர் ஒன்றை ஆடாமல் விட்டு தவறு செய்தார், பந்து ஸ்டம்புக்கு சற்று மேலே சென்றது. சரி இதற்கு மேல் நிற்க முடியாது என்று அதே ஓவரில் ஒரு குட் லெந்த் பந்தின் மீது பேட்டை விட்டார். எட்ஜ் பவுண்டரி. பிறகு மீண்டும் ஷமியின் பந்தை சற்றே வன்மையாக தடுத்தாட கல்லிக்கு முன்னால் பந்து விழுந்தது. ஷமியின் பவுன்சரை ஹூக் செய்ய அதுவும் டாப் எட்ஜ் பவுண்டரி.

இடைஇடையே நெஞ்சிலும் தொடைக்காப்பிலும் வாங்கினார் பிளாக்வுட். பிறகு இசாந்த் சர்மாவின் ஃபுல் லெந்தை மிட் ஆஃபில் ஒரு பவுண்டரியும் பிறகு அதே ஓவரில் நேராக ஒரு சிக்சரையும் அடித்தார். பிறகு ஒரு ஆஃப் ஸ்டம்ப் ஷார்ட் பிட்சை ‘அப்பர் கட்’ பவுண்டரி அடித்தார். 22 பந்துகளில் 5 பவுண்டரி 1 சிக்சருடன் அதிரடி வழிமுறைகளுக்கு வந்திருந்தார் பிளாக்வுட்.

அஸ்வின் வந்தவுடன் எகிறிக் குதித்து மிட் ஆனில் ஒரு சிக்ஸ், பிறகு அஸ்வின் வீசிய ஒரே மோசமான பந்தை கவர் திசை பவுண்டரிக்கு விரட்டினார். பிறகு மிஸ்ரா பந்தை நேராக சிக்ஸருக்கு விரட்டி 48 பந்துகளில் அரைசதம் கண்டார். மீண்டும் மிஸ்ரா தவறிழைக்க மீண்டும் சிக்ஸ், என்று கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு சென்று விடுவாரோ என்ற பயத்தை இந்திய வீச்சாளர்களுக்கு உருவாக்கினார் பிளாக்வுட்.

கடைசியில் 7 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 62 பந்துகளில் 62 ரன்கள் என்று கலக்கிய பிளாக்வுட், அஸ்வின் பந்து ஒன்று டிரைவ் லெந்தில் அல்லாமல் பிட்ச் ஆகி உள்ளே திரும்ப பீட் ஆகி கால்காப்பில் வாங்கினார், நடுவர் அலீம்தார் எல்.பி.என்றார். ஆனால் பொதுவாக இத்தகைய திருப்பத்திற்கு அவுட் கொடுக்கும் வழக்கமில்லை. ஒருவிதத்தில் பிளாக்வுட்டிற்கு துரதிர்ஷ்டமே. உணவு இடைவேளக்கு சற்று முன் அவுட் ஆனார்.

மர்லன் சாமுவேல்ஸ் 78 பந்துகளில் 18 ரன்கள் என்று தடவினாலும் நின்று விட்டார், ஆனால் உணவு இடைவேளைக்குப் பிறகு இசாந்த் சர்மா ஷார்ட் பிட்ச் பந்துகளை வீச ஒரே ஓவரில் 3 பவுண்டரிகளை விளாசினார், பிறகு அஸ்வின் பந்தை மேலேறி வந்து நேராக சிக்ஸ் அடித்தார். ஆனால் அடுத்த பந்தே அப்படிப்பட்ட ஆசை வலையை விரித்தார் அஸ்வின், பந்தை நன்றாக பிளைட் செய்தார் ஆனால் பந்து பிட்ச் ஆகும் இடத்தை மாற்றினார், மீண்டும் மேலேறி வந்த சாமுவேல்ஸ் தடுமாறி ஆட பந்து மட்டையில் பட்டு பேடில் பட்டு ஷார்ட் லெக்கில் கேட்ச் ஆனது, 37 ரன்களில் சாமுவேல்ஸ் வெளியேறினார்.

விக்கெட் கீப்பர் டவ்ரிச் அஸ்வின் பந்தை ஆடுவதா வேண்டாமா என்ற தவிப்பில் கடைசியில் ஆட முற்பட மட்டையின் அடிப்பகுதியை அவரது பேடின் மேல் பகுதி தடுக்க பந்து மட்டையில் லேசாக பட்டு சஹாவிடம் கேட்ச் ஆனது. பிறகு 10 ரன்கள் எடுத்திருந்த சேஸ், ஷமியின் தீராத ஆஃப் ஸ்டம்ப் ஆசை வலை லெந்திற்கு இரையானார். தவண் அருமையாக ஸ்லிப்பில் கேட்ச் பிடித்தார்.

பிஷூ (12), ஹோல்டர் (13) ஆகியோரும் அஸ்வினிடம் ஆட்டமிழந்தனர், பிஷூ பொறுமை இழந்து ஸ்வீப் ஆடினார், ஆனால் கோலி ஏற்கெனவே ஷார்ட் லெக்கை எடுத்து விட்டு ஷார்ட் ஃபைன் லெக்கை நிறுத்த அங்கு தவணிடம் கேட்ச் ஆனது. ஹோல்டர் பேட்-கால்காப்பு பொறியில் சிக்கினார். அஸ்வின் 18-வது முறையாக 5 விக்கெட்டைக் கைப்பற்றினார். கேப்ரியலை மிஸ்ரா வீழ்த்தினார். ஷார்ட் கவரில் கோலி கேட்ச் பிடிக்க மே.இ.தீவுகள் இன்னிங்ஸ் 53-வது ஓவரில் 196 ரன்களுக்கு முடிவுக்கு வந்தது. அஸ்வின் 52 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

ராகுல் அபார ஆட்டம்:

தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் கே.எல்.ராகுல், தவண் ஆகியோர் திசை, லெந்த் என்று எந்தக் கட்டுக்கோப்பும் இல்லாத மே.இ.தீவுகள் பந்து வீச்சை எளிதில் எதிர்கொண்டனர். ஒன்று ஷார்ட் பிட்ச் அல்லது வைடாக வீசுவது என்று தவறு செய்தனர். பிஷூ தொடக்கத்திலேயே 3 அதி ஷார்ட் பிட்ச் பந்துகளுடன் தொடங்கினார். ஆனால் தவண் இருமுறை மந்தமாக பந்தை டிரைவ் ஆடினார் ஆனால் பந்து பீல்டருக்கு அருகில் செல்லவில்லை. ராகுல் தனது அரைசதத்தை எடுக்க வேண்டும் என்ற அவசரத்தில் சேஸ் பந்தை ஸ்பின் ஆகும் திசைக்கு எதிர் திசையில் அடிக்க முனைந்து ஷார்ட் மிட்விக்கெட்டில் கேட்ச் ஆக வேண்டியது, ஆனால் அங்கு டேரன் பிராவோ கேட்சை விட்டார்.

உதவிகரமான பிட்சில் கூட மே.இ.தீவுகள் சரியாக வீசவில்லை.

ஷிகர் தவன் 27 ரன்களில் 5 பவுண்டரிகள் அடித்தார். இம்முறை சேஸ் பந்தை தளர்வாக தவண் ஆட ஷார்ட் கவரில் பிராவோ கேட்ச் பிடித்தார். ஆனால் தவண், ராகுல் இணைந்து 19.3 ஓவர்களில் 87 ரன்கள் என்ற அபாரத் தொடக்கம் கொடுத்தனர்.

கே.எல்.ராகுல் 114 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 75 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக உள்ளார், புஜாரா 57 பந்துகளில் 1 பவுண்டரியுடன் 18 ரன்கள் எடுத்து களத்தில் இருக்கிறார். இன்று மே.இ.தீவுகளுக்கு ஒரு நீண்ட நாள் காத்திருக்கிறது, முதலில் ராகுல், புஜாரா இருவரில் ஒருவரைக் காலி செய்தால் கோலி என்ற பூதம் காத்திருக்கிறது. பார்ப்போம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்