விளையாட்டுத் துறையை அரிக்கும் கரையான்கள்

By ஏ.வி.பெருமாள்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் பின்னடைவை பற்றி நாம் பேசும் இந்த வேளையில், இந்திய விளையாட்டு சங்கங்களின் நிலை என்ன? அதன் செயல்பாடு எப்படி இருக்கிறது என்று பார்த்தால் அது நமக்கு பெரும் அதிர்ச்சியைத் தருகிறது. விளையாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட வேண்டிய இந்த சங்கங்களும், அதன் நிர்வாகிகளும் கரையான்கள் போன்று கொஞ்சம் கொஞ்சமாக விளையாட்டுத் துறையை அழித்து வருகிறார்கள். இவர்களின் இடையூறால் திறமையான வீரர்களும், பயிற்சியாளர்களும் விளையாட்டைவிட்டே ஒதுங்கிய வரலாறும் இருக்கிறது.

இந்திய விளையாட்டு சங்க நிர்வாகிகளாக இருப்பவர்களில் பெரும்பாலானோர் அரசியல்வாதிகள், அரசின் உயர் அதிகாரிகள், செல்வாக்கு மிக்கவர்கள் தான். அதுவும் தேர்தல் நேரத்தில் பதவியைப் பிடிப்பதற்காக இவர்கள் அடித்துக் கொள்ளும் அசிங்கத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அதற்கு நமது உள்ளாட்சி தேர்தலே பரவாயில்லை என்று தோன்றும்.

ஓயாத சண்டைகள்

தமிழக விளையாட்டு சங்கங்களை எடுத்துக் கொண்டால் இன்னும் மோசம். கால்பந்து, குத்துச்சண்டை, கூடைப்பந்து என பல்வேறு விளையாட்டு சங்கங்களில் பதவியைப் பிடிப்பதற்காக நிர்வாகிகள் அடித்துக் கொண்ட வழக்குகள் நீதிமன்றத்துக்கு சென்ற பிறகும்கூட தீர்ந்தபாடில்லை.

ஊழல் பேர்வழிகள் பல்வேறு சலுகைகளை அனுபவிப்பதற்காகவும், விளம்பரம் தேடிக்கொள்வதற்காகவும் அட்டைப் பூச்சி போன்று பதவியில் ஒட்டிக்கொண்டிருக்கும் இவர்கள் நம்முடைய விளையாட்டு வீரர்களிடையே எப்படி நடந்து கொள்வார்கள்? அவர்களை எப்படி நடத்துவார்கள்? இவர்கள் திறமையான வீரர்களை உருவாக்குவார்கள் என்று நாம் எப்படி எதிர்பார்க்க முடியும்? விளையாட்டுத் துறையில் இத்தனை பிரச்சினைகள் இருப்பது தெரிய வந்தால் எந்த பெற்றோர்தான் தங்கள் பிள்ளைகள் விளையாடுவதை அனுமதிப்பார்கள்?

காலம்காலமாக விளையாட்டு சங்கங்களை தங்களின் ஆதிக்கத்தில் வைத்திருக்கும் ஊழல் பேர்வழிகள், தங்களின் உறவினர்கள், தங்களுக்கு வேண்டப்பட்டவர்களை மட்டுமே தங்களுக்குப் பிறகு புதிய நிர்வாகிகளாக நியமிக்கிறார்கள். விளையாட்டுக்கு நல்லது செய்யக்கூடியவர்களோ, நேர்மையானவர்களோ புதிய நிர்வாகிகளாக வந்தால் முந்தைய கணக்கு வழக்குகளை எல்லாம் கேட்டு அவர்கள் செய்த ஊழலை அம்பலப்படுத்திவிடுவார்கள் என்பதால் புதியவர்கள் யாரும் இங்கே நுழைந்துவிடாமல் பார்த்துக் கொள்கிறார்கள்.

அணித் தேர்வில் பாரபட்சம்

அணித் தேர்வில் இவர்கள் காட்டிவரும் பாரபட்சம் பல திறமையான வீரர்களின் வாழ்க்கையை அழித்திருக்கிறது. இந்திய அணி தேர்வு என்று வரும்போது அங்கே இருக்கும் நிர்வாகிகளும், அதிகாரிகளும் தங்களுக்கு வேண்டப்பட்ட வீரர், தங்கள் மாநிலத்தைச் சேர்ந்தவர் என பல வகைகளில் பாகுபாடு பார்க்கிறார்கள்.

சமீபத்தில் முடிவடைந்த ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு தமிழகத்தைச் சேர்ந்த நீளம் தாண்டுதல் வீரர்கள் பிரேம் குமார், விக்னேஷ்வர் ஆகியோர் அனுப்பப்படவில்லை. இவர்களில் பிரேம் குமார் நீளம் தாண்டுதலில் தேசிய சாதனை படைத்தவர். அமெரிக்காவில் பயிற்சியை முடித்துக் கொண்டு திரும்பிய அவர் டைபாய்டு காய்ச்சல் பாதிப்புக்குள்ளானதால் தகுதிச்சுற்றின்போது தகுதி இலக்கை (7.63 மீ.) எட்ட முடியவில்லை. விக்னேஷ்வர் 7.90 மீ. தூரம் தாண்டி தகுதிபெற்றபோதும், அவரை அனுப்பாமல் நீளம் தாண்டுதலில் இந்தியா பங்கேற்கவில்லை என அறிவித்தது இந்திய தடகள சம்மேளனம். இந்த விஷயத்தில் தமிழக வீரர்களுக்கு ஆதரவாக குரல் எழுப்ப வேண்டிய தமிழக தடகள சங்கம் வாயைத் திறக்கவேயில்லை.

கைவிடப்பட்ட தமிழக வீரர்கள்

கேரளத்தைச் சேர்ந்த ரஞ்சித் மகேஷ்வரி, மயூக்கா ஜானி ஆகியோருக்கு இரண்டாவது முறையாக தகுதிச்சுற்று நடத்தி ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு அழைத்து சென்றார்கள். முதல் தகுதிச்சுற்றில் சொதப்பிய ரஞ்சித்துக்கும், மயூக்காவுக்கும் 2-வது முறையாக தகுதிச்சுற்றை நடத்தியவர்கள், பிரேம் குமாருக்கு ஏன் இன்னொரு வாய்ப்பு வழங்கவில்லை? விக்னேஷ்வர், பிரேம் குமார் இருவருக்கும் பதக்கம் வெல்லும் வாய்ப்பிருந்தும் அவர்களை ஏன் அனுப்பவில்லை? இந்த கேள்விகளுக்கெல்லாம் மழுப்பாளன ஒரு பதிலை சொல்லி தப்பித்துக் கொண்டது இந்திய தடகள சம்மேளனம் என்பது வேறு விஷயம்.

ஆனால் ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீளம் தாண்டுதலில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கம் வென்றவர்கள் தாண்டிய தூரம் முறையே 8.01 மீ., மற்றும் 7.90 மீ. தான். தேசிய சாதனை (8.09 மீ.) வைத்திருக்கும் பிரேம் குமார் ஆசிய விளையாட்டுப் போட்டியில் 8 மீ. தூரத்துக்கு மேல் தாண்டியிருக்க நிச்சயம் வாய்ப்புள்ளது. தகுதிச்சுற்றின்போது விக்னேஷ்வர் தாண்டிய அதே அளவைத்தான் கொரிய வீரர் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

இந்தியாவின் இரு பதக்க வாய்ப்பை மட்டுமல்ல, இரு வீரர்களின் பொன்னான தருணத்தை அழித்திருக்கிறது இந்திய தடகள சம்மேளனம். நம்முடைய விளையாட்டு சங்கங்கள் அணித் தேர்வை எப்படி நடத்துகின்றன, வீரர்களின் வாழ்க்கையில் எப்படி விளையாடுகின்றன என்பதற்கு பிரேம்குமாரும், விக்னேஷ்வரும் நல்ல உதாரணம். இதுபோன்ற ஏராளமான உதாரணங்கள் இருக்கின்றன. அணித் தேர்விலேயே இத்தனை பிரச்சினைகள் இருந்தால் நாம் எப்படி சர்வதேச அரங்கில் ஜொலிக்க முடியும்?

அடுத்ததாக எந்த விளையாட்டு அமைப்புகளும் வீரர்களின் நலனில் அக்கறை கொள்வதில்லை. இதற்கு நல்ல உதாரணம் இந்திய டென்னிஸ் சங்கம்தான். பயஸ், பூபதி, போபண்ணாவுக்கு அடுத்தபடியாக அடுத்த தலைமுறை வீரர்களை உருவாக்கத் தவறியது. அதனால் கடந்த ஒலிம்பிக்கின்போது மேற்கண்ட 3 பேரையும் கெஞ்சிக் கொண்டிருந்தது. பயஸ்-பூபதி இடையிலான பிரச்சினையை கடைசி வரை தீர்க்க முடியாமல் போனதால் 2012 ஒலிம்பிக்கில் கலப்பு இரட்டையரில் கிடைக்க வேண்டிய பதக்கமும் பறிபோனது.

போலி சான்றிதழ்கள்

இந்தியாவில் சான்றிதழ்களை தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு விற்று சம்பாதித்த விளையாட்டு சங்க நிர்வாகிகள் நிறைய இருக்கிறார்கள். சிலர் போலிச் சான்றிதழ் மூலம் என்.ஐ.எஸ். (பயிற்சியாளர் படிப்பு) முடித்து அரசுப் பணியில் சேர்ந்திருக்கிறார்கள். சிலர் கல்லூரிகளில் சேர்ந்திருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை விளையாட்டு வீரர்கள் முன்வைக்கிறார்கள். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தைத் (பிசிசிஐ) தவிர எந்த சங்கங்களுமே தாங்கள் சார்ந்த விளையாட்டை வளர்க்க பெரிய அளவில் எந்த முயற்சியையும் எடுக்கவில்லை என்பதுதான் உண்மை. உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்தவோ, பெரிய அளவிலான போட்டிகளை நடத்தவோ, ஸ்பான்சர்களை ஈர்க்கவோ முயற்சிக்கவில்லை. இன்றைக்கும் அரசை நம்பித்தான் இருக்கிறார்கள்.

பிசிசிஐ முன்னுதாரணம்

பிசிசிஐ மீது சில விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும், அவர்கள் கிரிக்கெட்டுக்காக ஆற்றிய பணிகள், அதை மேம்படுத்துவதற்காக எடுத்த முயற்சிகள், அவர்கள் ஏற்படுத்திய உள்கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றுக்காக அவர்களை பாராட்டியே ஆக வேண்டும். அரசின் எந்த உதவியையும் எதிர்பார்க்காமல் தன்னிச்சையாக வளர்ந்து உலக கிரிக்கெட்டில் செல்வாக்குமிக்க வாரியமாக உயர்ந்திருக்கும் இந்திய கிரிக்கெட் வாரியம் மற்ற விளையாட்டு அமைப்புகளுக்கு நல்ல முன்னுதாரணம்.

அவர்கள் அறிமுகப்படுத்திய ஐபிஎல் போட்டியின் மீது பல விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் அதை தொழில்முறை போட்டியாக கொண்டு வந்ததன் மூலம் இன்றைக்கு ஏராளமான இளம் வீரர்கள் பயனடைந்திருக்கிறார்கள். கிரிக்கெட் வாரியத்தால் சாதிக்க முடிந்ததை மற்ற விளையாட்டு அமைப்புகளால் ஏன் சாதிக்க முடியவில்லை என்பதற்கான பதில் யாருக்கு தெரிகிறதோ இல்லையோ, சம்பந்தப்பட்ட சங்கங்களின் நிர்வாகிகளுக்கு நிச்சயம் தெரியும்.

வீரர்களின் வாழ்க்கையில் விளையாடும் அங்கீகாரம் இல்லாத சங்கங்கள் (நாளை பார்க்கலாம்)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

8 mins ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

மேலும்