சென்னை ஓபன்: வாவ்ரிங்கா 2-வது முறையாக சாம்பியன்

By ஏ.வி.பெருமாள்

சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்விட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்கா சாம்பியன் பட்டம் வென்றார்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிச்சுற்றில் வாவ்ரிங்கா 7-5, 6-2 என்ற நேர் செட்களில் பிரான்ஸின் எட்வர்ட் ரோஜர் வேஸலினைத் தோற்கடித்தார். சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. டென்னிஸ் மைதானத்தில் நடைபெற்றது. போட்டியின் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை நடை பெற்ற இறுதிச்சுற்றில் போட்டித் தரவரிசை யில் முதலிடத்தில் இருந்த வாவ்ரிங்காவும், 7-வது இடத்தில் இருந்த ரோஜர் வேஸ் லினும் மோதினர். முதல் செட்டில் இருவரும் அபாரமாக ஆடினர்.

7 முறை டியூஸ்

3-வது கேமில் வேஸ்லின் சர்வீஸை முறியடிக்க வாவ்ரிங்கா முயற்சித்தார். ஆனால் மறுமுனையில் வேஸ்லின் கடுமையாகப் போராட, இந்த கேம் நீண்ட நேரம் இழுத்தது. அதேநேரத்தில் வாவ்ரிங்காவும் தொடர்ந்து போராட, இந்த கேம் 7 முறை டியூஸ் வரை சென்றது. இதில் தனது 4-வது அட்வான்டேஜை சரியாகப் பயன்படுத்திய வேஸ்லின், தனது சர்வீஸை மீட்டார். இதனால் வாவ்ரிங்காவின் பிரேக் முயற்சி தோல்வியில் முடிந்தது.

அடுத்த கேமில் வாவ்ரிங்காவின் சர்வீஸை பிடிக்க வேஸ்லின் போராடினார். எனினும் ஒரே டியூஸில் தனது சர்வீஸை தன்வசப்படுத்தினார் வாவ்ரிங்கா. 5-வது கேமில் வேஸ்லின் தனது சர்வீஸை மீட்க, அடுத்த கேமில் வாவ்ரிங்காவின் சர்வீஸ் மீண்டும் டியூஸ் வரை சென்றது. எனினும் வாவ்ரிங்கா தனது சர்வீஸை இழக்கவில்லை. இதன்பிறகு ஆட்டம் விறுவிறுப்பாகச் சென்றது.

11-வது கேமில் பிரேக்

முதல் செட் டைபிரேக்கர் வரை செல்லலாம் என எதிர்பார்த்திருந்த வேளையில், 11-வது கேமில் வேஸ்லினின் சர்வீஸை முறியடித்து 6-5 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார் வாவ்ரிங்கா. அடுத்த கேமில் தனது சர்வீஸை தன்வசப் படுத்திய வாவ்ரிங்கா, முதல் செட்டை 7-5 என்ற கணக்கில் கைப்பற்றினார். இந்த செட் 57 நிமிடங்கள் நடைபெற்றது.

பின்னர் நடைபெற்ற 2-வது செட்டின் முதல் கேமிலேயே தனது சர்வீஸை இழந்தார் வேஸ்லின். இருமுறை டியூஸ் வரை சென்ற இந்த செட்டில் வாவ்ரிங்கா தனது அட்வான்டேஜை சரியாகப் பயன்படுத்தி வேஸ்லினின் சர்வீஸை முறியடித்தார். இதன்பிறகு வாவ்ரிங்கா எவ்வித சிக்கலுமின்றி விளையாடினார். 5-வது கேமில் வேஸ்லினை திணறடித்தார் வாவ்ரிங்கா.

எனினும் விடாப்பிடியாக தனது சர்வீஸை மீட்கப் போராடிய வேஸ்லின் வழுக்கி கீழே விழ, அவரின் சர்வீஸ் வாவ்ரிங்கா வசமானது. இதனால் 4-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்ற வாவ்ரிங்கா 8-வது கேமின் மேட்ச் பாயிண்டில் ஏஸ் சர்வீஸை அடித்து போட்டியை முடிவுக்குக் கொண்டு வந்தார். இஇந்த செட் 38 நிமிடங்களில் முடிந்தது. 1 மணி நேரம், 35 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் வாவ்ரிங்கா 7-5, 6-2 என்ற நேர் செட்களில் வேஸ்லினைத் தோற்கடித்தார்.

இந்த ஆட்டத்தில் வேஸ்லின் சிறப்பாக ஆடியபோதும் அவருடைய பேக் ஹேண்ட் ஷாட்கள் அவருக்கு பலவீனமானதாக அமைந்தது. அவருடைய பேக் ஹேண்ட் ஷாட்கள் பெரும்பாலும் கோர்ட்டுக்கு வெளியிலேயே சென்றன. ஒரு ஏஸ் சர்வீஸை மட்டுமே அடித்தார். மேலும் வாவ்ரிங்காவின் ஷாட்களை கணிக்க முடியாமல் தடுமாறினார்.

அதேநேரத்தில் வாவ்ரிங்காவின் சர்வீஸ்களும், பேக் ஹேண்ட் ஷாட்களும் அவருக்கு பெரும் பலமாக அமைந்தன. 4 ஏஸ் சர்வீஸ்களை விளாசிய வாவ்ரிங்கா அதிகபட்சமாக 208 கி.மீ. வேகத்தில் சர்வீஸ் அடித்தார். பந்துகளை திசைமாற்றி அடித்து வேஸ்லினை ஓடவிட்டார்.

5-வது ஏடிபி பட்டம்

500-வது போட்டியில் விளையாடிய வாவ்ரிங்காவுக்கு சென்னை ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றது மறக்க முடியாத பரிசாக அமைந்தது. இது அவருடைய 5-வது ஏடிபி பட்டம் ஆகும். சென்னை ஓபனில் 15-வது வெற்றியைப் பதிவு செய்துள்ள வாவ்ரிங்கா, இதுவரை தனது ஏடிபி டென்னிஸ் வாழ்க்கையில் 302 வெற்றிகளையும், 198 தோல்விகளையும் பதிவு செய்துள்ளார்.

சென்னை ஓபனில் 2-வது பட்டம்

இந்தப் போட்டியில் வென்றதன் மூலம் சென்னை ஓபன் ஒற்றையர் பிரிவில் 2-வது முறையாக பட்டம் வென்றுள்ளார் வாவ்ரிங்கா. 2010-ல் முதல்முறையாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய வாவ்ரிங்கா அதில் குரேஷியாவின் மரின் சிலிச்சிடம் தோல்வி கண்டார்.

அதன்பிறகு 2011-ல் பெல்ஜியத்தின் சேவியர் மலிஸை வீழ்த்தி முதல்முறையாக சாம்பியன் ஆனார். 2012, 2013 ஆகிய ஆண்டுகளில் காலிறுதியோடு வெளியேறியபோதும், கடந்த ஆண்டில் இரட்டையர் பிரிவில் பட்டம் வென்றார். இந்த ஆண்டில் இரட்டையர் பிரிவில் முதல் சுற்றோடு வெளியேறிய வாவ்ரிங்கா, ஒற்றையர் பிரிவில் பட்டம் வென்றிருக்கிறார்.

சர்வீஸை இழக்காத வாவ்ரிங்கா

இந்த சென்னை ஓபனில் 4 போட்டிகளில் மொத்தம் 73 கேம்களில் விளையாடிய வாவ்ரிங்கா ஒன்றில்கூட தனது சர்வீஸை இழக்கவில்லை. இறுதி ஆட்டத்தின் முதல் செட்டில் ஒரு முறையும், 2-வது செட்டில் இருமுறையும் வேஸ்லினின் சர்வீஸை தகர்த்தார் வாவ்ரிங்கா.

வேஸ்லினின் துரதிருஷ்டம்

கடந்த 12 ஆண்டுகளாக தொழில்முறை வீரராக விளையாடி வரும் ரோஜர் வேஸ்லின் இதுவரை ஒரு ஏடிபி போட்டியில்கூட சாம்பியன் பட்டம் வென்றதில்லை. ஏடிபி போட்டிகளில் இரண்டாவது முறையாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய வேஸ்லின் இந்த முறையும் பட்டம் வெல்லும் வாய்ப்பை கோட்டைவிட்டார். இதுவரை வாவ்ரிங்காவுக்கு எதிராக 4 போட்டிகளில் விளையாடியுள்ள வேஸ்லின் அவையனைத்திலும் தோல்வி கண்டார்.

வாவ்ரிங்காவுக்கு ரூ.45 லட்சம்

சாம்பியன் பட்டம் வென்ற வாவ்ரிங்காவுக்கு கோப்பையுடன் ரூ.45 லட்சத்துக்கு 63 ஆயிரமும், இறுதிச்சுற்றில் தோல்வி கண்ட வேஸ்லினுக்கு 23 லட்சத்துக்கு 73 ஆயிரமும் கிடைத்தன.

6-வது முறையாக சென்னை ஓபனில் விளையாடிய வாவ்ரிங்காவுக்கு சென்னை ரசிகர்களின் ஆதரவு பெரும் பலமாக அமைந்தது. பரிசளிப்பு விழாவில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை செயலர் நஸிமுதீன், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர்-செயலர் ஜெயக்கொடி, தமிழ்நாடு டென்னிஸ் சங்க தலைவர் அழகப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

மேலும்