இந்த வெற்றியின் மூலம், 7 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
மொஹாலியில் நடந்து முடிந்த 3-வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா, முதலில் இந்தியாவை பேட் செய்ய அழைத்தது.
துவக்க ஆட்டக்காரர்களான ரோஹித் ஷர்மா 11 ரன்களிலும், தவான் 8 ரன்களிலும் ஆட்டமிழக்க, பொறுப்புடன் பேட் செய்த விராட் கோலி 73 பந்துகளில் 68 ரன்கள் சேர்த்தார். சுரேஷ் ரெய்னா 17 ரன்களில் ஆட்டமிழந்தார்.
யுவராஜ் சிங் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழக்க, அணியை சரிவில் இருந்து மீட்டதுடன், வலுவான இலக்கை நிர்ணயிக்க உறுதுணைபுரிந்தார் கேப்டன் தோனி. அவர் கடைசி வரை ஆட்டமிழக்காமல், 121 பந்துகளில் 139 ரன்கள் குவித்தார். அவருடன் களத்தில் நின்ற அஸ்வின் 28 ரன்கள் சேர்த்தார். புவனேஸ்வர் குமார் 10 ரன்கள் எடுத்தார்.
முடிவில், இந்தியா தனது இன்னிங்ஸ்சில், 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 303 ரன்கள் எடுத்து, சற்றே நெருக்குதலைத் தரக்கூடிய வெற்றி இலக்கை நிர்ணயித்தது.
ஆஸ்திரேலிய தரப்பில் ஜான்சன் 4 விக்கெட்டுகளையும், மெக்கே, வாட்சன், ஃபவுல்க்னர் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
பின்னர், 304 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி வெற்றி பெற்றது.
அந்த அணியில் அதிகபட்சமாக, வோகஸ் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 76 ரன்கள் எடுத்தார். அவருடன் இணைந்து 29 பந்துகளில் 64 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார் ஃபவுல்க்னர். கேப்டன் பெய்லி 43 ரன்களையும், ஃபின்ச் 38 ரன்களையும் எடுத்தனர். ஹிதின் 24 ரன்கள் எடுத்தார்.
இந்திய தரப்பில், வினய் குமார் 2 விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் குமார், இஷாந்த் ஷர்மா, ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இந்தப் போட்டி, 47-வது ஓவர் வரை இந்தியாவின் வசம்தான் இருந்தது. ஆனால், 48-வது ஓவரில் இஷாந்த் ஷர்மாவின் பந்துவீச்சை, ஃபவுல்க்னர் துவம்சம் செய்து ஆட்டத்தின் போக்கை மாற்றினார். அந்த ஒரே ஓவரில் 30 ரன்கள் விளாசப்பட்டது.