தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப்: அரையிறுதியே எங்களின் முதல் இலக்கு - தமிழக அணியின் பயிற்சியாளர் திருமாவளவன்

By ஏ.வி.பெருமாள்

உத்தரப் பிரதேச தலைநகர் லக்னெளவில் நாளை தொடங்கும் தேசிய ஹாக்கிப் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறுவதையே முதல் இலக்காகக் கொண்டுள்ளதாக தமிழக அணியின் பயிற்சியாளர் திருமாவளவன் தெரிவித்தார்.

ஹாக்கி இந்தியா 4-வது தேசிய சீனியர் ஆடவர் ஹாக்கி சாம்பியன் ஷிப்பின் “ஏ” டிவிசன் போட்டிகள் லக்னெளவில் நாளை தொடங்குகின்றன. இதில் இந்தியாவின் 20 முன்னணி அணிகள் பங்கேற்கின்றன. அவை ஏ, பி, சி, டி என 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. தமிழக அணி டி பிரிவில் இடம்பெற்றுள்ளது. அதே பிரிவில் ரயில்வே, ஹரியாணா, அந்த மான் மற்றும் நிக்கோபார், இந்திய உணவுக் கழகம் ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.

லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் இடம்பெற்றுள்ள எஞ்சிய 4 அணிகளுடன் தலா ஒருமுறை மோதும். அதன்முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடத்தைப் பிடிக்கும் அணி அரையிறுதிக்கு முன்னேறும். ஏ பிரிவில் முதலிடத்தைப் பிடிக்கும் அணியும், சி பிரிவில் முதலிடத்தைப் பிடிக்கும் அணியும் முதல் அரையிறுதி யில் மோதும். பி பிரிவில் முதலிடத் தைப் பிடிக்கும் அணியும், டி பிரிவில் முதலிடத்தைப் பிடிக்கும் அணியும் 2-வது அரையிறுதியில் சந்திக்கும்.

இதில் பங்கேற்கவுள்ள 18 பேர் கொண்ட தமிழக அணி, பயிற்சியாளர் திருமாவளவன், மேலாளர் அருண் குமார் ஆகியோர் தலைமையில் கடந்த 8-ம் தேதி சென்னையிலிருந்து லக்னெள புறப்பட்டுச் சென்றது.

அணி தேர்வு எப்படி?

திருச்சியில் மாவட்ட அளவிலான ஹாக்கிப் போட்டிகள் நடத்தப்பட்டு அதிலிருந்து 30 வீரர்கள் தமிழக அணிக்கு தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இரண்டு கட்டங்களாக பயிற்சி முகாம் நடத்தி, அதிலிருந்து 18 பேர் இறுதி செய்யப்பட்டு தமிழக அணி உருவாக்கப்பட்டுள்ளது.

1980-ல் மாஸ்கோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற இந்திய அணிக்கு கேப்டனாக இருந்தவரும், இந்திய அணியின் பயிற்சியாளருமான பாஸ்கரனின் மேற்பார்வையிலும், பயிற்சியின் கீழும் இந்த அணி உருவாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவரிடம் கேட்டபோது, “சிறந்த அணியை தேர்வு செய்திருக் கிறோம். தற்போதைய அணியில் இடம்பெற்றுள்ளவர்களில் கோல் கீப்பர் அருண் காந்தி, பின்கள வீரர் முத்துக்குமரன், ஸ்டிரைக்கர் மனோஜ் தவிர மற்ற அனைவருமே தேசிய அளவிலான போட்டிகளில் விளையாடிய அனுபவம் பெற்றவர்கள்.

நடுகள வீரர்கள் ஷியாம் குமார், செல்வக்குமார், முன்கள வீரர்கள் லட்சுமணன் கரண், வினோத் ராயர், கேப்டன் ராஜா, குணசேகர் ஆகியோர் தமிழக அணியின் மிகப்பெரிய பலமாகத் திகழ்கின்றனர். இவர்களில் லட்சுமணன், பெனால்டி வாய்ப்புகளை கோலாக மாற்றுவதில் சாதுர்யமிக்கவர். இந்தியாவின் தலைசிறந்த 20 அணிகள் விளையாடுவதால் போட்டி கடினமானதாகவே இருக்கும். அதேநேரத்தில் தமிழக அணியும் மற்ற அணிகளுக்கு சளைத்ததல்ல. ரயில்வே போன்ற அணிகள் பலம் வாய்ந்தவை என்றாலும், அன்றைய ஆட்டத்தில் எந்த அணி சிறப்பாக விளையாடுகிறதோ அந்த அணிதான் வெற்றி பெறும்” என்றார்.

அந்தமானுடன் மோதல்

நாளை நடைபெறும் அந்தமானுட னான முதல் ஆட்டத்தில் மோதும் தமிழக அணியில் கோல் கீப்பராக பரணி ராஜாவும், பின்கள வீரர்களாக அருள் ஸ்டாலின் டேவிட், ரமேஷ் ஆகியோரும், நடுகள வீரர்களாக செல்வக்குமார், சகாய ஜெயசீலன், ஷியாம் குமார் ஆகியோரும், முன்கள வீரர்களாக குணசேகர், சண்முகம், வினோத் ராயர், லட்சுமண் கரண், கேப்டன் ராஜா ஆகியோரும் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் இலக்கு அரையிறுதி

ஒலிம்பிக்கில் இந்திய அணிக்காக விளையாடியவரும், தமிழக அணியின் பயிற்சியாளருமான திருமாவளவனிடம் கேட்டபோது, “தேசிய சாம்பியன்ஷிப் போட்டிக்காக சிறப்பான முறையில் தயாராகியிருக்கிறோம். அனைத்து வீரர்களும் நல்ல உடற்தகுதியோடு உள்ளனர். தமிழக வீரர்கள் இந்த முறை சிறப்பாக விளையாடுவார்கள் என நம்புகிறேன். ஹாக்கி இந்தியா சார்பில் தேசிய சீனியர் சாம்பியன்ஷிப் 4-வது ஆண்டாக நடைபெறுகிறது. கடந்த 3 ஆண்டுகளும் தமிழக அணி அரையிறுதிக்கு முன்னேறவில்லை. எனவே இந்த முறை அரையிறுதியை உறுதி செய்வதைத்தான் முதல் இலக் காகக் கொண்டுள்ளோம். வீரர்களின் செயல்பாட்டைப் பொறுத்தே வெற்றி வாய்ப்பு அமையும்” என்றார்.

15 ஆண்டு இடைவெளி

தேசிய அளவிலான ஹாக்கிப் போட்டியில் தமிழக அணி கடைசியாக 1999-ல் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. அப்போது தமிழக அணியின் கேப்டனாக இருந்தவர் தற்போதைய பயிற்சியாளர் திருமாவளவன் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு கடந்த 15 ஆண்டுகளாக தமிழக அணி அரையிறுதிக்குகூட முன்னேறவில்லை.

1999-ல் நடைபெற்ற தேசிய ஹாக்கிப் போட்டியில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய தமிழக ஹாக்கி அணிக்கு கேப்டனாக இருந்த திருமாவளவன், இந்த முறை தமிழக அணியை அரையிறுதிக்கு முன்னேற செய்வதில் தீவிரமாக உள்ளார். எனவே தமிழக அணி கடந்த 15 ஆண்டு காலமாக அரையிறுதிக்கு முன்னேறவில்லை என்ற குறை இந்த முறை தீர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக அணி விவரம்: கோல் கீப்பர்கள்: பரணி ராஜா, அருண் காந்தி. தடுப்பாட்டம்: அருள் ஸ்டாலின் டேவிட், ரமேஷ், முத்துக்குமரன். நடுகளம்: சுரேஷ் குமார், செல்வக்குமார், ஞானவேல், சகாய ஜெயசீலன், ஷியாம் குமார், சிவமணி. முன்களம்: மனோஜ், குணசேகர், சார்லஸ், சண்முகம், வினோத் ராயர், லட்சுமணன் கரண், ராஜா (கேப்டன்).

பயிற்சியாளர் திருமாவளவன்

1997 முதல் 2002 வரை இந்திய அணிக்காக விளையாடியவரான திருமாவளவன் 2000-ல் நடைபெற்ற ஒலிம்பிக், 1998, 2002 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டிகளில் இந்திய அணிக்காக விளை யாடியுள்ளார். இதுதவிர 1998-ல் நடைபெற்ற காமன்வெல்த் போட்டி, ஆசிய விளையாட்டுப் போட்டி, 1999-ல் நடைபெற்ற ஆசிய கோப்பை போட்டி உள்ளிட்ட 175 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியவர்.

கேப்டன் ராஜா

தமிழக அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ராஜா, மதுரை மாவட்டம் வாடிப்பட்டியை சேர்ந்தவர். இந்தியன் வங்கியின் மேலாளரான ராஜா, இந்திய அணிக்காக 25 போட்டிகளில் விளையாடி, 30 கோல்களை அடித்துள்ளார். ஏராளமான தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்ற அனுபவம் கொண்டவர். தமிழகத்தின் தலைசிறந்த விளையாட்டு வீரருக்கான விருதை 2012-ல் வென்றவர். தமிழகத்தின் தலைசிறந்த முன்கள வீரர்களில் ஒருவரான ராஜா, கேப்டனாக நியமிக்கப்பட்டிருப்பது தமிழக அணிக்கு பலம் சேர்க்கும் என பயிற்சியாளர் திருமாவளவன் தெரிவித்தார்.

தமிழக அணி மோதும் ஆட்டங்கள்

மார்ச் 11 தமிழகம் VS அந்தமான்

மார்ச் 12 தமிழகம் VS ரயில்வே

மார்ச் 13 தமிழகம் VS இந்திய உணவுக் கழகம்

மார்ச் 15 தமிழகம் VS ஹரியாணா

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்