சாதனைக்கு அங்கீகாரமில்லை - தமிழக ‘கிக்பாக்ஸர்’ வேதனை

By ஏ.வி.பெருமாள்

சர்வதேச அளவில் சாதித்தப்பிறகும் அங்கீகாரம் கிடைக்கவில்லை என வேதனைப்படுகிறார் உலகக் கோப்பை கிக்பாக்ஸிங் போட்டியில் பதக்கம் வென்ற முதல் தமிழரான இசக்கிராஜா.

தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சியை அடுத்த பாறைக்குட்டம் கிராமத்தைச் சேர்ந்த இசக்கிராஜா பி.இ., எம்.பி.ஏ., எம்.டெக். பட்டதாரியாவார். இவர் யாருடைய உதவியும் இன்றி தனது சொந்த முயற்சியால் மட்டுமே சர்வதேச தரம் வாய்ந்த வீரராக உருவெடுத்திருக்கிறார். இசக்கிராஜா சிறுவனாக இருந்தபோது நிஜ போலீஸ்காரர்களையும், சினிமாவில் போலீஸ் அதிகாரியாக வருபவர்களையும் பார்த்து நாமும் போலீஸ் அதிகாரியாக வரவேண்டும் என்ற லட்சியத்தை தனக்குள் வளர்த்திருக்கிறார். அவருடைய போலீஸ் அதிகாரி கனவு தற்போது வரை நிறைவேறாவிட்டாலும் அவருக்குள் ஏற்பட்ட அந்த லட்சியம் இன்று அவரை சிறந்த கிக்பாக்ஸராக உருவாக்கியிருக்கிறது.

போலீஸ் கனவு

நாகர்கோவில் அரசு பாலிடெக்னிக் கில் படித்துக் கொண்டிருந்தபோது, போலீஸ் அதிகாரியாக வலுவான உடலமைப்பு தேவை என்பதை உணர்ந்த இசக்கிராஜா, அதற்காக கல்லூரி மைதானத்தில் தினந்தோறும் பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார். அப்போது அங்கிருந்த தென்னை மரத்தில் காய்த்திருந்த தேங்காயை கற்களால் துல்லியமாக எறிந்து வீழ்த்தியிருக்கிறார். அதைப் பார்த்த ஈட்டி எறிதல் பயிற்சியாளர் செல்வராஜ், உன்னால் ஈட்டி எறிதல் போட்டியில் ஜொலிக்க முடியும் என்று கூறி அவருக்கு ஈட்டி எறிதல் பயிற்சியளித்திருக்கிறார்.

நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கில் இசக்கி ராஜா ஈட்டி எறிதல் பயிற்சியில் ஈடுபட்டி ருந்தபோது, அங்கு கிக்பாக்ஸிங் போட்டி நடை பெற்றுள்ளது. அதைப் பார்த்த இசக்கிராஜா, மற்றொரு செல்வராஜின் (கிக்பாக்ஸிங் பயிற்சியாளர்) உதவியோடு கிக்பாக்ஸிங்கில் களமிறங்கினார். தனது முதல் (மாநில அளவிலான போட்டி) போட்டியிலேயே தங்கம் வென்ற இசக்கிராஜாவின் கிக்பாக்ஸிங் வாழ்க்கையில் அதன்பிறகு தொடர்ந்து ஏறுமுகம் தான்.

உலகக் கோப்பையில் வெண்கலம்

2005-ல் தேசிய ஜூனியர் கிக்பாக்ஸிங் போட்டியில் வெள்ளிப் பதக்கமும், 2006-ல் தேசிய ஜூனியர் போட்டியில் தங்கப் பதக்கமும் வென்றார். பின்னர் சீனியர் பிரிவுக்கு மாறிய இசக்கி ராஜா, ஸ்பான்சர் கிடைக்காத நிலையிலும்கூட, மிகவும் கஷ்டப்பட்டு 2008, 2009-ம் ஆண்டுகளில் வெள்ளிப் பதக்கமும், 2010 முதல் 2012 வரையிலான காலத்தில் நடைபெற்ற 5 தேசிய சீனியர் கிக்பாக்ஸிங் போட்டிகளில் தங்கப் பதக்கமும் வென்று சாதித்திருக்கிறார். இதேபோல் ஆசிய கிக்பாக்ஸிங் சாம்பியன்ஷிப்பிலும் வெண்கலம் வென்றிருக்கிறார்.

கடந்த ஆண்டு ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற கிக்பாக்ஸிங் உலகக் கோப்பை போட்டியில் வெண்கலம் வென்ற இசக்கி ராஜா, சமீபத்தில் துருக்கியில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 10-வது இடத்தைப் பிடித்திருக்கிறார்.

இதுதவிர ஈட்டி எறிதலில் தேசிய ஜூனியர் போட்டியில் இரு வெள்ளிப் பதக்கங்களை வென்றிருக்கிறார். தமிழக பொறியியல் கல்லூரிகளுக்கு இடையிலான ஈட்டி எறிதல் போட்டியில் இசக்கிராஜா எறிந்த 60 மீ. தூரம்தான் இன்றளவும் சாதனையாக உள்ளது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக ‘மூட்டா’ போட்டியிலும் ஈட்டி எறிதலில் இவர் எறிந்த 59 மீ. தூரம்தான் இன்றளவும் சாதனையாக இருக்கிறது. இதேபோல் மாநில அளவிலான மல்யுத்தப் போட்டியில் தொடர்ந்து 5 முறை தங்கப் பதக்கம் வென்றிருக்கிறார்.

அங்கீகாரமில்லை

சர்வதேச அளவில் சாதித்த பிறகும் இன்றுவரை தமிழக அரசும், தமிழகமும் அவரை கண்டுகொள்ளவில்லை. மற்றவர் களும் உதவவில்லை. அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகள் வரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியாவால் விளையாட்டுப் போட்டிகளில் ஜொலிக்க முடியவில்லை என்று குறைகூறிக் கொள்கிறோம். ஆனால் இசக்கிராஜாவைப் போன்றவர்கள் தங்களின் சுயமுயற்சியில் ஜெயிக்கும்போது அவர்களை நாம் கண்டுகொள்வதில்லை என்பது வேதனைக்குரிய விஷயமே.

முதல்வருக்கு கோரிக்கை

கிக்பாக்ஸிங்கில் சாதித்திருக்கும் இசக்கிராஜா, படிப்பிலும் கில்லாடிதான். திருநெல்வேலி சட்டக்கல்லூரியில் பயின்ற அவர் இது தொடர்பாக கூறியது: இதுவரை யாருடைய ஸ்பான்சரும் இன்றி எனது சொந்த பணத்தில்தான் வெளிநாடு சென்று போட்டிகளில் பங்கேற்றிருக்கிறேன். கடந்த முறை உலகக் கோப்பையில் வெண்கலப் பதக்கம் வென்ற பிறகும்கூட எனக்கு எந்தவித அங்கீகாரமும் கிடைக்கவில்லை. அது வேதனையளிப்பதாக உள்ளது. தமிழக முதல்வரை சந்தித்து வாழ்த்து பெறுவதற்கு பலமுறை முயற்சித்தேன். ஆனால் இதுவரை அதற்கான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. இது தொடர்பாக முதல்வரின் தனிப்பிரிவிலும் மனு அளித்திருக்கிறேன். என்றாவது ஒருநாள் முதல்வரை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

தமிழக விளையாட்டுத் துறையை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் தமிழக முதல்வர், சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கம் வென்ற என்னைப் போன்ற வீரர்களுக்கு அரசுப் பணி வழங்கி உதவ வேண்டும் என்பதே எனது கோரிக்கை என்றார். ஹரியாணா போன்ற மாநிலங்களில் சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கம் வெல்ப வர்களுக்கு காவல் துறையில் நேரடி டி.எஸ்.பி. உள்ளிட்ட பணிகள் வழங்கப்படுகின்றன.

அதேபோன்று தமிழகத்திலும் விளையாட்டு வீரர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும்போது காவல் துறையில் சேர காத்திருக்கும் இசக்கிராஜா போன்றவர்களின் கனவு நனவாகும். அவர்களின் சாதனைக்கும் அங்கீகாரம் கிடைக்கும். வளர்ந்து வரும் விளை யாட்டு வீரர்களுக்கு ஊக்கமாக அமையும் என்பதே விளையாட்டு ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

மேலும்