தமிழ் நாடு கிரிக்கெட் அணியின் ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டனாக நியமிக்கப்பட்ட ஆர்.சதீஷ்,' தி இந்து' (ஆங்கிலம்) நாளிதழுக்கு அளித்த முழு பேட்டி.
அடுத்த மாதம் நடைபெறும் கே.எஸ்.சுப்பையா பிள்ளை கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தமிழ்நாடு அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட ஆர்.சதீஷ், அனைத்திந்திய அளவிலான சுப்பையா பிள்ளைக் கோப்பையை தமிழ்நாடு அணி கைப்பற்றும் என்று கூறியுள்ளார்.
”தமிழக அணிக்கான எனது செய்தி என்னவெனில், இந்த ஒருநாள் தொடர் கோப்பையை வெல்லவே நாம் இங்கு இருக்கிறோம் என்பதே” என்று அவர் ‘தி இந்து’ பேட்டியில் கூறியுள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட்டை நெருக்கமாக பார்த்தவர்களுக்கு ஆர்.சதீஷ் பற்றி தெரிந்திருக்கும். சச்சின் டெண்டுல்கரால் இவரது திறமை அடையாளம் காணப்பட்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விளையாடினார். பிறகு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு மாறினார்.
தற்போது இவரது கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு புதிய திருப்பு முனை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு அணிக்கு சுப்பையாபிள்ளை கோப்பைக்கான ஒருநாள் தொடரில் இவர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவரது பீல்டிங் திறமைகளை சச்சின் டெண்டுல்கர் விதந்தோதியுள்ளார். அனாயசமான இவரது பேட்டிங், மற்றும் பயனுள்ள பந்துவீச்சாளர் என்ற வகையில் இவரது திறமைக்கு இப்போது அங்கீகாரம் கிடைத்துள்ளது.
கடந்த 8 ஆண்டுகளில் 4 முறை முழங்கால் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதனால் ஒவ்வொரு அறுவை சிகிச்சைக்குப் பிறகும் 3 முதல் 8 மாதங்கள் வரை கிரிக்கெட் ஆட்டத்தில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. ஆனாலும் சதீஷ் மனம் தளரவில்லை.
தி இந்து (ஆங்கிலம்) நாளிதழில் அவர் தனது இந்த புதிய கேப்டன் பொறுப்பு பற்றி உரையாடும்போது, “வாழ்க்கையை அந்தக் கணத்தில் வாழ்வது எப்படி என்பதை நான் கற்றுக் கொண்டிருக்கிறேன். எப்போதும் நெடுந்தொலைவுக்குச் சிந்திப்பதில்லை” என்றார்.
சதீஷின் கிரிக்கெட் செய்தி எளிமையானது, “உங்களை வெளிப்படுத்திக் கொள்ளுங்கள், எப்போதும் 100% பங்களிப்பு செய்யுங்கள். அன்றைய தினம் முடிந்தவுடன் இதைச் செய்திருக்கலாம், அப்படிச் செய்திருக்கலாம், இப்படிச் செய்திருக்கலாம் என்ற சிந்தனை ஏற்படக்கூடாது”. இதுதான் இவரது எளிமையான அணுகுமுறை.
தனது ஆல் ரவுண்ட் திறமைகளால் சென்னையில் அவர் ஜாலி ரோவர்ஸ் மற்றும் கெம்ப்ளாஸ்ட் அணியை பலமுறை வெற்றிக்கு இட்டுச் சென்றுள்ளார்.
முதல்தர கிரிக்கெட்டில் 34 போட்டிகளில் சதீஷ் 1674 ரன்களை எடுத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் 45 போட்டிகளில் 968 ரன்கள் எடுத்துள்ளார்.
தனது இடைவெளி நிரம்பிய கிரிக்கெட் வாழ்க்கை பற்றி அவர் கூறும்போது, “கிரிக்கெட் விளையாட முடியாத நேரங்களில் எனது ஆட்டம் பற்றி யோசித்துக் கொண்டிருப்பேன். இப்போது நான் முதிர்ச்சியான பேட்ஸ்மென் என்றே நினைக்கிறேன். எனது கிரிக்கெட் வாழ்வில் ஏற்றத் தாழ்வுகள் அதிகம்” என்றார்.
தமிழ்நாடு அணிக்காக 2000-ஆம் ஆண்டு அறிமுகமானார். அதன் பிறகு ஐசிஎல். கிரிக்கெட்டிற்குச் சென்றார். அதன் பிறகே மும்பை இந்தியன்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப். இப்போது தமிழ்நாடு ஒருநாள் அணியின் கேப்டன்.
பயிற்சியாளர் டபிள்யூ.வி.ராமன் பற்றி சதீஷ் கூறும்போது, “அவர் கிரிக்கெட் நுணுக்கங்கள் அறிந்தவர். அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொள்ளலாம். என் மீது நம்பிக்கை வைத்து கேப்டன் பொறுப்பு வழங்கிய தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கு எனது நன்றி. நாம் சார்ந்த மாநில அணியை வழிநடத்திச் செல்வது எனக்கு அளிக்கப்பட்ட மிகப்பெரிய கௌரவம் என்றே கருதுகிறேன்” என்ற சதீஷ், தனது பீல்டிங் பற்றி கூறும்போது, “அணியில் ஓரிரு ஃபீல்டர்கள் பாய்ந்து பந்துகளைப் பிடிக்கும்போது மற்றவர்களுக்கும் உத்வேகம் பிறக்கும். இது அணியினரிடத்தில் ஒருமித்த உணர்வை ஏற்படுத்தும்.
இவ்வாறு கூறும் சதீஷ் தனக்கு பிடித்த கேப்டன் சவுரவ் கங்குலி என்கிறார். "கங்குலியின் அணுகுமுறை எனக்கு ஆச்சரியமளிக்கும் ஒன்று. பல வேளைகளில் யாரும் எதிர்பார்க்காத தைரியமான முடிவுகளை எடுப்பார்” என்றார்.
மும்பை இந்தியன்ஸில் சச்சினுடன் விளையாடிய அனுபவம் பற்றிக் கூறும்போது, “சச்சினின் ஒழுக்கம், கவனம் மற்றும் கடமை தவறாத நேர்மை ஆகியவற்றைக் கண்டு மிகவும் வியந்து போயுள்ளேன்” என்றார்.
ராஜகோபாலன் சதீஷ் என்ற இந்த 33 வயது வீரர் திருச்சியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
16 mins ago
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago