சச்சின் தன் வாழ்நாளின் இறுதி சர்வதேச ஆட்டத்தில், இறுதி இன்னிங்ஸ் பேட்டிங்கை விளையாடி முடித்துவிட்டார். அந்த இன்னிங்ஸில் அவர் சதம் அடித்திருக்கலாம். ஆனால், 74 ரன்களில் அவரது இன்னிங்ஸ் முடிந்துவிட்டது. சச்சின் தன் 200-வது டெஸ்ட் ஆட்டத்தில் ஒரு சதமடித்து தன் கிரிக்கெட் வாழ்க்கையைப் பூர்த்திசெய்ய வேண்டும் என்ற அவரது ரசிகர்களின் கனவு நிறைவேறப்போவதில்லை.
சச்சினின் சாதனைகள் என்று பட்டியலிட்டு, அவர்தான் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனா என்று பட்டிமன்றங்கள் நடத்தலாம். சிலர் அவரவருக்குப் பிடித்தமான பேட்ஸ்மேன்களை முன்வைத்து, சச்சினை மட்டம்தட்டவும் செய்யலாம். எவ்வளவோ ஆட்டங்களில் சச்சின் இன்னமும் கொஞ்சம் முனைப்புக் காட்டியிருந்தாரானால், இந்தியா மேலும் பல ஆட்டங்களை வென்றிருக்கலாம் என்று விமர்சனம் செய்யலாம். அவரை சுயநலக்காரர் என்றும் திட்டலாம்.
ஆனால், இந்திய கிரிக்கெட்டுக்கும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கும் அவர் ஆற்றியுள்ள தொண்டினை யாராலும் கேள்விக்கு உட்படுத்த முடியாது.
சச்சின் கொடுத்த நம்பிக்கை
சச்சின் விளையாடத் தொடங்குவதற்கு முன்னும் இந்தியாவுக்காகத் திறம் வாய்ந்த பல வீரர்கள் பேட்டிங்கில் சிறந்து விளங்கியிருக்கிறார்கள். அதிரடியான விளையாட்டு, சதம் அடித்தல், விக்கெட்டை விட்டுக்கொடுக்காத திறத்தால் இந்தியாவைத் தோல்வியிலிருந்து காத்தல் என்று ஏதோ ஒரு விதத்தில் இந்திய கிரிக்கெட்டுக்குப் பங்களித்திருக்கிறார்கள். ஆனால், சச்சின்தான் முதல்முறையாக, எந்த எதிரணியாக இருந்தாலும், தன் தனியொரு சாமர்த்தியத்தினால் மட்டுமே இந்தியாவை வெற்றிபெற வைக்க முடியும் என்ற நம்பிக்கையைக் கொடுத்தார்.
ஷார்ஜாவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ‘மணற்புயல்’ஆட்டங்களில் மட்டுமின்றி, பல ஆட்டங்களிலும் சச்சின் இதனை நிரூபித்தார். அதன் பின், இந்தியா வெல்ல முடியாத நிலையி லும்கூட, சச்சின் ஆட்டமிழக்காமல் இருக்கிறார் என்பதனாலேயே இந்தியாவால் வெல்ல முடியும் என்று ரசிகர்கள் நம்பினர். அணியில் விளையாடிய பிற இந்திய வீரர்களும்கூட அவ்வாறே நம்பிக்கொண்டிருந்தனர். தன் அணியின் வீரர்களுக்கும், நூறு கோடி இந்தியர்களுக்கும் ஒருசேர நம்பிக்கை அளித்த ஒரே மனிதராக சச்சின் இருந்தார்.
இந்திய கிரிக்கெட்டை விடப் பெரிதாக… மொழி யால், மதத்தால் பிரிந்து கிடக்கும் இந்தியர்களைத் தன் விளையாட்டால் சச்சின் ஒன்றுசேர்த்தார். அவர் ஆடு களத்துக்கு பேட்டிங் செய்ய வந்துவிட்டார் என்றால், தொலைக்காட்சி அலைவரிசைகளை மக்கள் மாற்றிக்கொண்டனர். தெருக்களில் போக்குவரத்து குறைந்தது. அவர் பேட்டிங் செய்யும்போது திருடர்கள் தாராளமாகக் குற்றச்செயல்களில் ஈடுபடலாம் என்று நகைச்சுவைத் துணுக்குகள் வெளியாகின. டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சின் இன்று பேட்டிங் செய்யப்போகிறார் என்பது தெரியவரும் போதெல்லாம், கூட்டம் அதிகரித்தது. ஆனால், அவர் ஆட்டமிழந்துவிட்டார் என்றவுடனேயே மக்கள் சாரிசாரியாக மைதானத்தைவிட்டு வெளியேறத் தொடங்கினர். தொலைக்காட்சி யில் பார்ப்போரும் மீண்டும் அலைவரிசைகளை மாற்றிக்கொண்டனர். இப்படியாக, சச்சின் என்ற இளம் ஆட்டக்காரர் கொஞ்சம்கொஞ்சமாக இந்திய கிரிக்கெட்டைக் கீழே தள்ளி, அதைவிட அவர் மேலெழ ஆரம்பித்தார். மிகப் பெரிய ரசிகர் கூட்டத்தைக் கொண்ட சினிமா நாயகர்கள் அனைவரையும் முழுவதுமாகப் பின்னுக்குத் தள்ளி இந்தியாவில் மிகவும் அறியப்பட்ட ஒற்றை நபராக ஆனார்.
இவ்வாறு ஆவதற்கான அனைத்துத் தகுதிகளும் அவரிடம் இயற்கையிலேயே இருந்தன. அதனால்தான், தன் 16 வயதிலே அவரால் டெஸ்ட் ஆட்டத்தில் ஆட முடிந்தது. அவருடைய உயரம் குறைவானதாக இருந்தது. ஆனால், கிரிக்கெட்டைப் பொருத்தமட்டில் இது ஒரு குறைபாடே அல்ல. தடுத்தாடும் ஆட்டத்தில் இருந்த மிகச் சில பலவீனங்களைத் தவிர்த்து, சச்சினின் ஆட்டத்தில் குறை என்பதைக் காண முடியவில்லை. ஒவ்வொரு பந்தையும் அவர் 10 விதமாக அடிக்கும் திறன் பெற்றிருந்தார். பிராட்மனே சச்சினின் ஆட்டத்தைப் பார்த்துவிட்டுத் தன் மனைவியிடம், இந்தப் பையனின் ஆட்டம் என் ஆட்டத்தை நினைவுபடுத்துகிறது என்று சொல்லியிருக்கிறார்.
வெற்றிபெறும் தேசத்தின் குறியீடு
ஆனால், ஆட்டத் திறமை மட்டுமே சச்சினை இந்த உயரத்துக்குக் கொண்டுசெல்லவில்லை. இந்திய மனநிலை என்பது தோல்வியை, துயரத்தை ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றாகவும், எல்லாம் விதி என்று ஏற்றுக்கொண்டு போகக்கூடிய ஒன்றாகவும் இருந்தது. மக்கள்தொகையின் பளுவினால் அழுத்தப்பட்டு, தொய்ந்து, ஏழ்மையிலும் நோயிலும் அல்லல்பட்டுக்கொண்டிருந்த ஒரு சமுதாயமாக இருந்தது. அரசியலும் பொருளாதாரமும் ஒரு திருப்புமுனையை நோக்கிச் சென்றுகொண்டிருந்த 1980-களின் இறுதியில் சச்சின் ஆட வந்தார். எப்படியாவது ஆட்டத்தை வெல்ல வேண்டும் என்ற தன் உடல்மொழியால் பெரும்பாலான இந்தியர்களைக் கவர்ந்தார். விதியைக் கண்டு பயப்பட வேண்டாம், முயற்சி ஒன்று மட்டுமே போதும், வெற்றி பெறுவது சாத்தியமே என்ற நம்பிக்கையை அவர் பெரும்பாலான இந்தியர்களுக்குள் விதைத்தார்.
2000-வது ஆண்டைத் தாண்டி, புத்தாயிர ஆண்டுகளுக்குள் இந்தியா நுழைந்தபோது அரசியல், பொருளாதாரம் இரண்டிலும் இந்தியா நிலைத்தன்மையை அடைந்திருந்தது. இந்தியா ஒரு தோல்வியுற்ற தேசமல்ல, உலக அரங்கில் ஒரு முக்கியமான தேசமாக இருக்கப்போகிறது என்பதை முடிவுசெய்த அந்த 10 ஆண்டுகளில்தான் இந்தியர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக சச்சின் ஆனார். தோல்வியிலிருந்து நிமிர்ந்து எழுந்துகொண்டிருக்கும், இனி என்றென்றைக்கும் வெற்றிபெற்றுக்கொண்டே இருக்கப்போகிற ஒரு தேசத்தின் குறியீடாக அவரைப் பல இந்தியர்களும் கண்டதில் வியப்பு ஒன்றும் இல்லை.
அதற்கடுத்த 10 ஆண்டுகளில் சதங்களையும் சாதனைகளையும் சச்சின் குவித்தார். அணித் தலைவராக அவர் சாதித்தது மிகக் குறைவு என்றாலும் கங்குலி, கும்ப்ளே, திராவிட், தோனி போன்ற அணித் தலைவர்களுக்கு மிகவும் வலுசேர்த்தார்.
நாயகர்களின் இடம்
சில ஆண்டுகளுக்கு முன்னதாகவே அவர், ஓய்வுபெற்றிருக்க வேண்டும் என்ற குற்றச்சாட்டுகள் வலுக்கத் தொடங்கின. இதுவும்கூட மாற்றமடைந்துள்ள இந்தியப் பொருளாதாரத்தின், சமூகத்தின் ஒரு கூறுதான். இனி, பழைய நாயகர்களுக்கு இங்கு நிரந்தர இடம் கிடையாது. புதிய இளைஞர்கள், புதிய சாதனைகள் படைப்பவர்களுக்குத்தான் இனி இடம்.
சச்சின் போன்ற திறமையுள்ள ஓர் ஆட்டக்காரருக்கு, உள்ளம் நினைப்பதுபோல உடலால் செயல்பட முடியவில்லை என்பது புரிபட, சில காலம் ஆனது. கிரிக்கெட் என்பது இளைஞர்கள் ஆட்டம். அதன் வடிவமும் அமைப்பும் ஒரு சில ஆண்டுகளுக்கு ஒருமுறை மாறிக்கொண்டே இருக்கக் கூடியது.
திராவிட், கும்ப்ளே போன்றோர் தாம் உச்சத்தில் இருந்தபோதே ஓய்வுபெற்றார்கள். அதேபோல, சச்சினும் சில ஆண்டுகளுக்கு முன் ஓய்வுபெற்றிருக்கலாம். ஆனால், அவர் அப்படிச் செய்யாததால் அவரது பங்களிப்பு எவ்விதத்திலும் குறைந்துவிடவில்லை. அவர் அடித்த சதங்களைக் கொண்டோ, எடுத்த ஒட்டுமொத்த ஓட்டங்களைக் கொண்டோ, அல்லது எத்தனை ஆட்டங்களை இந்தியாவுக்காக வென்றார் என்பதைக் கொண்டோ சச்சினின் பங்களிப்பை அளவிட முடியாது. ஏனெனில், அவரது பங்களிப்பு அவற்றையெல்லாம்விடப் பெரியது.
சச்சின் விளையாடுவதைப் பார்த்துதான் நான் கிரிக்கெட் விளையாடவே முடிவுசெய்தேன் என்றார் சேவாக். அவர் மட்டுமல்ல, அவருக்குப் பின் இன்றுவரை இந்தியாவுக்காக விளையாட வந்திருக்கும் அனைத்து வீரர்களும் இதையே உறுதிப்படுத்துவார்கள். தனக்கடுத்த கிரிக்கெட் தலைமுறையின் கனவுகளை, ஆட்ட பாணியை, கிரிக்கெட் ஆட்டத்தை அணுகும் மனநிலையை முழுவதுமாக வடிவமைத்த பெருமை சச்சினுக்கு மட்டுமே உண்டு. இதுதான் அவரது பங்களிப்பு. இதுதான் அவரது பெருமை.
இந்த நேரத்தில் சச்சினுக்கு பாரத ரத்னா விருது அறிவித்திருக்கும் செய்தி மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது.
பத்ரி சேஷாத்ரி, பதிப்பாளர் - தொடர்புக்கு: badri@nhm.in
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago