பந்துக்கும் மட்டைக்கும் இடையில் சில வசவுகள்

By அரவிந்தன்

மன அழுத்தத்தால் போட்டியிலிருந்து விலகுகிறேன் என்று இங்கிலாந்தின் முன்னணி மட்டையாளர்களில் ஒருவரான ஜொனாதன் டிராட் கூறியதற்குப் பின்னணியில் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் ஆடுகளத்தில் எதிரணி வீரர்களை வெறுப்பேற்றவும் கடுப்பேற்றவும் பயன்படுத்தப்படும் வசைகளுக்கு அதில் முக்கியமான பங்கிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஸ்லெட்ஜிங் என்று சொல்லப்படும் உசுப்பேற்றும் சொற்கள் கிரிக்கெட்டின் பிரிக்க முடியாத அங்கமாக மாறிப் பல ஆண்டுகளாகின்றன. இந்த ஸ்லெட்ஜிங் சில சமயம் ரசாபாசமான எல்லைகளையும் தொட்டுவிடும்.

ஸ்லெட்ஜிங் என்பது உண்மையில் உளவியல் யுத்தம். எதிரியைத் தாக்கி வீழ்த்துவதற்கு முன் அவனது மனநிலையை பலவீனப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படுவது. உற்சாகக் காற்றைப் பிடுங்கிவிடும் நோக்குடன் செய்யப்படுவது. ஆத்திர மூட்டி, பதற்றத்தில் தள்ளி, எதிரியைத் தடுமாறவும் தவறிழைக்கவும் வைக்கும் நோக்கத்தில் தொடுக்கப்படும் உளவியல் போர் இது. மகாபாரத காலத்திலும் இது இருந்துள்ளது. “கடலானது கரையைத் தாண்டாததுபோல் நீயும் என்னைத் தாண்டிச் செல்லமாட்டாய்” என்று எதிராளியைப் பார்த்து வாய்ச் சவடால் விட்டுவிட்டுப் பிறகு அம்பு தொடுக்கும் பழக்கம் வில்லாளிகளுக்கு உண்டு. கர்ணன் போர் செய்யும்போது தேர்ப்பாகனாக இருந்த சல்லியனே கர்ணனின் உற்சாகத்தைக் குன்றச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டதையும் வியாசர் பதிவு செய்திருக்கிறார்.

கிரிக்கெட் களத்துக்கு வருவோம். இரு அணிகளுக்கிடையே ஏற்கனவே பகைமை உணர்வு இருக்கும்போது இந்த உளவியல் யுத்தம் கடுமையானதாக மாறிவிடுகிறது. இந்தியா – பாகிஸ்தான், இங்கிலாந்து – ஆஸ்திரேலியா போன்ற அணிகள் மோதும்போது இந்தப் போக்கு உச்சத்தை எட்டுகிறது. தற்போது நடைபெற்றுவரும் ஆஷஸ் தொடரில் இதன் அசிங்கமான முகம் வெளிப்பட்டது. வரும் போட்டிகள் இத்தகைய கசப்புணர்வு இல்லாமல் ஆடப்பட வேண்டும் என்று இரு அணித் தலைவர்களும் வெள்ளைக் கொடி பறக்க விடுமளவுக்கு முதல் போட்டியில் காரம் கடுமையாக இருந்தது. வெள்ளைக் கொடி தொடர்ந்து கம்பத்தில் பறக்கிறதா அல்லது காற்றில் பறக்கிறதா என்பது ஆட்டம் தொடங்கிய பிறகுதான் தெரியும். இந்தச் சூழலில் ‘புகழ்பெற்ற’ சில ஸ்லெட்ஜிங்குகளைப் பார்ப்போம் (பல ஸ்லெட்ஜிங்குகள் பிரசுரிக்க இயலாதவை என்பதால் கஷ்டப்பட்டுத்தான் தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கிறது).

சரியான ஜோடி

1989 லார்ட்ஸ் டெஸ்ட். ஹ்யூக்ஸ் போட்ட பந்தை ஸ்மித் ஆட முயல்கிறார். பந்து மட்டையில் படவில்லை. “உனக்கு பேட்டிங்கே வரவில்லையே?” என்று ஹ்யூக்ஸ் கிண்டலடித்தார். பின்னர் அவரது பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ஸ்மித், “எனக்கு பேட்டிங் வராது, உனக்கு பௌலிங் வராது. நானும் நீயும் சரியான ஜோடி” என்றார்.

வெத்து வேட்டு

ரவி சாஸ்திரி பந்தைத் தட்டிவிட்டு ரன் ஓட முயல்கிறார். ஆஸி அணியின் மாற்று ஆட்டக்காரர் பந்தைத் தடுத்துக் கையில் வைத்தபடி, “ஓடிப் பாரு, உன் மண்டையை உடைக்கிறேன்” என்கிறார். “உனக்கு வாய் இருக்கற அளவுக்கு திறமை இருந்தா நீ ஏன் 12ஆவது ஆளா இருக்கப்போற?” என்று கேட்கிறார் சாஸ்திரி.

சிவப்பு நிறம், வட்ட வடிவம்

தாமஸ் வீசிய பந்தை ரிச்சர்ட்ஸ் அடிக்க முயல, பந்து மட்டையில் படாமல் செல்கிறது. அடுத்தது இப்படி நடக்கிறது. “பந்து சிவப்பா, வட்டமா இருக்கும். அஞ்சு அவுன்ஸ் எடை இருக்கும்” என்கிறார்.

அடுத்த பந்தை ரிச்சர்ட்ஸ் மைதானத்துக்கு வெளியே அனுப்பு கிறார். “பந்து எப்படி இருக்கும்னு உனக்குதான் தெரியுமே, போய் எடுத்துக்கோப்பா” என்கிறார் விவ்.

கதவைச் சாத்தாதே

1960, இங்கிலாந்து – ஆஸி போட்டி. ட்ரூமன் பெவிலியனுக்கு அருகில் உள்ள கதவுக்குப் பக்கத்தில் நிற்கிறார். புதிதாக ஆட வரும் மட்டையாளர் பெவிலியனிலிருந்து வெளியே வந்து கதவைச் சாத்துகிறார். “அப்படியே இருக்கட்டும். சீக்கிரமே நீ திரும்பி வர வேண்டியிருக்குமே” என்கிறார் ட்ரூமன்.

விட்டது மேட்சை

சில சமயம் மட்டையாளர்களும் பீல்டர்களை வெறுப்பேற்றுவார்கள். ஸ்டீவ் வா அதற்குப் பேர்போனவர். 1999 உலகக் கோப்பைப் போட்டியில் அவர் கொடுத்த கேட்சை தென்னாப்பிரிக்க பீல்டர் விட்டுவிட்டார். ரன் எடுத்து முடித்ததும், “நீ கேட்சை விடவில்லை, மேட்சையே விட்டுவிட்டாய்” என்கிறார் வா. சொன்னபடியே மேட்சில் ஆஸ்திரேலியா வெல்கிறது.

“உங்களை ஸ்லெட்ஜ் செய்கி றார்கள் என்றால் நீங்கள் நன்றாக ஆடுகிறீர்கள் என்று அர்த்தம்” என்று இங்கிலாந்து அணி கோச் கிரஹாம் கூச் சொல்லியிருக்கிறார். இந்தியாவின் சிறந்த மட்டையாளர்கள் சச்சின் டெண்டுல்கர், ராகுல் திராவிட், லட்சுமணன் ஆகியோர் ஸ்லெட் ஜிங்கிற்கு பதிலே பேச மாட்டார்கள். கவனத்தையும் சிதறவிட மாட்டார்கள். சச்சினையும் திராவிடையும் ஸ்லெட்ஜ் செய்யச் செய்ய அவர்கள் மனக் குவிப்பு அதிகமாகிறது என்பதால் எதிரணியினர் அவர்களை ஸ்லெட்ஜ் செய்வதையே ஒரு கட்டத்தில் நிறுத்திவிட்டார்கள்.

பந்து வீசத் தெரியும்

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பந்து வீச்சாளர்கள் தங்கள் வீரத்தைப் பொதுவாக வார்த்தைகளில் காட்டுவ தில்லை. அதிலும் அம்புரோஸ் யாரையும் ஸ்லெட்ஜ் செய்ததே இல்லை. ஏன் என்று நிருபர் ஒரு முறை அவரைக் கேட்டபோது, “எனக்குப் பந்து வீசத் தெரியுமே” என்றார் அம்புரோஸ்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்