அமெரிக்கப் பயிற்சியால் மாற்றம் பெற்றிருக்கிறேன்: நீளம் தாண்டுதல் வீரர் பிரேம் குமார்

By ஏ.வி.பெருமாள்

இந்திய நீளம் தாண்டுதல் வீரர்களின் வரிசையில் முன்னணியில் இருப்பவர் தமிழகத்தின் பிரேம் குமார். ஆசிய அளவிலான நீளம் தாண்டும் போட்டிகளில் ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம், தேசிய சாதனை (8.09 மீ.), தேசிய அளவிலான போட்டிகளில் ஏராளமான பதக்கங்களை குவித்திருக்கும் பிரேம் குமாரின் அடுத்த இலக்கு காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வெல்வது.

அதற்காக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் 5 மாத கால பிரத்தியேக பயிற்சியை முடித்துவிட்டு புதிய உத்வேகத்தோடு சென்னை திரும்பியிருக்கிறார். சென்னை செயின்ட் ஜோசப் அகாதெமியில் பயிற்சியாளர் நாகராஜுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டிருந்த பிரேம் குமாரிடம் அமெரிக்க பயிற்சி குறித்து கேட்டோம்.

5 மாத கால பயிற்சியும் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செலீஸ்நகரில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழக மைதானத்தில்தான். அமெரிக்காவைச் சேர்ந்த உயரம் தாண்டுதல் வீரரும், இரு ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றவருமான ஜேமி நியாட்டோ என்னையும் சேர்த்து 7 பேருக்கு பயிற்சியளித்தார்.

நியாட்டோவின் வீடு சான்டியாகோவின் சூலா விஸ்டா நகரில் உள்ளது. அங்குதான் நான் தங்கியிருந்தேன். அமெரிக்காவில் கடும் குளிர் நிலவுவதால் காலை 8.30 மணிக்குத்தான் எங்களின் காலைப் பொழுது தொடங்கும். அவருடைய வீட்டில் இருந்து காலை 9.30 மணிக்கு புறப்பட்டு 30 கி.மீ. பயணத்திற்குப் பிறகு கலிபோர்னியா பல்கலைக்கழக மைதானத்தை அடைவோம். காலை 11 மணிக்குத் தொடங்கும் பயிற்சி பிற்பகல் 3 மணி வரை நீடிக்கும்.

பயிற்சி முறைகள் பற்றி…

உடல் மற்றும் தசைகளை வலுப்படுத்துவதற்காக பளுதூக்குதலில் ஆரம்பித்து ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வகையான பயிற்சிகள் அளிக்கப்பட்டன. அமெரிக்கா செல்வதற்கு முன்பு வரை 30 மீ. தூரம் சீரான வேகத்தில் ஓடிவந்து நீளம் தாண்டுவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். ஆனால் நியாட்டோ அதில் மாறுதல்களை செய்திருக்கிறார்.

30 மீ. தூரத்தில் இருந்து ஓடி வரும்போது மிதமான வேகத்திலும், பின்னர் சில குறிப்பிட்ட “ஸ்டெப்புகளை” தாண்டும்போது என்ன மாதிரியான வேகத்தில் ஓட வேண்டும் என்பதையும் நியாட்டோ கற்றுக்கொடுத்திருக்கிறார். அதனால் எனது செயல்பாட்டில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதை உணர்கிறேன். ஆனால் எத்தனை மீட்டர் தூரத்தில் என்ன வேகத்தில் ஓட வேண்டும் என்பதை உங்களிடம் தெரிவிக்க முடியாது. அது ரகசியம்.

இதேபோல் 30 மீ., 100 மீ., 150 மீ., 400 மீ. தூரம் ஓட்டப் பயிற்சி, மாடிப் படிகளில் இரண்டிரண்டு படிகளாக தாவுதல், ஒரு காலால் நொண்டியத்தே மாடிப் படிகளில் ஏறுதல், பக்கவாட்டு திசையில் (சைடு வாக்கில்) மாடிப் படியில் ஏறுதல், மலையேற்றம், 8 கிலோ எடை கொண்ட பந்தைத் தூக்கி கொண்டு ஓடுதல், தசைகளுக்கு ஏற்ற பயிற்சி, தாண்டுவதற்கு ஏற்ற பயிற்சி என பல்வேறு வகையான பயிற்சிகளை நிறைவு செய்திருக்கிறேன். இதில் எதை செய்தாலும், 8 முறை செய்ய வேண்டும். நம்ம ஊரில் காலை, மாலை என இரு வேளைகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆனால் அங்கு ஒருவேளை மட்டுமே பயிற்சி அளிக்கப்படுவது எளிதாக இருக்கிறது.

மலையேற்றப் பயிற்சி எப்படி இருந்தது?

கலிபோர்னியா மலைப் பகுதியில் 100 மீ. தூரம் மேல் நோக்கி ஓடிவிட்டு, பின்னர் கீழ்நோக்கி இறங்க வேண்டும். வாரம் ஒரு முறை இந்தப் பயிற்சியை தவறாது செய்துவிடுவேன். மூச்சு வாங்காமல் இருப்பதற்காக இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. இதே பயிற்சியை சென்னைக்கு வந்தபிறகும் செய்து கொண்டிருக்கிறேன். சென்னை திரிசூலத்தில் உள்ள மலைப் பாதையில் ஓடிக்கொண்டிருக்கிறேன். இங்கு சாலைகள் கரடுமுரடாக இருப்பதால் சற்று கடினமாக உள்ளது.

அமெரிக்காவில் விளையாட்டுக்கான உள்கட்டமைப்பு வசதிகள் எப்படியிருக்கின்றன?

முதலில் அங்கு நிலவும் காலநிலை பயிற்சிக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. இந்தியாவில் அதிக வெயில் இருப்பதால் 2 சுற்று பயிற்சியை முடித்ததும் சோர்வடைந்து விடுவோம். ஆனால் அமெரிக்காவில் குளிர் நிலவுவதால் களைப்பின்றி தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட முடிகிறது. அடுத்தபடியாக அங்கு நல்ல உள்கட்டமைப்பு வசதிகள் இருக்கின்றன. நவீன பயிற்சி உபகரணங்கள் இருக்கின்றன.

நம்ம ஊரில் எனக்குத் தெரிந்து சென்னை, மதுரை, கோவை ஆகிய 3 இடங்களில் மட்டும்தான் செயற்கை இழை ஓடுதளங்கள் இருக்கின்றன. ஆனால் கலிபோர்னியாவில் வீதிக்கு வீதி, பள்ளிக்கூடத்துக்கு பள்ளிக்கூடம் செயற்கை இழை ஓடுதளங்கள் இருப்பதைப் பார்க்கலாம். அதுபோன்ற நவீனவசதிகள் இந்தியாவிலும் இருந்தால்நாம் பயிற்சிக்காக அமெரிக்கா செல்ல வேண்டியது இருக்காது.

பயிற்சியாளர் பற்றி ஒரு சில வார்த்தைகள்….

பயிற்சியாளர் நியாட்டோ எங்கள் அனைவருக்கும் நல்ல நண்பர். அவரின் அணுகுமுறையே தனி. என்னை மச்சான் என்றுதான் அழைப்பார். நம்ம ஊரில் ஒவ்வொருவர் மீதும் தனிப்பட்ட முறையில் பயிற்சியாளர் கவனம் செலுத்துவதில்லை. ஆனால் அமெரிக்காவில் ஒவ்வொருவரின் பயிற்சியிலும் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்துகிறார் நியாட்டோ. 7 பேர் பயிற்சிக்கு சென்றாலும், ஒருவருக்கு முழுமையாக சொல்லிக்கொடுத்த பிறகுதான் மற்றொருவருக்கு சொல்லிக் கொடுப்பார்.

கடினப் பயிற்சிகளால் நாங்கள் களைப்படைகிறபோது “ஐஸ் குளியலுக்கு” ஏற்பாடு செய்வார். “ஐஸ் குளியல்” என்பது இடுப்பு வரை ஐஸ் கட்டிகளை ஒரு தொட்டியில் போட்டு அதற்குள் நிற்க வேண்டும். ஆரம்பத்தில் ஐஸ் கட்டிகள் ஊசி போன்று குத்தும். ஆனால் கொஞ்ச நேரத்தில் உடல் மரத்துவிடும். அடுத்த நாள் பயிற்சியில் ஈடுபடும்போது உடல்தசைகளில் எவ்வித களைப்போ, வலியோ இருக்காது.

அமெரிக்க பயிற்சி உங்களுக்கு மாற்றத்தைத் தந்திருக்கிறதா?

5 மாதக் காலத்தில் என்னுடன் பயிற்சி பெற்றவர்களில் பிரணீதா மட்டுமே மும்பையைச் சேர்ந்தவர். மற்றவர்கள் அமெரிக்கா, பிலிப்பின்ஸ் போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள். அங்கு ஏராளமான ஒலிம்பிக் சாம்பியன்கள், சர்வதேச வீரர்கள் வந்து செல்கின்றனர். அவர்களிடம் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடிந்தது. என்னுடைய பயிற்சிக்கு அவர்கள் மிகுந்த உதவியாக இருந்தனர். அங்கு எனக்கு கிடைத்த பயிற்சி புதிய வேகத்தையும் நல்ல மாற்றத்தையும் தந்திருக்கிறது.

பயிற்சிக் காலத்தில் என்னென்ன மாதிரியான உணவு எடுத்துக் கொண்டீர்கள்?

காலையில் பால், ஆம்லெட், வாழைப்பழம் ஆகியவைதான் உணவு. பயிற்சி நேரத்தில் பசி எடுத்தால் சாண்ட்விச், பழச்சாறு ஆகியவற்றை உணவாக எடுத்துக் கொள்வேன். இரவில் சாதம், பீட்சா, பர்க்கர், இறைச்சி போன்றவற்றை சாப்பிடுவேன். 3 நாள்களுக்கு ஒருமுறை அருகில் உள்ள உணவு விடுதிகளுக்கு பயிற்சியாளர் அழைத்து செல்வார். பெரும்பாலும் அதிக கலோரிகள் மற்றும் விட்டமின்கள் கொண்ட உணவைத்தான் கொடுப்பார்கள்.

அமெரிக்க உணவுகள் பிடித்திருக்கிறதா?

அமெரிக்க உணவுகளில் காரம், உப்பு இருக்காது. அதனால் ஆரம்பத்தில் ஒத்துக்கொள்ளவில்லை. ஒருமாத காலம் கஷ்டப்பட்டேன். பின்னர் பழகிவிட்டது. ஆனாலும் நம்ம ஊர் உணவு மாதிரி வராது. நான் சென்னை வந்ததும் முதலில் சாப்பிட்டது பிரியாணிதான். அப்போது எனக்கு கிடைத்த ஆனந்தத்துக்கு அளவே இல்லை.

அமெரிக்காவில் கிடைத்த மறக்க முடியாத அனுபவங்கள்…

ஒன்றல்ல… மூன்று இருக்கிறது. எனது பிறந்த நாளை முன்னதாகவே தெரிந்து கொண்டு எனக்கே தெரியாமல் பயிற்சியாளர் ஆர்டர் செய்திருந்த கேக். மற்றொன்று சிகாகோவில் நடைபெற்ற இண்டோர் சாம்பியன்ஷிப் போட்டிக்கு செல்வதற்காக லாஸ் ஏஞ்சலீஸ் விமான நிலையத்தில் நாள் முழுவதும் காத்திருந்து விமானம் ரத்து செய்யப்பட்டதால் போட்டியில் பங்கேற்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பியது. மூன்றாவதாக சான்டியாகோ ஒலிம்பிக் பயிற்சி மையத்தில் போட்டியை முடித்துவிட்டு பயிற்சியாளருடன் திரும்பிக் கொண்டிருந்தபோது எங்கள் கார் விபத்துக்குள்ளானபோதும் நாங்கள் காயமின்றி தப்பியது.

உங்களின் அடுத்த இலக்கு…

காமன்வெல்த் போட்டிதான் எனது அடுத்த இலக்கு. இப்போது என்னுடைய “பெர்சனல் பெஸ்ட்” 8.09 மீ. ஆக இருக்கிறது. இதைவிட தூரமாக வேண்டும். அது நடந்துவிட்டால் காமன்வெல்த் போட்டியில் பதக்கம் உறுதி என பிரேம் குமார் கூறியபோது அவரின் கண்களில் நம்பிக்கையைக் காண முடிந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்