அடிலெய்டில் பரபரப்பாக எதிர்நோக்கப்பட்ட உலகக் கோப்பை கிரிக்கெட் 3-வது காலிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று அரையிறுதியில் இந்தியாவைச் சந்திக்கிறது.
டாஸ் வென்ற மிஸ்பா உல் ஹக் ஓரளவுக்கு பேட்டிங் சாதக ஆட்டக்களத்தில் முதலில் பேட் செய்ய சரியாக முடிவெடுத்தார். ஆனால் சரியான இடைவெளிகளில் மோசமான ஷாட் தேர்வுகளினால் வரிசையாக வீரர்கள் ஆட்டமிழக்க கடைசியில் 50-வது ஓவரின் 5-வது பந்தில் 213 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டது. தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா, வஹாப் ரியாஸின் அட்டகாசமான வேகம் மற்றும் தீவிரத்தில் 49/2 பிறகு 59/3 என்று சரிவு முகம் கண்டது.
அதன் பிறகு ஸ்டீவ் ஸ்மித் (65), வாட்சன் (64 நாட் அவுட்), மேக்ஸ்வெல் (44 நாட் அவுட்) ஆகியோரது நிதானமான ஆட்டத்தினால் 33.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 216 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று அரையிறுதிக்குள் சென்றது. வாட்சன் 4 ரன்களில் இருந்த போதும், மேக்ஸ்வெல் ஒற்றை இலக்கத்தில் இருந்த போதும் பாகிஸ்தான் பீல்டர்கள் 2 எளிதான கேட்ச்களை கோட்டை விட்டனர். இந்தக் கேட்ச்களைப் பிடித்திருந்தால் ஆட்டம் இன்னும் நெருக்கமாகச் சென்றிருக்கும். ஒருவேளை பாகிஸ்தான் வென்றாலும் ஆச்சரியமாக இருந்திருக்காது.
பாகிஸ்தானின் திட்டமிடாத பேட்டிங்... முதிர்ச்சியற்ற ஷாட் தேர்வு:
சர்பராஸ் அகமட், அகமது ஷெசாத் தொடக்கத்தில் களமிறங்கினர். ஆஸ்திரேலிய தரப்பில் மிட்செல் ஸ்டார்க் மற்றும் அபார ஸ்விங் பவுலரும் இன்றைய ஆட்ட நாயகனுமான ஜோஷ் ஹேசில்வுட் தொடக்க ஓவர்களை வீசினர்.
கட்டுக்கோப்பான பந்து வீச்சு, ஓரிருமுறை இரு வீர்ர்களின் மட்டையை பந்துகள் நூலிழையில் கடந்து சென்றது. 5-வது ஓவரில்தான் முதல் பவுண்டரி வந்தது. ஸ்டார்க் வீசிய ஷார்ட் பிட்ச் பந்தை அதிக இடம் இல்லாவிட்டாலும் ஒருவாறாக புல் ஆடி முதல் பவுண்டரியை அடித்தார் சர்பராஸ்.
ஆனால் அடுத்த பந்தே ஸ்டார்க் 150 கிமீ வேகத்தில் நல்ல அளவில் வீச பந்து சர்பராஸ் மட்டையின் விளிம்பில் பட்டு வாட்சனிடம் வேகமாகச் சென்றது. தள்ளிச் சென்றது. இரண்டு கைகளையும் கொண்டு சென்ற வாட்சன் கேட்ச் பிடிக்கும் போது கிட்டத்தட்ட தேர்ட் மேன் திசை நோக்கி இருந்தார் அருமையான கேட்ச்.
ஆஸ்திரேலியாவின் அபார பீல்டிங்குக்கு இந்த கேட்சும் இதற்கு முன்னால் தடுத்த சில பவுண்டரிகளும் அடங்கும், வார்னர், மேக்ஸ்வெல் என்று சில ஷாட்களை அற்புதமாகத் தடுக்க பாகிஸ்தான் மீது நெருக்கடி அதிகரித்தது.
அகமது ஷெசாத்தின் தேவையில்லாத ஷாட்:
1ஆம் நிலையில் இறங்கிய ஹாரிஸ் சோஹைல் ஸ்டார்க் வீசிய முதல் பந்தையே பாயிண்டில் பவுண்டரிக்கு விரட்டி கணக்கைத் தொடங்கினார். இப்படி இவர் தன்னம்பிக்கையுடன் தொடங்கிய பிறகு அதற்கு அடுத்த ஓவரிலேயே 5 ரன்கள் எடுத்த ஷெசாத், ஹேசில்வுட் வீசிய அவுட் ஸ்விங்கரை தொட்டு ஸ்லிப்பில் கிளார்க்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். தேவையில்லாத ஷாட். விட்டு விட வேண்டிய பந்து இது. ஏனெனில் ஹேசில்வுட் அபாரமாக ஸ்விங் செய்து வந்தார். இந்த விக்கெட்டை ஓரளவுக்கு ஆஸ்திரேலியா எதிர்பார்த்தது என்றே கூற வேண்டும். 24/2 என்று ஆனது பாகிஸ்தான்.
பைல் கீழே விழாமல் தப்பிய மிஸ்பா:
பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா இறங்கினார். ஷெசாத் அவுட் ஆன அதே ஓவரில் 3-வது பந்தில் மிஸ்பாவைப் பார்த்து அதிர்ஷ்ட தேவதை புன்னகை புரிந்தாள். ஹேசில்வுட் வீசிய இன்ஸ்விங்கர் மிஸ்பாவின் இடது தொடைக்காப்பில் பட்டு ஸ்டம்பை உரசிச் சென்றது இதில் பைல் சற்றே தொந்தரவு அடைந்தது. ஆனால் கீழே விழவில்லை. பைலில் வெளிச்சம் வந்து போனது. ரிவியூ செய்யலாம் என்று ஆஸ்திரேலியா ஆலோசனை செய்வதற்குள் அங்கு நேரம் முடிந்து விட்டது.
ஹாரிஸ் சோஹலின் அனாயாச ஆட்டமும் மிஸ்பாவின் நிதானமும்
ஜான்சன் பந்து வீச அழைக்கப்பட்டார். முதல் பந்தே மிஸ்பா சைனிஸ் கட் அடித்தார் பந்து ஸ்டம்பைத் தவிர்த்து பவுண்டரிக்குச் சென்றது. பைல் விழவில்லை. பிறகு சைனிஸ் கட் என்று மிஸ்பாவுக்கு அசவுகரியம் தொடர்ந்தது.
இப்படியாக சில ஓவர்கள் செல்ல, 12-வது ஓவரை ஹேசில்வுட் வீச வர, ஹாரிஸ் சோஹைல் அபாரமாக ஒரு ஆஃப் டிரைவ் பவுண்டரியையும், மீண்டும் கவர் எஸ்க்ட்ரா கவர் இடைவெளியில் மற்றுமொரு பவுண்டரியையும் அடித்தார்.
ஒரு மாற்றத்துக்காக 14-வது ஓவரில் கிளார்க், ஆப் ஸ்பின்னர் மேக்ஸ்வெலை கொண்டு வந்தார். கடைசி பந்து மிஸ்பாவுக்கு பிடித்த ஷாட், மிட்விக்கெட்டில் ஒரு சுழற்று சுழற்ற பந்து ரசிகர்களிடையே போய் விழுந்தது. 6 ரன்கள். மிஸ்பா தொடங்கினார். மீண்டும் 18-வது ஓவரில் மிஸ்பா அதே போன்ற ஒரு ஷாட்டில் மீண்டும் மிட்விக்கெட்டில் அதே ஷார் அடித்தார் இம்முறையும் அதே முடிவு 6 ரன்கள்.
இருவரும் இணைந்து அரைசதக்கூட்டணியைக் கடந்தனர். பிறகு வாட்சன், பாக்னர் வீச வந்தனர், இருவரும் பயங்கர சிக்கனமாக வீசினர். கடைசியில் வேதனையைப் போக்குமாறு ஹாரிஸ் சோஹைல் வாட்சனை ஒரு பவுண்டரி அடித்தார். ஹாரிஸ் சோஹைல் 38, மிஸ்பா 34 என்றும் ஸ்கோர் 23-வது ஓவரில் 96/2 என்றும் நன்றாகப் போய் கொண்டிருந்தது.
அப்போது மைக்கேல் கிளார்க் தனக்கேயுரிய ஒரு பாணியில் மீண்டும் மேக்ஸ்வெலை பந்துவீச அழைத்தார். 24-வது ஓவரின் 2-வது பந்து, ஆஃப் பிரேக் ஆகாமல் லெந்தில் விழுந்து நேராகச் சென்றது மிஸ்பா மீண்டும் தனக்குப் பிடித்த மிட்விக்கெட் ஷாட்டை ஆடினார். ஆனால் இந்த முறை ஷாட் சரியாக சிக்கவில்லை. ஏரோன் பின்ச்சிடம் டீப்பில் கேட்ச் ஆனது 34 ரன்களில் மிஸ்பா அவுட் ஆனார். 73 ரன்களை 3-வது விக்கெட்டுக்காகச் சேர்த்த நிலையில் மிகப்பெரிய மரம் சாய்ந்தது. அதுவே பாகிஸ்தானின் வீழ்ச்சியின் தொடக்கமாக அமைந்தது.
ஹாரிஸ் சோஹைல் நன்றாக ஆடிவந்தார். நல்ல டைமிங்குடன், பந்தின் லெந்த்தைக் கணித்து 57 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 41 ரன்கள் எடுத்திருந்தார்.
ஆனால், பாகிஸ்தான் பேட்டிங்கிற்கேயுள்ள குறைபாடு மீண்டும் தலைதூக்கியது. ஜான்சன் விக்கெட்டுகளை வீழ்த்த திணறிகொண்டிருந்த போது, 27-வது ஓவரில் வந்து ரவுண்ட் த விக்கெட்டில் ஒரு கூர்மையான பவுன்சரை வீச சோஹைல் ஆடிப்போனார்.
அடுத்த பந்து.. ஜான்சனின் மிகவும் பிரசித்தமான உத்தி. ரவுண்ட் த விக்கெட்டிலிருந்து குறுக்காக நல்ல அளவில் பந்தை பிட்ச் செய்து வெளியே இழுத்தார். சோஹைல் எந்த ஒரு சரியான நிலையிலும் இல்லாமல் அதனை டிரைவ் ஆட முயன்றார். மோசமான ஷாட் தேர்வு ஹேடினிடம் கேட்ச் ஆனது.
உமர் அக்மல் மட்டுமெ தற்போது கிரீசில் ஒரு பேட்ஸ்மென் என்ற முறையில் மீதமிருந்தார். இவரும் 25 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து நன்றாக ஆடிவந்தார். ஆனால் திடீரென கிறுக்குப் பிடிக்க மேக்ஸ்வெல் வீசிய ஊர்பட்ட ஷார்ட் பிட்ச் பந்தை குறிபார்த்து நேராக மிட்விக்கெட்டில் ஃபின்ச் கையில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். எங்கு வேண்டுமானாலும் இந்த பந்தை அடித்திருக்கலாம். ஸ்கொயர்லெக், மிட்விக்கெட் இடைவெளியில் அடித்திருக்கலாம் ஆனால் ஷாட் தேர்வு சரியில்லாமல் வீழ்ந்தார். 124/5. மேக்ஸ்வெல் மீண்டும் மிஸ்பா, உமர் அக்மல் விக்கெட்டுகளை வீழ்த்தி பெரிய விக்கெட்டுகளைத் தன்னால் கைப்பற்ற முடியும் என்பதை நிரூபித்தார்.
அப்ரீடி களமிறங்கினார். 30-வது ஓவரில் போய் அவர் இறங்கினால் என்ன செய்ய முடியும்? அவர் வழக்கமான அனாயாச மட்டைச் சுழற்றலையே காண்பித்தார். மிட்செல் ஜான்சனை எக்ஸ்ட்ரா கவரில் ஒரு அசாத்திய சிக்ஸ் அடித்தார். ஷோயப் மக்சூத் இன்னொரு முனையில் ஜான்சனிடமே கேட்ச் கொடுத்திருப்பார் ஆனால் ஜான்சன் வந்த வேகத்தில் அவரால் பிடிக்க முடியவில்லை. பிடித்திருந்தால் அது ஒரு அசாத்தியமான ரிடர்ன் கேட்ச் ஆகியிருக்கும்.
மக்சூதிற்குப் பதிலாக யூனிஸ் கானை தேர்வு செய்திருக்க வேண்டும். மிஸ்பாவின் தவறான முடிவு.
15 பந்துகளில் 3 பவுண்டரி 1 சிக்சருடன் 23 ரன்கள் எடுத்த ஷாகித் அஃப்ரீடியும், ஹேசில்வுட் வீசிய அரைக்குழி பந்தை மிட்விக்கெட்டில் குறிபார்த்து பின்ச் கையில் அளித்து வெளியேறினார்.
வஹாப் ரியாஸை கேலி செய்து சீண்டிய ஸ்டார்க்:
வஹாப் ரியாஸ் களமிறங்கினார். அவர் அரைசதம் எடுத்தவர். ஆனால் இந்த முறை ஸ்டார்க், ஹேசில்வுட் பந்துகளில் அவர் மட்டை, பந்தின் ஸ்பரிசத்துக்காக ஏங்கியது. கடைசி வரை பந்து அவரது மட்டையுடன் ஊடல் செய்து கொண்டிருந்தது.
இதனைப் பார்த்த ஸ்டார்க், ஒரு பந்தில் வஹாப் பீட் ஆக அருகில் வந்து ‘உருண்டையாக ஏதோ போகிறதே உனக்கு தெரிகிறதா?’ என்ற ரீதியில் ஏதோ கேட்க ஆஸ்திரேலிய வீரர்கள் சிரிக்க, வஹா ரியாஸ் ஆக்ரோஷமாக திருப்பி சில வார்த்தைகளை விட, நடுவர் தலையிட்டு ‘உஷ்’ பேசக்கூடாது என்று இருவரையும் சமாதானப்படுத்தினார்.
மக்சூத் 29 ரன்களில் ஹேசில்வுட் பந்தை கவர் திசையில் ஜான்சனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 42-வது ஓவரில் 188/7. பிறகு 16 ரன்கள் எடுத்த வஹாப் ரியாஸ், கேலி செய்த ஸ்டார்க் பந்திலேயே அவுட் ஆனார். அதன் பிறகு 49.5 ஓவர்களில் 213 ரன்களுக்கு பாகிஸ்தான் ஆட்டமிழந்தது.
ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்டார்க் 2 விக்கெட்டுகள் வீழ்த்தி மீண்டும் முதலிடம் சென்றார். ஹேசில்வுட் 35 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மேக்ல்ஸ்வெல் 2 விக்கெட், ஜான்சன், பாக்னர் தலா 1 விக்கெட்.
ஆஸ்திரேலியாவை அச்சுறுத்திய வஹாப் ரியாஸின் பந்துவீச்சும் ஒத்துழைக்காத பீல்டிங்கும்:
214 ரன்கள் என்ற எளிதான இலக்கை எதிர்கொண்டு களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு 3-வது ஓவரில் அதிர்ச்சி காத்திருந்தது. அதிரடி வீரர் ஏரோன் பின்ச் 2 ரன்கள் எடுத்திருந்த போது சோஹைல் கான் வீசிய நேர் பந்தை கால்காப்பில் வாங்கி எல்.பி ஆனார். அவர் செய்த தவறு அதனை ரிவியூ செய்தார். ரிவியூ உறுதி செய்தது. ஒரு ரிவியூவை வேஸ்ட் செய்தார் பின்ச்.
மறுமுனையில் ஒரு இடது கை வேகப்பந்து வீச்சாளரைக் கொண்டு வந்திருக்கலாம். ஆனால் வலது கை வீச்சாளர் அடிலையே கொண்டு வந்தார் மிஸ்பா.
டேவிட் வார்னர் 2 பவுண்டரிகளை அடித்தார். ஸ்மித் 3 பவுண்டரிகளையும், வார்னர் 3 பவுண்டரிகளையும் அடிக்க இருவரும் 21 ரன்களில் ஜோடியாக நிற்க ஸ்கோர் 9-வது ஓவரில் 49 ரன்களாக உயர்ந்தது.
9-வது ஓவரை வஹாப் ரியாஸ் வீச வந்தார். வார்னர் 24 ரன்களில் இருந்தார். அவரது ஈகோவை சீண்டினார் வஹாப், ஒரு ஷார்ட் பிட்ச் பவுன்சரை வீச அதனை அவர் தேர்ட் மேனில் தூக்கி விட்டார். அங்கு ரஹத் அலி கேட்ச் பிடித்தார்.
மீண்டும் 11-வது ஓவரை வீச வந்த வஹாப் ரியாஸ். கிளார்க்கிற்கு ஷார்ட் பிட்ச் பந்துகளில் பலவீனம் என்று தெரிந்த மிஸ்பா, ஷார்ட் லெக் திசையில் மக்சூதை நிறுத்தினார். வஹாப் ரியாஸ் நல்ல வேகத்தில் ஒரு பவுன்சரை வீச ஹெல்மெட் கம்பி உயரத்துக்கு வந்த பந்தை ஒன்றும் செய்ய முடியவில்லை கிளார்க்கினால் மட்டையில் பட்டு அருகில் மக்சூதிடம் கேட்ச் ஆனது. திட்டமிட்டு வீழ்த்தப்பட்டார் கிளார்க். 11-வது ஓவரில் 59/3 என்று ஆட்டம் சூடு பிடிக்கத் தொடங்கியது.
ஒரு முனையில் ஸ்மித் அபாரமாக ஆடிவந்தார். வாட்சன் களமிறங்க வஹாப் ரியாஸ் அவருக்கு வேகமாக பவுன்சர்களையும் லெந்த் பந்தையும் மாறி மாறி வீசி வேதனையை அதிகரித்தார்.
4 ரன்களில் வாட்சன் இருந்த போது வஹாப் ரியாஸ் வீசிய ஷார்ட் பிட்ச் பந்தை வாட்சன் ஹூக் செய்ய அது நேராக டீப் ஃபைன் லெக்கில் ரஹத் அலியிடம் உயரமாக எழும்பி அழகாகக் கையில் பூபோல் விழுந்தது அதனை அவரது வழுக்கிய கைகள் தவற விட்டன.
ஸ்மித் அரைசதம் கடந்து 66 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 64 ரன்கள் எடுத்திருந்த போது 27-வது ஓவரில் இசான் அடில் பந்தில் எல்.பி.ஆனார். பிளிக் செய்ய முயன்று பந்து சிக்கவில்லை. தர்மசேனா கையைத் தூக்கினார், ரிவியூ எதுவும் மீதமில்லை. அதனால் வெளியேறினார்.
மேக்ஸ்வெல் இறங்கினார் ஒரு பவுண்டரி அடித்து 5 ரன்களில் இருந்த போது வஹாப் ரியாஸ் மீண்டும் ஒரு நல்ல வேக பவுன்சரை வீச மேக்ஸ்வெல் தனக்கேயுரிய விசித்திர ஷாட்டை ஆடினார் பந்து டாப் எட்ஜ் எடுத்து தேர்ட் மேனில் உயரே சென்றது ஓடி வந்த சோஹைல் கான் கையை நீட்டினார் பந்து கையில் பட்டுத் தெறித்தது. அப்போது பிடித்திருந்தால் 154/5 என்று ஆஸ்திரேலியா திணறல் அதிகரித்திருக்கும். ஆனால் வஹாப் ரியாஸின் தனிமனிதப் போராட்டம் அத்துடன் முடிவுக்கு வந்தது.
28.2-வது ஓவரில் மேக்ஸ்வெலுக்கு கேட்ச் விடப்பட்டது. 34-வது ஓவர் 5-வது பந்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. வாட்சன் 64 நாட் அவுட், அதிரடி ஆட்டம் ஆடிய மேக்ஸ்வெல் 29 பந்துகளில் 5 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 44 நாட் அவுட். ஸ்மித் அவுட் ஆன பிறகு 7 ஓவர்களில் 68 ரன்கள் விளாசப்பட்டுள்ளது. பாகிஸ்தான் தரப்பில் அப்ரீடி பெரும் ஏமாற்றம். 4 ஓவர்களில் 30 ரன்கள் விக்கெட்டும் இல்லை. தாக்கமும் இல்லை.
இன்று பாகிஸ்தானுக்கு எதிராக ஆஸ்திரேலியா ஆடியதைப் பார்க்கும் போது இந்திய அணியினருக்கு நிச்சயம் ஒரு நம்பிக்கை பிறந்திருக்கும். நல்ல ரன்களைக் குவித்து ஆஸ்திரேலியாவை இலக்கைத் துரத்தவிட்டால் அந்த அணியின் பலவீனங்கள் வெளிப்படும் என்பதை பாகிஸ்தான் இன்று இந்திய அணிக்கு எடுத்துக் காட்டியுள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago