89 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை பறிகொடுத்து தொடரை இழந்த பாகிஸ்தான்

துபாயில் நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் அபாரமான தொடக்க விக்கெட் ரன் சேர்ப்புக்குப் பிறகு 10 விக்கெட்டுகளையும் 89 ரன்களுக்கு இழந்து பாகிஸ்தான் தோல்வி தழுவி ஒருநாள் தொடரை இழந்தது.

டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட் செய்து 126/0 என்ற பலமான நிலையிலிருந்து 10 விக்கெட்டுகளையும் அடுத்த 89 ரன்களில் இழந்து 215 ரன்களுக்குச் சுருண்டது. தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 43.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 217 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று தொடரை 2-0 என்று கைப்பற்றியது. இன்னமும் ஒரு போட்டி மீதமுள்ளது.

தொடக்கத்தில் அகமத் ஷேஜாத் (61, 82 பந்துகள் 5 பவுண்டரி) மற்றும் சர்பராஸ் நவாஸ் (65 ரன்கள், 72 பந்துகள், 5 பவுண்டரி ஒரு சிக்சர்) அபாரமாக ஆடி 25 ஓவர்களில் போராடி 126 ரன்கள் என்ற அபாரத் தொடக்கம் கொடுத்தனர்.

ஆனால் அதன் பிறகு 3 காமெடி ரன் அவுட்கள். மிஸ்பா உல் ஹக் ரன் அவுட் ஆனார். மிட்செல் ஜான்சன் முக்கியக் கட்டங்களில் விக்கெட்டுகளை வீழ்த்தி 2வது முறையாக இந்தத் தொடரில் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

பவாத் ஆலம் போராடி 39 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்தார். கடைசி 10 ஓவர்களில் 29 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

இலக்கைத் துரத்திய ஆஸ்திரேலியா அணியின் ஏரோன் பின்ச், கடந்த போட்டியின் சத நாயகன் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் மலிவான ஸ்கோரில் வெளியேறினர். ஆனால் டேவிட் வார்னர் 27 பந்துகளில் 29 ரன்கள் எடுத்தார்.

72/3 என்ற நிலையில் மேக்ஸ்வெல், பெய்லி இணைந்து 85 ரன்களைச் சேர்த்தனர். கடினமான பிட்சில் பெய்லி இதில் 21 ரன்களை மட்டுமே பங்களிப்பு செய்ய முடிந்தது. மொத்தமாக 28 ரன்கள் எடுத்து அவர் ஆட்டமிழந்தார்.

ஆனால் கிளென் மேக்ஸ்வெல் திறமையாக ஆடினார். ஆனால் அவர் 2 ரன்களில் இருந்த போது உமர் அக்மல் ஸ்லிப் திசையில் கேட்சைக் கோட்டை விட்டார்.

இதனை நன்றாகப் பயன்படுத்திய மேக்ஸ்வெல் 81 பந்துகளில் 9 பவுண்டரி 1 சிச்கருடன் 76 ரன்கள் எடுத்து அணியை வெற்றிக்கு இட்டுச் சென்றார். கடைசியில் பாக்னர் 26, ஹேடின் 17 வெற்றியை நிறைவு செய்தனர். ஆட்ட நாயகனாக மேக்ஸ்வெல் தேர்வு செய்யப்பட்டார்.

நாளை 3வது, இறுதி ஒரு நாள் போட்டி நடைபெறுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE