சந்தோஷ் டிராபி: பிரதான சுற்றில் நுழைவது யார்? தமிழகம், ஆந்திர, கர்நாடகம், கேரளம் இன்று பலப்பரீட்சை

By ஏ.வி.பெருமாள்

மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் நடைபெறவுள்ள சந்தோஷ் டிராபி கால்பந்து போட்டியின் பிரதான சுற்றுக்கு தென் மண்டலத்தில் இருந்து நுழையும் இரு அணிகள் எது என்பது இன்று தெரியவரும்.

68-வது சந்தோஷ் டிராபி கால்பந்து போட்டிக்கான தகுதிச் சுற்றுகள் மண்டல வாரியாக நடைபெற்று வருகின்றன. இதில் தென் மண்டல தகுதிச்சுற்று போட்டிகள் சென்னை ஜவஹர்லால் நேரு மைதானத்தில் நடைபெற்று வருகின்றன.

கடைசி நாளான திங்கள்கிழமை நடைபெறவுள்ள முதல் போட்டியில் கர்நாடகமும், கேரளமும் மோதுகின்றன. 2-வது போட்டியில் தமிழகம், ஆந்திரத்தை சந்திக்கிறது. கர்நாடகம், தமிழகம் ஆகிய இரு அணிகளும் தலா 7 புள்ளிகளைப் பெற்றிருந்தாலும், கோல் வித்தியாச அடிப்படையில் கர்நாடகம் முதலிடத்திலும், தமிழகம் 2-வது இடத்திலும் உள்ளன. கேரளம் 6 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது.

யாருக்கு வாய்ப்பு?

முதல் போட்டியைப் பொறுத்த வரையில் கர்நாடகம் வெற்றி பெற்றாலோ அல்லது டிரா செய்தாலோ முதல் அணியாக பிரதான சுற்றுக்கு முன்னேறிவிடும். ஒருவேளை முதல் போட்டி டிராவில் முடிந்து, தமிழகம், ஆந்திரத்திடம் தோற்றால் தமிழகமும், கேரளமும் தலா 7 புள்ளிகளுடன் இருக்கும். ஹெட் டூ ஹெட் கணக்கிடும்போது ஏற்கெனவே கேரளத்தை தோற்கடித்துள்ள தமிழகம் பிரதான சுற்றை உறுதி செய்யும்.

முதல் போட்டியில் கேரள அணி கர்நாடகத்தை வீழ்த்தும்பட்சத்தில் அந்த அணி 9 புள்ளிகளுடன் பிரதான சுற்றில் நுழையும். அதே நேரத்தில் 2-வது ஆட்டத்தில் ஆந்திரத்துக்கு எதிராக தமிழக அணி வெற்றியோ அல்லது டிராவோ செய்தால் மட்டுமே பிரதான சுற்றை உறுதி செய்ய முடியும். தமிழகம் வெற்றி பெற்றால் 10 புள்ளிகளுடன் முதலிடத்தையும், டிரா செய்தால் 2-வது இடத்தையும் பிடிக்கும்.

மாறாக கேரளத்திடம் கர்நாட கமும், ஆந்திரத்திடம் தமிழகமும் தோற்கும்பட்சத்தில் கேரளம் முதல் அணியாக பிரதான சுற்றுக்கு முன்னேறும். 2-வது அணி யாக கர்நாடகம் தகுதிபெறும். ஏனெனில் கர்நாடகமும், தமிழகமும் தலா 7 புள்ளிகளுடன் இருந்தாலும், கோல் வித்தியாச அடிப்படையில் கர்நாடகம் முன்னிலையில் உள்ளது. கர்நாடகம் 18 கோல்களுடனும், தமிழகம் 10 கோல்களுடனும் உள்ளன.

முதல் போட்டியைப் பொறுத்தவரையில் கேரளம், கர்நாடகம் என இரு அணிகளுமே பலம் வாய்ந்தவை என்றாலும், கடந்த முறை இறுதிச்சுற்று வரை முன்னேறிய கேரளத்தை அவ்வளவு எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என்பதால் கேரளம் கடும் சவால் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் கர்நாடகம் டிரா செய்தாலே பிரதான சுற்றை உறுதி செய்துவிடலாம்.

ஆந்திரத்தை வீழ்த்துமா தமிழகம்?

2-வது போட்டியைப் பொறுத்த வரையில் இதுவரை தோல்வியை சந்திக்காத தமிழகம், ஆந்திரத்துக்கு எதிராக வெற்றிபெற போராடும் என்பதில் சந்தேகமில்லை. ஆந்திரம் ஏற்கெனவே பிரதான சுற்று வாய்ப்பை இழந்துவிட்டதால் வெற்றியோ, தோல்வியோ அந்த அணிக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றாலும், கடைசி போட்டியை வெற்றியோடு முடிக்க விரும்பும். ஆந்திர அணியோடு ஒப்பிடும்போது தமிழக அணி சற்று வலுவானதாகவே உள்ளது.

தமிழக அணியைப் பொறுத்த வரையில் ரீகன் விளையாடாததால் மற்றொரு ஸ்டிரைக்கரான அமீருதீன் களமிறங்குகிறார். அமீருதீனுக்கு கேப்டன் சுதாகர், சார்லஸ் ஆனந்தராஜ் உள்ளிட்ட நடுகள வீரர்கள் பலமாக இருப்பதோடு, முன்னேறி சென்று விளையாடுவது முக்கியமாகும். கடந்த போட்டியில் ஆனந்தராஜ் அளவுக்கு மற்ற நடுகள வீரர்கள் முன்னேறி சென்று விளையாடாததால் முதல் பாதியில் ரீகனும், 2-வது பாதியில் அமீருதீனும் கடுமையாகப் போராட வேண்டியிருந்தது. ஆந்திர அணி தாத்தம் நாயுடு போன்ற வலுவான வீரர்களைக் கொண்டுள்ளதால் தமிழக நடுகள வீரர்களின் செயல்பாட்டைப் பொறுத்தே தமிழகத்தின் கோல் வாய்ப்பு அமையும்.

கடந்த இரு போட்டிகளிலும் தவறிழைத்த கார்த்திக், எடிசன் போன்ற வீரர்கள் அதே தவறை இந்த முறை செய்யாமல் பார்த்துக்கொள்வது அவசியம். கடைசி போட்டி என்பதால் 2-வது பாதி ஆட்டத்தின்போது தமிழக அணி அதிகஅளவில் மாற்று வீரர்களைக் களமிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரீகனுக்குப் பதில் அமீருதீன்

கடந்த சனிக்கிழமை நடைபெற்ற கர்நாடகத்துக்கு எதிரான போட்டியில் தமிழக ஸ்டிரைக்கர் ரீகனுக்கு தலையில் அடிபட்டது. அதைத் தொடர்ந்து 2-வது பாதி ஆட்டத்தின் தொடக்கத்தில் அவர் உணர்விழந்தார். இதையடுத்து அவருக்கு சனிக்கிழமை மாலையில் ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது.

இது தொடர்பாக தமிழக அணியின் உதவிப் பயிற்சியாளர் முருகவேந்தனிடம் கேட்டபோது, “ரீகனின் வலது நெற்றிப் பகுதியில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது ஸ்கேன் பரிசோதனை மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவரை ஒரு வாரம் ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதனால் ஆந்திரத்துக்கு எதிராக அவர் விளையாடமாட்டார். அவருக்குப் பதிலாக மற்றொரு ஸ்டிரைக்கர் அமீருதீன் களமிறங்குவார். ரீகன் தற்போது நலமாக உள்ளார்” என்றார்.

அணியின் பார்மட்டில் ஏதாவது மாற்றம் இருக்குமா என்று கேட்டபோது, “நாங்கள் ஆரம்பம் முதலே 4-5-1 என்ற பார்மட்டில்தான் விளையாடி வருகிறோம். ஸ்டிரைக்கருக்கு உதவியாக கேப்டன் சுதாகரும் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபடுகிறார். அதனால் கடைசி போட்டியில் கூடுதல் ஸ்டிரைக்கரை இறக்கவோ, பார்மட்டை மாற்றவோ தேவையில்லை” என்றார் முருகவேந்தன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

மேலும்