இந்தியா ஆல்ரவுண்ட் அதிரடி: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி

By கார்த்திக் கிருஷ்ணா

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்ற க்ரூப் பி பிரிவு சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. கிட்டத்தட்ட காலிறுதி போல அமைந்த இந்த ஆட்டத்தின் வெற்றியால் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்த இந்தியா 192 ரன்கள் இலக்கை 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 38 ஓவர்களிலேயே எளிதாகக் கடந்தது.

ரோஹித் சர்மா - ஷிகர் தவண் இணை இலக்கை விரட்ட களமிறக்கப்பட்டது. 6-வது ஓவரில் தேவையில்லாத ஒரு ஷாட் ஆடி ஆட்டமிழந்தார் ரோஹித் சர்மா. மார்கல் வீசிய பந்தை இறங்கி வந்து சிக்ஸ்ர் அடிக்க முயல, அது எட்ஜ் ஆகி கீப்பரிடம் சென்றது. அவர் அதை கைப்பற்ற, பெவிலியன் திரும்பினார் சர்மா (12 ரன்கள்).

தவணின் அதிரடியும் கோலியின் அமைதியும்

சர்மாவைத் தொடர்ந்து விராட் கோலி களமிறங்கினார். இலங்கைக்கு எதிராக மோசமாக ஆடியதன் விளைவு கோலியின் இன்றைய ஆட்டத்தில் பிரதிபலித்தது. பந்துகளை எச்சரிக்கையுடனே எதிர்கொண்டு நிதானமாகவே ரன் சேர்த்தார். கோலி எதிர்கொண்ட முதல் 24 பந்துகளில் அவர் பவுண்டரி, சிக்ஸர் இன்றி 9 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தேவைப்பட்ட சராசரி ரன்கள் குறைவாகவே இருந்ததால், கோலியின் நிதான ஆட்டம் இந்திய அணியை பாதிக்கவில்லை. அதேசமயம் மறுமுனையில், தவண், தனது சாம்பியன்ஸ் டிராபி ஃபார்முடன் சீராக ரன் சேர்க்க இந்திய அணியின் ஸ்கோரும் கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்தது. 20 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 1 விக்கெட்டுக்கு 90 ரன்கள் என்ற நிலையில் இருந்தது. தேவைப்பட்ட சராசரி ரன்கள் ஒரு ஓவருக்கு 4-க்கும் குறைவாகவே இருந்தது.

கோலியின் எழுச்சி

இதன் பின் கோலியும் தவணுடன் இணைந்து உற்சாகமாக ரன் சேர்ப்பில் ஈடுபட்டார். குறிப்பாக மார்கல் வீசிய 21வது ஓவரில் ஒருமுறையும், 23-வது ஓவர்ரில் மறுமுறையும் அடுத்தடுத்து 2 பவுண்டரிகள் அடித்து அதிரடி காட்டினார். தவண் 61 பந்துகளில் அரை சதம் கடந்த வேளையில் கோலி 47 ரன்களை எட்டிவிட்டார்.

ஆட்டம் கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் கைவிட்டுப் போவதை உணர்ந்ததாலோ என்னவோ, தொடர்ந்த இந்த இணையின் அசராத ஆட்டத்தால் தென் ஆப்பிரிக்க அணி வீரர்களின் உடல் மொழியே மாறியது. விராட் கோலி 71 பந்துகளில் அரை சதம் எட்டினார்.

சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஷிகர் தவண், 83 பந்துகளில் 78 ரன்கள் எடுத்திருந்தபோது இம்ரான் தாஹிர் வீசிய கூக்ளி பந்தை சரியாகக் கணிக்காமல் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இந்த கட்டத்தில் இந்திய அணிக்கு 20 ஓவர்களில் 41 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலை இருந்ததால் உறுதியான வெற்றியை நோக்கி அணியை இட்டுச் செல்ல யுவராஜ் சிங் களமிறங்கினார்.

சிக்ஸருடன் வந்த வெற்றி

தொடர்ந்து ஆடிய யுவராஜ் சிங் தான் சந்தித்த 5-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டி தன் கணக்கை ஆரம்பித்தார். கோலியும் கிடைத்த எளிய பந்துகளை எல்லாம் பவுண்டரிகளாக மாற்றிக்கொண்டிருக்க, இந்தியா எதிர்பார்த்ததை விட வேகமாகவே இலக்கை நெருங்கியது.

டுமினி வீசிய 38வது ஓவரின் கடைசி பந்தை யுவராஜ் சிங் மிட்விக்கெட் பகுதியில் தூக்கி அடிக்க, பந்து பவுண்டரி எல்லையைத் தாண்டி ரசிகர் கூட்டத்தில் விழுந்தது. இந்த சிக்ஸரின் மூலம் இந்திய அணி இலக்கை கடந்தது. இந்திய வெற்றியின் போது விராட் கோலி 76 ரன்களுடனும், யுவராஜ் சிங் 23 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ஆட்டநாயகனாக பும்ரா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஜூன் 15 அன்று நடக்கும் அரையிறுதியில் இந்திய அணி வங்கதேச அணியை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

51 ரன்களில் 8 விக்கெடுகளை இழந்த தென் ஆப்பிரிக்கா

முன்னதாக டாஸில் வென்று பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 191 ரன்களுக்கு சுருண்டது. குறிப்பாக கடைசி 8 விக்கெட்டுகளை 51 ரன்களுக்குப் பறிகொடுத்தது.

அபாரமான கேப்டன்சி, பந்து வீச்சு, பீல்டிங் ஆகியவற்றோடு தென் ஆப்பிரிக்காவின் மோசமான பேட்டிங்கும் இணைந்து கொள்ள 44.3 ஓவர்களில் 191 ரன்களுக்கு தென் ஆப்பிரிக்கா சுருண்டது.

இந்திய அணியில் புவனேஷ் குமார் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு ஹாட்ரிக் வாய்ப்பிலும் இருந்தார் ஆனால் கைகூடவில்லை. பும்ரா 2 விக்கெட்டுகளை 28 ரன்களுக்குக் கைப்பற்றினார். அஸ்வின் உண்மையில் ஆம்லாவை (35) வீழ்த்தியது ஒரு விதத்தில் திருப்பு முனை என்றே கூற வேண்டும், காரணம் தென் ஆப்பிரிக்கா 76 ரன்களை முதல் விக்கெட்டுக்காகச் சேர்த்து வலுவாகவே சென்று கொண்டிருந்தது.

முதல் 25 ஓவர்களிலேயே தென் ஆப்பிரிக்காவுக்கு இந்திய அணி பவுலர்கள் 75 பந்துகளை ரன் இல்லாத பந்துகளாக வீசி நெருக்கினர். மொத்தம் தென் ஆப்பிரிக்கா விளையாடிய 267 பந்துகளில் 141 பந்துகள் டாட் பால்கள், அதாவது பாதிக்கும் மேல் ரன் இல்லாத பந்துகளே.

தொடக்கத்தில் இந்திய பந்து வீச்சு அவ்வளவு நெருக்கவில்லை. ஆனால் தென் ஆப்பிரிக்காவின் ஆம்லா, டி காக் ஆகியோர் ஏனோ எச்சரிக்கையுடனே ஆடினர். இதனால்தான் தொய்வு ஏற்பட்டது. முதல் 17 ஓவர்களில் மொத்தம் 4-5 பவுண்டரிகளே அடிக்கப்பட்டது.

ஏ.பி.டிவில்லியர்ஸ் முக்கிய ஆட்டங்களில் ஆடி நீண்ட நாட்களாகிவிட்டது, ஆனால் இன்று நிச்சயம் ஒரு கைபார்ப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் அவரோ 2015 உலகக்கோப்பையில் மோஹித் சர்மாவின் த்ரோவில் ரன் அவுட் ஆனது போல், இன்றும் டுபிளெசிஸ் பாயிண்டில் ஆடிய பந்தை ஹர்திக் பாண்டியா அபாரமாகத் தடுத்து தோனிக்கு அனுப்ப டிவில்லியர்ஸ் டைவ் அடித்தும் பயனில்லை அதிர்ச்சிகரமாக ரன் அவுட் ஆனார் டிவில்லியர்ஸ். இத்தனைக்கும் 1 பவுண்டரியுடன் அவர் 12 பந்துகளி 16 ரன்கள் என்று நன்றாகவே ஆடிவந்தார்.

ரன்னே இல்லாததற்கு ஓடியது ஏன் என்று புரியவில்லை, இந்த ரன்னுக்கான அழைப்பும் டிவில்லியர்ஸுடையதுதான். முதலிலிருந்தே தென் ஆப்பிரிக்காவின் கணிப்பு ரன் விஷயத்தில் தவறாகவே இருந்து வந்தது. டேவிட் மில்லர் ஒரு அபாயகரமான ஆட்டக்காரர். இவரும் மோசமாக ரன் அவுட் ஆனார். இந்த முறை டுபிளேசிஸ், டேவிட் மில்லர் இருவருமே ஒரே முனையில் இருந்தனர் விக்கெட் கீப்பருக்கு அடித்த மோசமான த்ரோ ரன்னர் முனைக்குச் செல்லும் போது இருவரும் பேட்டிங் முனையில் இருந்தனர், யார் ரன் அவுட் என்று நடுவர் தீர்ப்பளித்தார், இம்முறையும் டுபிளசிஸ் கிரீசை தொட்டு விட மில்லர் ஆட்டமிழந்தார்.

36 ரன்கள் எடுத்த டுபிளெசிஸ்ஹர்திக் பாண்டியா பந்தை ஆடமுயன்று பவுல்டு ஆகி வெளியேறினார். கிறிஸ் மோரிஸ், பெலுக்வயோ, ரபாடா, மோர்கெல் ஆகியோர் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழக்க டுமினி மட்டும் ஒரு முனையில் 20 நாட் அவுட் என்று தனித்து விடப்பட, தென் ஆப்பிரிக்கா 44.3 ஓவர்களில் சுருண்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்