இந்திய பாட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவுக்கு வாழ்நாள் தடை விதிக்க இந்திய பாட்மிண்டன் சங்கம் தீவிரம் காட்டி வருவது இந்திய விளையாட்டுத் துறையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருப்பதோடு, ஜுவாலையை கொழுந்துவிட்டு எரியச் செய்துள்ளது.
அவர் மீதான குற்றச்சாட்டு என்ன என்பதைத் தெரிந்தால், அவருக்கு இந்த தண்டனை மிக.. மிக.. மிக.. அதிகம் என்றுதான் சாதாரண பாமரனுக்கும்கூட தோன்றும். அவர் செய்த தவறுதான் என்ன? கடந்த ஆகஸ்டில் நடைபெற்ற இந்திய பாட்மிண்டன் லீக் போட்டியில் பங்கேற்ற டெல்லி ஸ்மாஷர்ஸ் அணிக்கு ஜுவாலா கட்டா கேப்டனாக இருந்தார்.
ஆகஸ்ட் 25-ம் தேதி டெல்லி அணியும், பெங்கா பீட்ஸ் அணியும் மோதின. அந்தப் போட்டிக்கு தொடங்குவதற்கு முன்னதாக பெங்கா பீட்ஸ் அணியில் காயமடைந்த ஹூ யூனுக்குப் பதிலாக டென்மார்க்கின் ஜான் ஓ ஜோர்கென்ஸன் சேர்க்கப்பட்டார். கடைசி நிமிடத்தில் திடீரென வீரரை மாற்றியதற்கு எதிர்ப்புத் தெரிவித்த ஜுவாலா கட்டா, போட்டியைப் புறக்கணிப்போம் என மிரட்டல் விடுத்தார், சக வீரர்களை போட்டியில் பங்கேற்க விடாமல் தடுக்க முயற்சித்தார் என்பதுதான் அவர் மீதான குற்றச்சாட்டு.
இந்தக் குற்றச்சாட்டு குறித்த விசாரித்த இந்திய பாட்மிண்டன் சங்க ஒழுங்கு நடவடிக்கைக் குழு, ஜுவாலாவுக்கு வாழ்நாள் தடை விதிக்கலாம் அல்லது குறிப்பிட்ட காலத்துக்கு அவரை சஸ்பெண்ட் செய்யலாம் என பரிந்துரைத்தது.
அந்த பரிந்துரைக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழவே, அது தொடர்பாக ஆராய்ந்து முடிவெடுக்க 3 நபர் கமிட்டியை அமைத்தது இந்திய பாட்மிண்டன் சங்கம். ஆனால் அந்த விஷயத்தில் இறுதி முடிவெடுக்கும் வரை ஜூவாலா கட்டா எந்தப் போட்டியிலும் பங்கேற்கக் கூடாது என தடை விதித்த இந்திய பாட்மிண்டன் சங்கம், டென்மார்க் ஓபன் போட்டியில் அவர் பங்கேற்க இருந்ததையும் திரும்பப் பெற்றது.
இதையடுத்து ஜுவாலா கட்டா, தில்லி நீதிமன்றத்தின் படியேற, அவரின் வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவர் விஷயத்தில் இறுதி முடிவெடுக்கப்படும் வரை அவரை போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதையடுத்து டென்மார்க் ஓபனில் ஜுவாலாவை அனுமதிக்குமாறு சர்வதேச பாட்மிண்டன் சம்மேளனத்திடம் வேண்டுகோள் விடுத்திருப்பதாக இந்திய பாட்மிண்டன் சங்கம் கூறியுள்ளது. ஆனால் போட்டியில் அவரை அனுமதிப்பதா, வேண்டாமா என்பதை சர்வதேச சம்மேளம்தான் முடிவு செய்யும். இதுபோன்ற சூழல்களில் என்ன முடிவெடுக்கப்படும் என்பது எனக்குத் தெரியாது என குதர்க்கமான பதிலைக் கூறியிருக்கிறார் இந்திய பாட்மிண்டன் சங்க செயலர் விஜய் சின்ஹா.
உலக பாட்மிண்டன் சம்மேளனத்தின் விதிமுறைப்படி, ஒருவரை போட்டியிலிருந்து திரும்பப் பெற்றுவிட்டால் அவரை மறுபடியும் விளையாட வைக்க முடியாது என கூறப்படுகிறது. எனவே ஜுவாலா டென்மார்க் ஓபனில் பங்கேற்க முடியுமா, இல்லையா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஒருவேளை அவர் பங்கேற்க முடியாமல் போனால், அந்தக் குற்றத்திற்காக இந்திய பாட்மிண்டன் சங்க நிர்வாகிகளுக்கு என்ன தண்டனை வழங்குவது? ஜுவாலா செய்த தவறுக்காக அவருக்கு வாழ்நாள் தடை விதிக்க முயல்பவர்கள், தங்களின் தவறுக்காக தங்கள் பதவியை ராஜிநாமா செய்வார்களா?
ஒரு போட்டியில் விளையாட மறுத்ததற்காக ஒருவருக்கு வாழ்நாள் தடை விதிப்பது என்பது நிச்சயம் மிக அதிகபட்ச தண்டனைதான். அவரின் தவறுக்காக அவருக்கு அடுத்த இந்திய பாட்மிண்டன் லீக்கில் ஏதாவது ஒரு போட்டியில் விளையாட தடை விதித்திருக்கலாம் அல்லது அபராதம் விதித்திருக்கலாம். இதுதான் அவருடைய தவறுக்கு சரியான தண்டனையாக இருக்க முடியும்.
ஒருவர் முதல்முறையாக ஊக்கமருந்து விவகாரத்தில் சிக்கினாலே அவருக்கு அதிகபட்சமாக 2 ஆண்டுகள் தடைவிதிக்கப்படுகிறது. சூதாட்டத்தில் சிக்குபவர்களுக்குக்கூட அவர்களின் வயதைக் கருத்தில் கொண்டு குறைந்தபட்ச தண்டனையே வழங்கப்படுகிறது. அப்படியிருக்கையில் ஜுவாலாவுக்கு வாழ்நாள் தடை விதிப்பதை எப்படி ஏற்க முடியும்.
ஜுவாலா விஷயத்தில் இந்திய பாட்மிண்டன் சங்கம் எடுத்திருக்கும் முடிவு, கொலை செய்தவனுக்கு குறைந்தபட்ச தண்டனையைக் கொடுத்துவிட்டு, வயிற்றுப் பசிக்காக திருடியவனுக்கு தூக்குத் தண்டனை அளிப்பதற்கு நிகரான முடிவாகத்தான் தோன்றுகிறது.
இந்தியாவில் உள்ள விளையாட்டு சம்மேளனங்கள் மற்றும் விளையாட்டுச் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் செய்யாத ஊழலையும், தவறையுமா ஜுவாலா கட்டா செய்துவிட்டார்? ஜுவாலாவுக்கு வாழ்நாள் தடை என்றால், காமன்வெல்த் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியிருக்கும் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முன்னாள் தலைவர் கல்மாடி போன்றவர்களுக்கு என்ன தண்டனை வழங்குவது, இந்திய ஒலிம்பிக் சங்கம் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு காரணமாக இருந்தவர்களை என்ன செய்வது? காமன்வெல்த் ஊழலால் சர்வதேச அரங்கில் இந்தியாவுக்கு தலைக்குனிவை ஏற்படுத்தியவர்கள்கூட இன்று ஜாமீனில் சுதந்திரமாக சுற்றித் திரிகிறார்கள். அப்படியிருக்கையில் இந்த ஜுவாலாவுக்கு வாழ்நாள் தடை விதிப்பது எந்த வகையில் நியாயம்?
ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்கள் இந்திய ஒலிம்பிக் சங்க தேர்தலில் போட்டியிடக்கூடாத வகையில் விதியை மாற்றி அமையுங்கள் எனக் கூறினால், அதற்கு இந்திய விளையாட்டுத் துறையில் உள்ள கொள்ளைக் கூட்டத்தினர் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள். இன்றுவரை அதற்கு ஒத்துக்கொள்ள மாட்டோம் என அடம்பிடிக்கிறார்கள். அதனால் இன்றைக்கும் இந்திய விளையாட்டு வீரர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இந்திய குத்துச்சண்டை சம்மேளனம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதால் இம்மாதம் நடைபெறவுள்ள உலக குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர்கள் சர்வதேச சம்மேளனத்தின் கொடியின் கீழ்தான் பங்கேற்கவுள்ளனர். அந்தப் போட்டியில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்பார்கள். அவர்கள் அனைவரும் தங்கள் நாட்டு தேசியக் கொடியின் கீழ் பங்கேற்கும்போது, இந்திய வீரர்கள் மட்டும் சர்வதேச கொடியின் கீழ் பங்கேற்கும்போது அவர்களின் மனநிலை எப்படியிருக்கும். அது அவர்களின் ஆட்டத்திறனை நிச்சயம் பாதிக்கத்தானே செய்யும். இதைவிட பெரிய அவமானம் வேறு என்னவாக இருக்க முடியும். இதற்கு இந்திய விளையாட்டுச் சங்க நிர்வாகிகள்தானே காரணம். அவர்கள் செய்த தவறுகளைவிட, ஜுவாலா கட்டா செய்த தவறு பெரியதா?
வீரர், வீராங்கனைகளின் நலனுக்காக உருவாக்கப்பட்டதுதான் விளையாட்டுச் சங்கங்கள். ஆனால் இப்போதுள்ள சங்கங்கள் அதைவிட்டுவிட்டு, ஏதாவது ஒரு வகையில் பிரச்னையை ஏற்படுத்தி வருகின்றன.
அடுத்த தலைமுறை வீரர்களை உருவாக்குகிறார்களோ இல்லையோ, அன்றாடம் ஏதாவது ஒரு பிரச்னையை கிளறிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். லண்டன் ஒலிம்பிக்கில் டென்னிஸ் போட்டியில் இந்தியா பதக்கம் வெல்ல பிரகாசமான வாய்ப்பிருந்தது. ஆனால் பயஸ், பூபதி இடையிலான பிரச்னையைத் தீர்க்க தவறிய டென்னிஸ் சங்கம், அதை ஊதி பெரிதாக்கியது. அதன் விளைவு, இந்திய வீரர்கள் ஆரம்ப சுற்றுகளிலேயே தோல்வி கண்டனர். இந்தியாவின் பதக்க கனவு கரைந்து போனது..
வாழ்நாள் தடை என்பது சாதாரண விஷயமா? ஜுவாலாவுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்படுமானால், அது அவரின் பாட்மிண்டன் வாழ்க்கையே முடிவுக்கு கொண்டு வரும். இந்தியாவுக்காக பல்வேறு போட்டிகளில் வெற்றித் தேடித்தந்ததோடு, 2010 காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கத்தையும், 2011 உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தையும் வென்று இந்தியாவுக்கும், இந்திய பாட்மிண்டன் சங்கத்துக்கும் பெருமை சேர்த்த ஒரு வீராங்கனை அவமானப் படுத்தப்பட்டிருப்பது வேதனைக்குரிய விஷயம். இது இந்திய விளையாட்டுத் துறைக்கு நல்லதல்ல!
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago