500-வது டெஸ்ட் என்று கடும் விளம்பரப்படுத்தப்பட்ட நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 291 ரன்கள் எடுத்துள்ளது. ஆட்ட முடிவில் ஜடேஜா 16 ரன்களுடனும், உமேஷ் யாதவ் 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். கான்பூர் பிட்ச் பற்றிய வர்ணனையிலேயெ 280-300 ரன்கள் என்ற முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் நல்ல ஸ்கோர் என்று தெரிவிக்கப்பட்டது ஆச்சரியமளித்தது, காரணம் முதலில் இந்தியா பேட்டிங், 400 ரன்கள்... அஸ்வின், ஜடேஜா, ரிவர்ஸ் ஸ்விங்... வெற்றி என்ற ‘மேட்ரிக்ஸ்’ ஓடிக்கொண்டிருந்தது. ஆனால் நடந்தது என்ன? 154/1 என்ற நிலையிலிருந்து இந்திய அணி அடுத்த 137 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளைப் பறிகொடுத்ததே நடந்தது.
தேநீர் இடைவேளைக்கு சற்று முன்னர் நியூஸிலாந்து தன் பந்து வீச்சின் தீவிரத்திற்கு பலனைப் பெற்றது. 3 விக்கெட்டுகளை சுமார் 10 ஓவர்களில் வீழ்த்தி தேநீர் இடைவேளையின் போது இந்திய அணி 185/4 என்று திணறியது.
விஜய், புஜாரா அருமை! பவுன்சரில் வீழ்ந்த கோலி!
கே.எல்.ராகுல் பிரகாசமாக தொடங்கினார், போல்ட்டின் முதல் ஓவரிலேயே ஒரு புல்டாஸை நேராக பவுண்டரி அடித்தும் பிறகு ஒருகவர் டிரைவ் பவுண்டரி அடித்தும் தொடங்கினார். தொடக்க ஓவர்களில் நியூஸிலாந்து அவ்வளவாக ஆக்ரோஷம் காட்டவில்லை, 2 ஸ்லிப் ஒரு கல்லி என்ற களவியூகம் 7 ஓவர்கள் முடிந்தவுடனேயே ஒரு ஸ்லிப் ஆனது. லெக் திசையில் ஷார்ட் ஸ்கொயர் லெக், ஷார்ட் மிட் விக்கெட்டுடன், டீப் ஸ்கொயர் லெக், டீப் மிட்விக்கெட், ஷார்ட் மிட் ஆன் என்று ரன் தடுப்பு வியூகமே அமைக்கப்பட்டது.
ஆனால் ராகுல் 35 பந்துகளில் 26 ரன்களை எடுத்தார். ஸ்பின் அறிமுகமான பிறகு சாண்ட்னரை ஸ்லாக் ஸ்வீப் மூலம் சிக்ஸ் அடித்து தனது நோக்கத்தை தெளிவு படுத்தினார். ஆனால் அதே சாண்ட்னர் ஓவரில் ஒரு பந்து வேகமாக சறுக்கிக் கொண்டு வர எப்போதும் அத்தகைய பந்துகளை முன்னே வந்து ஆடவேண்டிய ஒரு தொடக்க வீரரான ராகுல், க்ரீஸில் பின்னால் நின்று ஆடத் துணிந்தார், பந்து திரும்பும் என்று நினைத்தார், ஆனால் பந்து திரும்பவில்லை, ஸ்கிட் ஆகி நேரே செல்ல எட்ஜ் ஆகி கீப்பரிடம் கேட்ச் ஆனது.
அதன் பிறகு புஜாரா, விஜய் கவனமுடன் ஆடி தங்களது 3-வது சதக்கூட்டணியை அமைத்தனர். புஜாரா குறிப்பாக ஸ்பின்னர்களை நன்றாக ஆடினார், கால்களை நன்றாகப் பயன்படுத்தி மேலேறி வந்து ஆடினார், அருமையாக ஆன் டிரைவ்களையும் நேர் டிரைவ்களையும் ஆடினார். லேசாக ஷார்ட் பிட்ச் என்று தெரிந்தாலும் பின்னால் சென்று ஆடினார். 108 பந்துகளில் 62 ரன்கள் என்று அவர் 8 பவுண்டரிகளுடன் நியூஸிலாந்துக்கு அச்சுறுத்தலாக இருந்த நிலையில் சாண்ட்னர் பந்தை தவறாகக் கணித்து அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார், விஜய், புஜாரா இணைந்து 112 ரன்களை 2-வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர்.
விராட் கோலி 2 பவுண்டரிகள் அடித்தார், இதில் ஒன்று நீல் வாக்னரின் ஷார்ட் பிட்ச் பந்தை பேக்வர்ட் ஸ்கொயர்லெக்கில் அடித்த பவுண்டரியாகும். இது ரவுண்ட் த விக்கெட்டிலிருந்து வாக்னர் வீசியதால் பந்து நன்றாகக் கணிக்க முடியுமாறு அமைந்தது, ஆனால் அடுத்த முறை இடது கை வேகப்பந்து வீச்சாளர் வாக்னர் ஓவர் த விக்கெட்டிலிருந்து கொஞ்சம் வேகம் கூடுதலாக, கொஞ்சம் கூடுதல் பவுன்ஸுடன் ஒரு பவுன்சரை வீச கோலியின் ஷாட் டாப் எட்ஜ் ஆகி கேட்ச் ஆனது. இம்முறை பந்து கோலியிடமிருந்து விலகிச் செல்லும் கோணத்தினாலும், கூடுதல் பவுன்ஸினாலும் டாப் எட்ஜ் ஆனது.
விஜய் ஷார்ட் பிட்ச் பந்தை அலட்சியம் செய்தார். ஒரு முறை தொடக்கத்தில் அதிகம் எழும்பாத ஷார்ட் பிட்ச் பந்து அவரது முழங்கைக் காப்பில் பட்டு கல்லியில் கேட்ச் ஆக பயங்கரமாக முறையீடு செய்தனர் ஆனால் அவுட் இல்லை.
முரளி விஜய் ஸ்பின்னர் சாண்ட்னரை ஓரிருமுறை மேலேறி வந்து லெக் திசையில் தரையோடு தரையாக ஆடினார், மற்ற வேளைகளில் வேகப்பந்து வீச்சாளரக்ளை பின்னால் சென்று லேட் கட்டில் பவுண்டரி அடித்தார், ஸ்பின்னர்களையும் அப்படித்தான் ஆடினார். 65 ரன்களில் 8 பவுண்டரிகள் எடுத்த நிலையில் லெக் ஸ்பின்னர் இஷ் சோதியின் பந்தை இது போன்ற ஷாட் ஒன்றில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து நடுவர் தீர்ப்புக்குக் காத்திராமல் நடைகட்டினார்.
ரஹானே இறங்கியவுடனேயே சாண்ட்னர் பந்தை ஸ்டம்புக்குள் வாங்கி விட்டுக் கொண்டிருப்பார் தப்பினார், மீண்டும் சாண்ட்னர் அவரை திரும்பும், எழும்பும் பந்துகளினால் தொந்தரவு செய்தார். இந்த நெருக்கடியிலிருந்து மீள கவர் திசையில் தூக்கி ரிஸ்க் ஷாட் ஆடினார் ரஹானே. 18 ரன்கள் எடுத்த நிலையில் விடா முயற்சி ஸ்பின்னர் மார்க் கிரெய்க் அருமையாக ஒரு ‘டிபிகல்’ ஆஃப் ஸ்பின் பந்தை வீச அது ஷார்ட் லெக்கில் கேட்ச் ஆனது.
ரோஹித் சர்மா, அஸ்வின் அரைசதக் கூட்டணி:
209/5 என்ற நிலையில் அஸ்வின், ரோஹித் சர்மா இணைந்து ஓரளவுக்கு ஆடினர், ரோஹித் சர்மா ஆட்டத்தில் பதட்டம் தெரிந்த்து. மார்க் கிரெய்க் பந்துகளில் அவருக்கு எட்ஜ் எடுத்தது. வெளிப்புற எட்ஜ், உட்புற எட்ஜ், பிறகு ஒரு எல்.பி.க்கான முறையீடு ஆகியவற்றுடன் தப்பித்தார். ஆனால் 3 பவுண்டரிகள் 1 சிக்சருடன் அவர் 35 ரன்கள் எடுத்த நிலையில் தூக்கி அடிக்க வேண்டும் என்ற அரிப்பில் அடிக்கப்போக மிட் ஆனில் கேட்ச் கொடுத்து சாண்ட்னரிடம் அவுட் ஆனார்.
புதிய பந்தும் எடுக்கப்பட டிரெண்ட் போல்ட் அருமையான ஒரு இன்ஸ்விங்கரில் சஹாவை பவுல்டு செய்தார். சஹா ஸ்கோரர்களை தொந்தரவு செய்யவில்லை. அஸ்வின் சிறப்பாக ஆடி 7 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் எடுத்த நிலையில் போல்ட்டின் ஆஃப் கட்டரை கல்லியில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். மொகமது ஷமிக்கும் அருமையான பந்தை வீசி பவுல்டு செய்தார் போல்ட். இந்தியா 277/9 என்று ஆனது. ஜடேஜா 3 பவுண்டரிகளுடன் 16 ரன்களுடனும், உமேஷ் யாதவ் 2 பவுண்டரிகளுடன் 8 ரன்கள் எடுத்தும் களத்தில் உள்ளனர்.
இந்தப் பிட்சில் 4-வது இன்னிங்சை ஆடுவது கடினம், நியூஸிலாந்து தரப்பில் போல்ட் 3 விக்கெட்டுகளையும் சாண்ட்னர் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
நியூஸிலாந்து தங்களது பேட்டிங்கில் முன்னிலை பெற்றால் டெஸ்ட் போட்டி மேலும் சுவாரசியமாகும். ஆனாலும் இந்திய பிட்ச் ஒன்றில், முதல் நாளில், பார்மில் உள்ள இந்திய அணியின் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியதால் முதல் நாள் ஆட்டப்பெருமைகள் நியூஸிலாந்தையே சாரும்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago