விம்பிள்டன் டென்னிஸ் தொடர் ஆடவர் ஒற்றையர் அரையிறுதிக்கு சுவிஸ் நட்சத்திர ரோஜர் பெடரர் தகுதி பெற்றார்.
இன்று நடந்த காலிறுதி ஆட்டத்தில் குரேஷியா வீரர் மாரின் சிலிச்சை, ரோஜர் பெடரர் 6-7, 4-6, 6-3, 7-6, 6-3 என்ற செட்களில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். இதன் மூலம் கடந்த 4 ஆண்டுகளாக பெடரர் கனவு காணும் 18வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை நோக்கி அடியெடுத்து வைத்துள்ளார். ஒவ்வொரு முறையும் இவருக்கு முட்டுக்கட்டை போடும் நொவக் ஜோகோவிச் இம்முறை தோற்று வெளியேறியது பெடரருக்கு வாய்ப்பை அளித்துள்ளது.
முதல் செட்டில் இருவரும் 1-1, 2-2 என்று பிரேக் செய்ய முடியாமல் 6-6 என்று டை பிரேக்கிற்குச் சென்றனர். முதல் செட்டிலேயே பெடரர் 7 ஏஸ் சர்வ்களை அடித்தார். டை பிரேக்கரில் வலை அருகே சென்று சிலிச் நெருக்கடி கொடுக்க பெடரர் தவறு செய்ய பிரேக் செய்து பிறகு தன் சர்வின் மூலம் 3-0 என்று முன்னிலை பெற்றார். பிறகு 2 பெரிய சர்வ்களை அடித்த சிலிச் 5-0 என்று அசைக்க முடியா நிலைக்குச் சென்றார். பிறகு இன்னொரு ஏஸ் சர்வையும் அடிக்க 4 செட் பாயிண்ட்களை பெற்றார் சிலிச். இதில் 2-ஐ வெற்றிகரமாக தடுத்த பெடரர் கடைசியில் ஃபோர்ஹேண்ட் ஷாட் ஒன்று வெளியே செல்ல முதல் செட்டை 7-6 என்று கைப்பற்றினார் சிலிச்.
2-வது செட்டில் பெடரர் முதல் சர்வீஸை எடுத்தார். ஒரு தவறான பேக் ஹேண்ட் ஷாட்டினால் 30-30 என்று சிலிச்சுக்கு வாய்ப்பு கொடுத்தார். ஆனால் வலையருகே வந்து ஒரு ஃபோர்ஹேண்ட் ஸ்லைஸ் ஷாட் ஆட முதல் கேமை பெடரர் வென்று 1-0 என்று முன்னிலை பெற்றார். பிறகு சிலிச் தனது ஆக்ரோஷமான சர்வினால் தனது கேமை தக்க வைக்க 2-வது செட்டும் 1-1 என்று தொடங்கியது.
அடுத்த பெடரர் சர்வின் போது சிலிச்சின் தரை ஷாட்களை பெடரரால் ஒன்றும் செய்ய முடியாமல் போக தன் சர்விலேயே அவர் 0-30 என்று பின் தங்கினார். இதனையடுத்து சிலிச் ஒரு ஆக்ரோஷ பேக்ஹேண்ட் ஷாட்டை ஆட பெடரர் சர்வை பிரேக் செய்தார் சிலிச். அதன் பிறகு அடுத்த தனது சர்வில் சிலிச் டபுள் பால்ட் செய்ய பெடரர் 30-0 என்று முன்னிலை வகித்தார். ஆனால் சிலிச் விடவில்லை சில அபாரமான ஷாட் மற்றும் சர்வில் 40-30 என்று பெடரரை விஞ்சினார், ஆட்டம் டியூஸுக்குச் சென்றது பெடரர் போர்ஹேண்ட் ஷாட்டில் தவறிழைக்க சிலிச் தனது சர்வை பிரேக்கிலிருந்து காப்பாற்றினார். இந்த வாய்ப்பையும் நழுவ விட இந்த செட்டிலும் பெடரர் 4-6 என்று தோல்வி தழுவினார்.
இன்னும் ஒரு செட்டில் தோற்றால் பெடரர் விம்பிள்டனிலிருந்து வெளியேறி விடுவார் என்ற நிலையில் 3-வது செட் தொடங்கியது. முதலில் தனது சர்வில் பெடரர் எளிதில் வென்றார். அடுத்து சிலிச் ஒரு இறுதி ஏஸ் சர்வ் மூலம் தனது சர்வை தக்க வைத்தார். 1-1. அடுத்த சர்வில் பெடரர் பெரிய சர்வ்களை அடித்து 2-1 என்று முன்னிலை வகித்தார். தற்போது பிரேக் முனைப்புடன் இருந்த பெடரருக்கு சிலிச் சர்வை அடித்தார். இம்முறை பெடரர் இரண்டு சர்வ்களை முறியடித்து டியூஸ் வரை கொண்டு சென்றார் ஆனால் சிலிச் விடவில்லை, ஆட்டம் 3-வது செட்டில் 2-2 என்று சமநிலையே வகித்தது. பெடரர் தனது ஆக்ரோஷமான சர்வினால் தனது சர்வ் கேமை வெல்ல 3-2 என்று இருந்தது. அடுத்த சிலிச் சர்வில் பெடரர் ஒரு அபாரமான ஷாட்டை தனக்கு பின்புறமாக எடுத்தார், ஆனால் சிலிச்சின் ஃபோர்ஹேண்ட் பெடரருருக்குப் போக்குக் காட்ட சிலிச் வென்றார் மீண்டும் 3-3 என்று சமநிலையிலேயே ஆட்டம் இருந்தது. அடுத்த சர்வை பெடரர் வீச சிலிச் ஒரு அபாரமான் போர்ஹேண்ட் ஷாட்டினால் 40-0 என்று 3 பிரேக் பாயிண்ட்களைப் பெற்றார். ஆனால் சிலிச் அந்த நிலையிலிருந்து நெட்டில் ஒரு பந்தை அடிக்க, பெடரர் இரண்டு சர்வ்களில் வெல்ல தனது சர்வை தக்க வைத்து 4-3 என்று முன்னிலை வகித்தார். சிலிச் அருமையான வாய்ப்பைக் கோட்டை விட்டார்.
3-வது செட் திருப்புமுனை:
4-3 என்று பெடரர் முன்னிலை பெற்ற நிலையில் சர்வை வீசிய சிலிச் தனது ஃபோர்ஹேண்ட் ஷாட்டை நெட்டில் அடித்தும் பிறகு ஒரு தவறையும் இழக்க பெடரர் 30-0 என்று முன்னிலை பெற்றார். மீண்டும் பந்தை சிலிச் நெட்டில் அடித்து, பிறகு ஒரு டபுள் பால்ட்டையும் செய்ய பெடரர் பிரேக் செய்து 5-3 என்று முன்னிலை பெற்றார், இது தனது வெற்றியையே புரட்டிப் போடும் என்று சிலிச் அப்போது நினைத்திருக்க வாய்ப்பில்லை. அடுத்த சர்வை செட் வெற்றிக்காக வீசினார் பெடரர் முதலில் எளிதில் 30-0 என்று முன்னிலை பெற்ற பெடரர் பிறகு சிலிச்சின் அருமையான நெட் அருகே வந்து ஆடிய வாலி மூலம் 30-30 என்று சமன் ஆனதும் துணுக்குற்றார். ஆனால் கடைசியில் ஒரு அற்புதமான பேக்ஹேண்ட் ஷாட்டில் அந்த செட்டை 6-3 என்று கைப்பற்றி ஆட்டத்தை 4-வது செட்டுக்குக் கொண்டு சென்றார்.
3-வது செட்டில் டபுள் பால்ட் உட்பட தரைஷாட்களிலும் ஏகப்பட்ட தவறுகளைச் செய்த சிலிச் சற்றே நடுக்கம் காண தொடங்கிய நிலையில் 4-வது செட் தொடங்கியது. 4-வது செட்டில் முதல் சர்வை நடுக்கம் இல்லாமல் தக்க வைத்தார் சிலிச். இப்போது சிலிச்சின் நகர்தல்களை துல்லியமாகக் கணித்திருந்த பெடரர் அவருக்கு ஆட்டம் காண்பித்து தனது சர்வைத் தக்கவைக்க 4-வது செட்டில் 1-1. சிலிச் தற்போது எழுச்சியுற்ற பெடரர், அவருக்கு ஆதரவான ரசிகர் பெருமக்கள் குரல்கள் என்ற நெருக்கடியிலிருந்து மீண்டது போல் அபாரமான சர்வ்கள் மூலம் சர்வை தக்க வைத்து 2-1 என்று முன்னிலை பெற்றார். அடுத்த பெடரர் சர்வில் சிலிச்சுக்கு பிரேக் செய்ய இரண்டு வாய்ப்புகள் கிடைத்தது, காரணம் ஃபோர்ஹேண்ட் ஷாட்டை பெடரர் வெளியே அடிக்க, மீண்டும் ஒரு ஃபோர்ஹேண்ட் ஷாட்டையும் பெடரர் சரியாக அடிக்க முடியாமல் 15-40 என்று பின் தங்கினார், பிரேக் செய்ய சிலிச்சுக்கு அருமையான வாய்ப்பு. ஆனால் பெடரர் சர்வ் ஒன்று சிலிச்சின் உடலைக் குறிவைக்க ஒன்றும் செய்ய முடியவில்லை, இன்னொரு சர்வை திரும்ப அடிக்கும் போது வெளியே அடித்தார் சிலிச். மீண்டும் பிரேக் வாய்ப்பை தவற விட்டார் சிலிச், பெடரர் ஒரு ஏஸ் மூலம் தனது சர்வை மீட்டு தக்கவைத்தார். 4-வது செட் ஆட்டம் 2-2.
அடுத்ததான சிலிச் சர்வில் பெடரர் தொடக்கத்தில் ஒரு அருமையான பேக்ஹேண்ட் ஷாட்டை ஆட அதனை சிலிச்சினால் ஒன்றும் செய்ய முடியவில்லை. பிறகு சிலிச் மேலும் ஒரு தவறு செய்ய 15-30 என்று பின் தங்கினார். ஆனால் சிலிச் சர்வை எதிர்கொண்ட பெடரர் மீண்டும் தனது சிக்னேச்சர் பேக்ஹேண்ட் ஷாட் மூலம் நேராக அடிக்க 15-40 என்று இரண்டு பிரேக் பாயிண்ட்கள் கிடைத்தது பெடரருக்கு. ஆனால் சிலிச் விடவில்லை தனது சர்வ் எனும் ஆயுதத்தை நம்பிய அவருக்கு அது கைகொடுக்க 40-40 என்று ஆட்டம் டியூஸுக்குச் சென்றது. பிறகு இன்னொரு ஏஸ், பிறகு இன்னொரு பெரிய சர்வ் போராடி தன் சர்வைக் காப்பாற்றினார் சிலிச், 3-2 என்று முன்னிலை வகித்தார். தனது அடுத்த சர்வை பெடரர் ஒரு கடைசி ஏஸ் மூலம் வெல்ல 3-3. அடுத்து சிலிச் தனது பெரிய சர்வ்களை ஏஸ்களுடன் அடிக்க சிலிச் 4-3 என்று முன்னிலை பெற்றார். அடுத்து பெடரர் சர்வை அவர் அருமையான பேக்ஹேண்ட் மூலம் தக்கவைக்க 4-4. அடுத்த சிலிச் சர்வில் பெடரர் 30-40 என்பது வரை வந்தும் பிரேக் வாய்ப்பில்லாமல் போனது.
மேட்ச் பாயிண்ட் வரை சென்று வெல்ல முடியாத சிலிச்:
தற்போது பெடரர் தனது சர்வில் தோற்றால் சிலிச் அரையிறுதிக்கு முன்னேறி விடுவார் என்ற நிலையில் 4-5 என்ற நிலையில் சர்வை அடிக்கத் தொடங்கினார். இதில் முதல் சர்வில் சரியாக வீசாததால் 2-வது சர்வுக்குச் சென்ற போது சிலிச் பளார் என்று போர்ஹேண்ட் ஷாட் ஆட பெடரர் ஒன்றும் செய்ய முடியவில்லை பெடரர் 0-15. ஆனால் ஒரு ஏஸ் மூலம் அடுத்த 2 பாயிண்ட்களை எடுத்த பெடரர் 30-30 என்று விரைவில் சமன் செய்தார். அதன் பிறகு சிலிச் அடித்த ரிடர்னை பெடரரால் ஒன்றும் செய்ய முடியவில்லை சிலிச்சுக்கு மேட்ச் பாயிண்ட். இப்போது பதற்றம் அடைந்த சிலிச் இரண்டு ரிடர்ன்களிலும் சொதப்ப பெடரர் தக்க வைத்தார் தன் சர்வை. செட் 5-5 என்று சிலிச்சின் சர்வுக்குச் சென்றது. முதலில் பெடரர் அருமையான பேக்ஹேண்ட் மூலம் பாயிண்ட் எடுக்க பிறகு ஒரு போர்ஹேண்ட் ஷாட் மூலம் 30-15 என்று முன்னிலை வகித்தார். பிறகு ஒரு அருமையான ரேலியின் முடிவில் சிலிச் பேக்ஹேண்ட் ஷாட் ஒன்றில் தனது சர்வை போராடி தக்கவைத்தார். செட் 5-6 என்ற நிலையில் பெடரர் சர்வுக்குச் செல்ல பெடரர் தவறுகளை இழைத்து மீண்டும் 0-15 என்றும் பிறகு 15-30 என்றும் பின் தங்கினார்.
ஆனால் ஒரு ஏஸ் பெடரரைக் காப்பற்றிய அதே வேளையில் ஒரு ரிடர்னை நீளமாக வெளியே அடிக்க சிலிச் மேட்ச் பாயிண்டை பெற்றார். இந்த வாய்ப்பையும் சிலிச் நெட்டில் அடித்துக் கோட்டை விட செட் 6-6 என்று டைபிரேக்கருக்குச் சென்றது. டைபிரேக்கரில் இருவரும் பெரும் சவாலாகத் திகழ கடைசியில் சிலிச் தனது போர்ஹேண்டை வெளியே அடிக்க, பிறகு மீண்டும் ஒரு போர்ஹேண்டை நெட்டில் அடிக்க 11-9 என்று பெடரர் வெற்றி பெற்று செட்டை 7-6 என்று கைப்பற்றினார். இதன் மூலம் ஆட்டம் 6-7, 4-6, 6-3, 7-6 என்று ஆளுக்கு 2 செட்கள் என்று சமநிலைக்குச் சென்றது சிலிச் தான் கோட்டை விட்ட வாய்ப்புகளை நினைத்து நிச்சயம் அழுதிருக்க வேண்டும்.
5-வது செட்டிலும் கடும் போட்டிகளுக்கு இடையே ஆட்டம் 4-3 என்று சிலிச் சர்வுக்குச் சென்றது. இதில் ராக்கெட்டை மாற்றிய பெடரர் சில அருமையான ஷாட்களை ஆடி சிலிச்சுக்கு ஆட்டம் காட்டினார் சிலிச் செட்டைக் கோட்டை விட 5-3 என்று பெடரர் தனது மேட்ச் பாயிண்ட் சர்வை வீச ஆயத்தமானார். கடைசி சர்வில் ஆதிக்கமாக ஆடிய பெடரர் வென்று 6-3 என்று செட்டைக் கைப்பற்றி அரையிறுதிக்குள் நுழைந்தார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago