சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: ஜெர்மனியை வீழ்த்தும் வாய்ப்பை நழுவ விட்ட இந்திய அணி

By ஆர்.முத்துக்குமார்

லண்டனில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டித் தொடரில் ஜெர்மனியை வீழ்த்தும் வாய்ப்பை இந்தியா கோட்டை விட ஆட்டம் 3-3 என்று டிரா ஆனது.

பெரும்பாலான நேரம் இந்தியா அணி 3-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது, 4-வது கோல் அடிக்கும் வாய்ப்புகளை சரியாக இந்திய அணி கையாளவில்லை, மாறாக கடைசி நேரத்தில் ஜெர்மனி அணி கொடுத்த நெருக்கடிக்கு சில பல தவறுகளைச் செய்து அந்த அணியை 2 கோல்கள் அடிக்கவிட்டு ஆட்டத்தை டிராவுக்குக் கொண்டு செல்ல அனுமதித்தனர்.

இந்திய தரப்பில் ரகுநாத் 7-வது நிமிடத்திலும், மந்தீப் சிங் 26-வது நிமிடத்திலும், ஹர்மன்பிரீத் சிங் 32-வது நிமிடத்திலும் கோல்களை அடிக்க ஜெர்மனி தரப்பில் டாம் கிராம்பஷ் இரண்டு கோல்களை அடிக்க, 57-வது நிமிடத்தில் ஜோனஸ் கோமோல் பெனால்டி ஸ்ட்ரோக்கில் 3-வது கோலை அடித்து சமன் செய்தார்.

3-வது கால்மணி நேர ஆட்டத்தில் இந்தியா 3-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. அதன் பிறகு 10-வீரர்களுடன் இந்திய அணி ஆட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட ஜெர்மனி அணி அதனை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது, இந்திய வீரர்களும் சிலபல தவறுகளை இழைத்தனர்.

கடந்த ஆண்டு சாம்பியன் அணிக்கு எதிராக 3-3 டிரா என்பது சிறந்தது என்றாலும் வெற்றி வாய்ப்பை கோட்டை விட்டது அனுபவமின்மையாலேயே என்கிறார் பயிற்சியாளர் ரூலண்ட் ஆல்ட்மன்ஸ். சர்தார் சிங் இல்லாமலேயே இந்தியா பெரும்பகுதி ஆட்டத்தில் நல்ல கட்டுப்பாட்டுடன் இருந்தது. இந்திய முன் கள வீரர்கள் பந்தை அருமையாக எடுத்து சென்று தொடக்க கணங்களில் ஜெர்மனி வீரர்களிடையே ஐயங்களை தோற்றுவித்தனர்.

இம்மாதிரியான எதிர்த்தாக்குதல் கணத்தில்தான் இந்திய அணிக்கு 7-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பைக் கிடைக்கச் செய்தது. அதனை ரகுநாத் ஜெர்மன் கோல் கீப்பர் வால்டர் டோபியாஸுக்கு வலது புறம் கோலாக் மாற்றி முன்னிலை அளித்தார். எஸ்வி சுனிலின் கோல் ஒன்று ரீப்ளேயில் அவரது காலில் பட்டு சென்றது தெரியவர கோல் இல்லை என்று தீர்ப்பளிக்கப்பட்டது. 17-வது நிமிடத்தில் கோல் அருகே மன்ப்ரீத் சிங்கின் காலில் பந்து பட்டதால் இரண்டாவது தொடர் பெனால்டி வாய்ப்பை ஜெர்மனி பெற, அதனை கிராம்பஷ் கோலாக மாற்றி 1-1 என்று சமன் செய்தார்.

ஆனால் இந்தியா அணி மடங்கிவிடவில்லை, வலது புறம் எஸ்.வி.சுனிலுக்கு சுதந்திரமான வெளி கிடைக்க அவர் அசத்தினார். பந்தை எடுத்துக் கொண்டு விறுவிறுவென இடது புறம் முன்னேறிய சுனில் டச் லைனிலிருந்து கிராஸ் ஒன்றை செய்ய மந்தீப் சிங் அதனை அருமையான 2-வது கோலாக மாற்றினார். இந்தியா 2-1 என்று முன்னிலை பெற்றது. மீண்டும் சுனிலின் அருமையான ஆட்டத்தினால் இந்தியாவுக்கு 3-வது பெனால்டி கார்னர் கிடைக்க, இம்முறை அறிமுக வீரர் ஹர்மன்பிரீத் சிங் பெனால்டி ஷாட்டை கோலாக மாற்றினார், இது உண்மையில் ஒரு அழகான கோலாகும். தடுப்பாட்ட வீரர் பந்தின் லைனில் இருந்தும் கோலை தடுக்க முடியவில்லை. 32-வது நிமிடத்தில் இந்தியா 3-1 என்று முன்னிலை.

இதன் பிறகும் இடது புறம் எஸ்.வி.சுனிலின் வேகம் ஜெர்மனியர்களுக்கு பிரச்சினைகளைக் கொடுத்தது. எஸ்.வி.சுனிலின் வேகத்துக்கு இந்திய முன்கள வீரர்களாலேயே ஈடுகொடுக்க முடியவில்லை. இப்படிப்பட்ட ஒரு ஷாட்டைத்தான் ஆகாஷ்தீப் சிங் எடுக்க முடியாமல் திணறினார். இதனையடுத்து இதே போன்ற மற்றொரு மூவில் சுனில் ஆட்டத்தை சற்றே மெதுவாக்கி ஆகாஷுக்கு பாஸ் செய்தார் இம்முறையும் ஆகாஷால் பந்தை கோலாக மாற்ற முடியவில்லை இருமுறையும் ஜெர்மன் தடுப்பணை முறியடிக்கப்பட்டது.

34-வது நிமிடத்தில் இந்திய வீரர் டேனிஷ் முஜ்தபா ஹாக்கி ஸ்டிக்கினால் ஜெர்மன் வீரரை தடுக்க முயன்று பச்சை அட்டைபெற்று 2 நிமிடங்களுக்கு வெளியேற்றப்பட்டார். 10வீரர்களுடன் ஆடிய போது ஜெர்மனி 3-வது பெனால்டி கார்னரை பெற்றது. ஸ்ரீஜேஷைத் தாண்டி கிராம்பஷ் 2-வது கோலை அடித்தார்.

பிறகு ஜெர்மனி அணியினால் 3 பெனால்டி வாய்ப்புகளை கோலாக மாற்ற முடியவில்லை, இந்திய அணி 11 வீரர்களை மீண்டும் பெற்றது. 3-வது கால்மணி நேர ஆட்டம் முடியும் தறுவாயில் எஸ்.வி.சுனில் மீண்டும் ஒரு அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மார்க்கர் இல்லாமல் சுதந்திரமாக இருந்த சுனிலிடம் ஹர்மன்பிரீத் பந்தை கொடுக்க அவரோ வலது புறம் ஜெர்மனி வீரர்களைக் கடைந்து எடுத்து அதிவேகமாக ஒலிம்பிக் ரன்னர் போல் பந்தை எடுத்துச் சென்றார். தடுப்பணைகளை எளிதில் கடைந்து கடைசியில் கோலை நோக்கி ஒரே அடி சுனில் அடிக்க பந்து கோல்போஸ்டைத் தாண்டி சென்றது, கோலாகவில்லை. ஆனால் ஜெர்மனி வீரர்களை அதிர்ச்சியடையச் செய்தார் எஸ்.வி.சுனில். இந்த ஆட்டம் முன்னொரு காலத்தில் இந்திய ஹாக்கியில் இடது புறம் கலக்கிய தோய்பா சிங்கையும், பாகிஸ்தானின் முன்னாள் நட்சத்திரம் ஷாபாஸ் அகமதுவின் உசைன் போல்ட் கால்களையும் நினைவில் கொண்டு வந்தன.

பிறகு 4-வது கால்மணி நேர ஆட்டத்தில் மந்தீப் சிங் 4-வது கோல் வாய்ப்பை கோட்டை விட்டார், இம்முறை உத்தப்பா பந்தை அருமையாக எடுத்து சென்று மந்தீப்பிடம் கொடுத்தார்.

56-வது நிமிடத்தில்தான் ஹர்ஜீத் சிங் குச்சியால் ஜெர்மன் வீரரை தடுக்க நினைக்க 9-வது பெனால்டி கார்னராக ஜெர்மனி வாய்ப்பு பெற்றது. அந்த பெனால்டி கார்னர் ஷாட் பிரதீப் மோரின் மார்பைத் தாக்க பெனால்டி ஸ்ட்ரோக் ஜெர்மன் சார்பாக வழங்கப்பட்டது. ஜோனஸ் கோமோல் அதனை எளிதில் கோலாக மாற்ற ஜெர்மனி 3-3 என்று டிரா செய்தது. கடைசி தருணத்தில் ஆகாஷ் தீப் ஜெர்மன் கோல் கீப்பரை தாண்டி கோலாக அடிக்கும் முயற்சியில் கட்டுப்பாட்டை இழக்க வெற்றி வாய்ப்பு பறிபோன கடுப்பில் மறு முனையில் கேப்டன் ஸ்ரீஜேஷ் தனது ஹாக்கி குச்சியை விளம்பரப்பலகையின் மீது விட்டெறிந்தார்.

கடந்த முறை சாம்பியனான ஜெர்மனியை வீழ்த்தக் கிடைத்த அருமையான வாய்ப்பு பறிபோன ஏமாற்றத்தை கேப்டன் ஸ்ரீஜேஷ் வெளிப்படுத்தினார், ஆனால் இந்திய அணியின் சர்வதேச நட்சத்திரமாக எஸ்.வி.சுனில் இனி ஜொலிப்பார் என்பதையும் பாகிஸ்தானின் முன்னாள் நட்சதிரம் ஷாபாஸ் அகமடுக்கு சமமான ஒரு வீரர் இந்திய அணியில் இருக்கிறார் என்பதையும் இந்தப் போட்டி அடையாளப்படுத்தியது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்